வியாழன், 20 நவம்பர், 2014

அன்பழகன் : சீரமைப்பு குழு அறிக்கையை நிறைவேற்றினால்தான் கட்சியை காப்பாற்ற முடியும்!

சீரமைப்பு குழு கொடுத்த அறிக்கையை, உடனடியாக நிறைவேற்றினால் தான், கட்சியை காப்பாற்ற முடியும்; அதனால், அதை விரைந்து செய்ய வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் கூறியதாக, தகவல் வெளியாகி இருக்கிறது. சீரமைப்பு குழு:லோக்சபா தேர்தலில், தி.மு.க., படுதோல்வி அடைந்ததும், கட்சியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து அறிவதற்காக, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட, ஆறு பேர் அடங்கிய, சீரமைப்பு குழு ஏற்படுத்தப்பட்டு, அறிக்கை கோரப்பட்டது.அந்தக் குழு, பல்வேறு நிலைகளிலும் கருத்துக்களை திரட்டி, தோல்விக்கான காரணம் குறித்தும், கட்சியில் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தலைமைக்கு அறிக்கை கொடுத்தது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது போல, கட்சியின் மாவட்ட நிர்வாகங்களை பிரிப்பது என, முடிவெடுக்கப்பட்டது. 35 மாவட்டங்களாக இருந்த, தி.மு.க., அமைப்பு நிர்வாகம், 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டதைத் தவிர, பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கட்சி செயல்பாடுகள் மீது, கடும் அதிருப்தி அடைந்திருக்கும் பொதுச் செயலர் அன்பழகன், கருணாநிதியை சந்தித்து தன் குமுறலை வெளிப்படுத்தியிருப்பதாக, தகவல் பரவி, அறிவாலய வட்டாரத்தை பரபரப்பாக்கி இருக்கிறது. எந்தவித கொள்கைபிடிப்பும் இல்லாத வெறும் கட்சி மாறிகளும் வியாபாரிகளும்   சுயமரியாதை பகுத்தறிவு என்ற வார்த்தைகளே தெரியாத  பலர் தற்போது குறுநில மன்னர்கள் ஆகிவிட்டனர்.
இது தொடர்பாக, கட்சி வட்டாரங்களில் கூறியதாவது:
ஏற்கனவே நடந்த சட்டசபைத் தேர்தல்கள் போல், 2016 தேர்தல் இருக்காது. 96ல் ரஜினி ஆதரிக்க, த.மா.கா., - தி.மு.க., கூட்டணி இருந்தது. ஐந்தாண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து, ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. இதனால், தி.மு.க., - த.மா.கா., கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதேநேரம், அ.தி.மு.க., படுதோல்வி அடைந்தது. நான்கு பேர் மட்டும் எம்.எல்.ஏ., ஆனார்கள்.2006ல், நிலைமை கிட்டதட்ட அதேதான். ஆனால், ஜெயலலிதா மீதான எதிர்ப்பு அந்தளவுக்கு இல்லை. அதனால், 66 எம்.எல்.ஏ.,க்களை அ.தி.மு.க., பெற்றது. தி.மு.க., வெற்றி அடைந்தும், மைனாரிட்டி அரசமைக்க வேண்டியதானது.ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்று வந்ததால், மக்கள் மத்தியில் அவரது இமேஜில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும், ஜெயலலிதா எதிர்ப்பு ஓட்டுகளை பெறும் அளவுக்கு, தி.மு.க., இமேஜ் இல்லை. தி.மு.க.,வின் மாவட்ட செயலர்களாக இருப்பவர்கள் பலரும், பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருக்கின்றனர். அவர்கள் மாற்றப்படவே இல்லை. அவர்களுக்கோ அல்லது அவர்களது ஆதரவாளர்களுக்கோ தான், தேர்தலில் 'சீட்' வழங்கப்படுகிறது. இதனால், தி.மு.க.,வுக்கு மக்கள் ஓட்டளிப்பர் என, சொல்ல முடியாது..அதனால், தி.மு.க., வில் அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்து, குறுநில மன்னர்களாக வலம் வரும் மா.செ.,க்களை மாற்றி, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.அதேபோல், இளைஞர்களுக்கே, தேர்தலிலும் வாய்ப்பளிக்க வேண்டும். இல்லையென்றால் தி.மு.க., வுக்கு தோல்வி தான் மிஞ்சும். அதன்பின், கட்சியை தூக்கி நிறுத்துவது கஷ்டம்.இப்படி நிறைய விஷயங்களை, வேதனையோடு, அன்பழகன் எடுத்து சொல்ல, பதில் எதுவும் பேசாமல், கருணாநிதி கேட்டுக் கொண்டதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.இதனால், விரைவில் கட்சியில் அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.

- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக