செவ்வாய், 14 அக்டோபர், 2014

வாய் பிளக்க வைத்த ஜெயா Flashback ! சுதாகரன் திருமணம்! ( பகுதி- 1) நான் சொல்கிறேன் நீ செய் !

எப்படியெல்லாம் இந்தத் திருமணத்துக்கான ஏற்பாடுகள் அமைய வேண்டும்!’ என்று அமைச்சர்களிடம் தன் விருப்பத்தை ஜெயலலிதா  விவரிக்க...விவரிக்க வாயடைத்துப் போனார்கள் மந்திரிகள்!  அதற்கு பதிலளித்த முதல்வர் : ஏன்.. யார் என்ன சொல்லிவிட முடியும்! நான் சொல்கிற அளவுக்கு உங்களால் செய்ய முடியுமா என்பதுதான் பேச்சு!
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு தீபாவளி பண்டிகைக்குள் ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா என்பதுதான் தற்போதைய சூடான விவாதம். 18 ஆண்டுகளாக ஆமைநடை போட்ட சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27ஆம் தேதியன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா. நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் வழங்கி, குற்றவாளி அதை செலுத்தத் தவறும்படசத்தில் கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை பெற நேரிடும் என அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறார் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா. இந்த வழக்கில் தன் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு ஜெயலலிதா நடத்திய தடபுடலான ஆடம்பர திருமணமும் முக்கிய ஆதாரமாக வைக்கப்பட்டிருந்தது. 1995-ல் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தமிழர்கள் வாய்பிளக்கும் வகையில் தன் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு திருமணம் என்னும் திருவிழாவை நடத்திக் காட்டினார். அப்படி ஒரு பிரம்மாண்டம். 19 வருடங்களுக்கு முன்பு (8.9.95) நடைபெற்ற சுதாகரனின் பிரமாண்ட திருமணத்தை தற்போதைய தலைமுறையினர் கண்டிப்பாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்காக சின்ன ஃப்ளாஷ்பேக்.


செப்டம்பர் 10, 1995 ஜூனியர் விகடன் இதழில் இருந்து...

‘‘ஒரு முதல்வரின் மகனுக்குத் திருமணம் எப்படி நடக்குமோ அப்படித்தான் இந்தத் திருமணமும் நடக்கும். அதுபற்றி யாரும் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை!’’ - தனது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் பற்றி பத்திரிகைகள் எழுதத் துவங்கியதுமே பொங்கியெழுந்து முதல்வர் ஜெயலலிதா விட்ட அறிக்கை இது!

‘எப்படியெல்லாம் இந்தத் திருமணத்துக்கான ஏற்பாடுகள் அமைய வேண்டும்!’ என்று அமைச்சர்களிடம் தன் விருப்பத்தை முதல்வர் விவரிக்க...விவரிக்க வாயடைத்துப் போனார்கள் மந்திரிகள்!

‘கற்பனைக்கும் எட்டாத ஆடம்பரத்துடன் இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா’ என்று திகைப்பு ஒருபுறம் இருக்க...‘அந்த அளவுக்குத் தேவையா’ என்ற தயக்கமான கேள்வியைத் தட்டுத் தடுமாறி ஓர் அமைச்சர் எழுப்பினாராம். ‘‘ஏன்.. யார் என்ன சொல்லிவிட முடியும்! நான் சொல்கிற அளவுக்கு உங்களால் செய்ய முடியுமா என்பதுதான் பேச்சு! இது திருமணமே அல்ல... கட்சியின் மாபெரும் மாநாடு என்று நினைத்துக்கொண்டு செயல்படுங்கள்!’’ என்றாராம் முதல்வர்.

அவ்வளவுதான்!

மின்கம்பங்களில் கரண்ட் எடுப்பது.. ரோடு முழுக்கப் பள்ளம் தோண்டி அலங்கார வளைவு அமைப்பது, நிதி வசூல், காவல் துறை குவிப்பு என்று புகுந்து விளையாடத் துவங்கினார்கள் அமைச்சர்கள்!

நான்காம் தேதி இரவு மணி பதினொன்றரை! வழக்கமான அணிவகுப்பு ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல், முன்னும் பின்னும் ஓரிரு கார்கள் தொடர போயஸ் தோட்டத்தில் இருந்து கிளம்பினார் முதல்வர். அவருடன் தோழி சசிகலா இல்லை!
அடையாறு சிக்னல் வரை சென்று அங்கிருந்து கடற்கரையில் கண்ணகி சிலை வரை அதிவேகமாக ஒரு முறை சென்றது முதல்வரின் கார்! வரிசையாகச் செய்யப்பட்டிருந்த வண்ண வண்ண சீரியல் செட் அலங்காரங்கள், அமைச்சர்களும் கட்சிப் பிரமுகர்களும் வைத்திருந்த கட் - அவுட்கள், சாலை நெடுக அமைந்திருந்த அலங்கார வரவேற்பு மேடைகள் ஆகியவற்றைப் பார்த்து திருப்தியடைந்தார் முதல்வர்.

அடுத்து, திருமணம் நடக்கும் எம்.ஆர்.சி. நகருக்கு விரைந்தார். வழக்கமான வேட்டி, சட்டை, தோள் துண்டு இல்லாமல் அத்தனை அமைச்சர்களும் பாண்ட் அணிந்து மிடுக்குடன் காத்திருந்தது வித்தியாசமான காட்சி! அதிலும் மூத்த அமைச்சர் எஸ்.டி.எஸ். லூஸான வெள்ளைச் சட்டையும் க்ரே கலர் பேன்ட்டும் அணிந்து ‘துறுதுறு’ப்புடன் நின்ற காட்சியைப் பார்க்க சக அமைச்சர்களுக்கேகூட ஜாலியாகத்தான் இருந்தது!

நாவலர், இந்திரகுமாரி, மதுசூதனன் தவிர மற்ற அமைச்சர்கள் எல்லாம் அங்கிருந்தனர்.

முதல்வரின் கார் வந்ததும் அதன் பின்னே ஓடித் திருமணம் நடக்கப் போகும் மாபெரும் மைதானத்துக்குள் சென்றார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்துத்தான் முதல்வர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். உள்ளே என்ன நடந்தது?

அமைச்சர் ஒருவரின் உதவியாளரும், சில போலீஸ் அதிகாரிகளும் நமக்குச் சொன்ன தகவல் திகைப்பை உண்டாக்கியது!

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளிப் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி ஐயர் உள்ளே முதல்வருக்காக காத்திருந்தார். அவர் பெரிய மாந்திரீகர்!

முன்னாள் பிரதமர் சந்திரசேகர், கவர்னர் சென்னாரெட்டி ஆகியோர் பயபக்தியுடன் வணங்கும் திருவக்கரை வக்கிர காளியம்மன் கோயிலில் நாற்பத்தெட்டு நாட்கள் விசேஷ பூஜை நடந்ததாம். மாந்திரீக வார்த்தைகளும் குறிகள் போட்ட அகலமான தங்கத்தகடுகளை அந்தக் கோயிலில் வைத்து விசேஷ பூஜை செய்தார் ராமமூர்த்தி ஐயர். அவற்றைத்தான் திருமணப் பந்தலுக்குக் கொண்டுவந்திருந்தார்!

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், பிறர் பொறாமைப்படும் வண்ணமாக ஏதாவது நிகழ்ச்சி நடத்தும்போது, திருஷ்டிபடாமல் இருக்க சில பரிகாரங்கள் செய்வதுண்டாம்! அதில் மிக மிக ‘காஸ்ட்லி’யான ஒரு பரிகாரத்தைச் செய்யத்தான் அந்த மாந்திரீகர் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

திருவக்கரை கோயிலில் வைத்து மந்திரிக்கப்பட்ட தங்கத் தகடுகளை, மணவிழாப் பந்தலின் எட்டுத் திக்குகளிலும் புதைத்தார்கள். அத்துடன் வைர வைடூரியன் உட்பட நவமணிகளையும் போட்டுப் புதைத்துச் சாணத்தால் மெழுகியிருக்கிறார்கள்!

கூடவே, ராஜ கம்பீரமாக மிகப்பெரிய தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ள மணமேடையிலும் ஒவ்வொரு அடி இடைவெளிட்டு மந்திர வார்த்தைகள் பொறித்த தங்கத் தகடுகள் புதைக்கப்பட்டதாம்!
இந்தியா முழுவதும் இருந்து வி.ஐ.பி-க்கள் முதல் சாதாரண கட்சித் தொண்டர் வரை வரப்போகிற இந்தத் திருமணத்தில் யாராவது ஏதாவது ஆபத்து உண்டாக்கிவிடக்கூடும் என்ற கவலை இருக்கிறது! அப்படி அபாயம் உண்டாக்க வருபவரின் மனத்தை மாற்றி, எதிர்ப்புக் குணத்தைப் போக்கி திருப்பியனுப்பிவிடக்கூடிய ‘வசிய சக்தி’ இந்தத் தகடுகளுக்கு இருப்பதாக மேலிடம் வரை நம்புகிறார்கள்!

மந்திர வார்த்தைகள் பொறித்த தகடுகள் புதைக்கப்படுவதை முதல்வர் உட்பட அமைச்சர்கள் பயபக்தியுடன் பார்த்துக்கொண்டிருந்தனராம்! எல்லாம் முடிந்து திருப்தியுடன் முதல்வர் கிளம்பிப் போன பிறகு, மூத்த அமைச்சர் எஸ்.டி.எஸ் அடித்த கமென்ட்தான் மற்றவர்களைத் திகைப்படைய வைத்தது! ‘‘மற்ற அரசியல்வாதிகள் எல்லாம் எந்தப் பிரச்னையும் அரசியல் ரீதியாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால், நம்ம அம்மா எதையும் மாந்திரீக ரீதியாக அணுகறாங்க. அதான் வெற்றிமேல் வெற்றி கிடைக்குது!’’ என்றார் எஸ்.டி.எஸ்!

போலீஸ் படையையும் முதல்வர் நம்பத்தான் செய்கிறார். திருமணம் நடக்கும் இடம் கடலோரம் என்பதால் கடல் வழியாகத் சந்தேகத்துக்கிடமான ஆட்கள் ஊடுருவி விடக்கூடாது என்பதில் உஷாராக இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான பூம்புகார் கப்பல் நிறுவனத்தின் கப்பலில் ஏறி, போலீஸ் கடலில் சுற்றி ரோந்து வர ஆரம்பித்துவிட்டது!

இது தவிர, பந்தலை ஒட்டியுள்ள பகுதியில் கடலோரப் பாதுகாப்புப் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களில் இருந்தும் படை படையாக வேன்களில் வந்து குவிந்திருக்கும் போலீஸாருக்கென மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே சென்னை நகரின் பல திருமண மண்டபங்கள் ஒழித்துத் தயார் செய்யப்பட்டுவிட்டன!

திருமணம் நடக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான பந்தல்களில் உள்புறமிருந்து பார்த்தால் ஓலையே தெரியாது! பல லட்ச ரூபாய் செலவில் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் போட்டு அலங்கார வேலைகள் செய்யப்பட்டுள்ளன.
மணமேடை ஒரு அரண்மனையின் ராஜதர்பார் போலவே அமைக்கப்பட்டிருக்கிறது. வெளிப்புறம் இருந்து பார்த்தால் ‘கண்’பட்டுவிடும் என்பதால் அதற்குத் தனியாக ஓர் ஓலைத்தடுப்புப் போட்டு மறைத்திருக்கிறார்கள். திருமணத்தன்று ஓலைத்தடுப்பு பிரிக்கப்படும்போது, அந்த மணமேடையின் வெளிப்புறம் பதிக்கப்பட்டுள்ள விலைமதிப்புள்ள கற்களும், அலங்கார அமைப்பும் அனைவரையும் வாய்பிளக்க வைக்கப் போகிறது!

திருமண வளாகத்துக்கு உள்ளே மூன்று விதமான பங்களாக்கள் அசுரவேகத்தில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன!

ஒன்று - முதல்வர் தங்கியிருப்பதற்கான (சகல வசதிகளும் கொண்ட) ஏ.ஸி. மாளிகை! இன்னொன்று சசிகலாவின் மிக நெருங்கிய உறவினர்கள் தங்குவதற்கு! மூன்றாவது, சிவாஜி குடும்பத்தினருக்கு! இந்த மூன்று மாளிகைகளையும் இப்போதே போலீஸ் சூழ்ந்து நிற்கிறது! கடுமையான பாதுகாப்பு!

எம்.ஆர்.சி.நகர்ப் பகுதியில் உள்ள பல வீடுகளுக்குள் கடந்த திங்கட்கிழமை போலீஸும் முக்கிய அதிகாரிகளும் புகுந்தனர். ‘‘நீங்களெல்லாம் வெளியேறிவிடுங்கள்! திருமணத்துக்கு முன்தினமும், திருமண தினத்தன்றும் இந்த ஏரியவுக்குள் லட்ச லட்சமாக ஆட்கள் ஆக்கிரமித்துவிடுவார்கள். அப்போது உங்களால் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாது. எனவே, நீங்களெல்லாம், உங்களுக்கு விருப்பப்படும் ஓட்டல்களுக்குப் போய்க் குடும்பத்தோடு தங்கிக் கொள்ளுங்கள். பிறகு ஓட்டல் ‘பில்’லைக் கொடுத்தால் பணத்தைக் கொடுத்துவிடுகிறோம்!’’ என்றார்கள்.

எதிர்த்துப் பேசத் திராணியற்று மூன்று தெருக்களில் வசித்த குடும்பங்கள் வீடுகளைப் பூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டன. ‘‘ஓட்டல் பில்’’லை யாரிடம் கொடுத்து எப்படிப் பணம் வாங்குவது? அது நடக்காத காரியம் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்!’’ என்று புலம்பியபடியேதான் கிளம்பினர் அவர்கள்.

வேறு பலர் வீடுகளில் நாய் வளர்க்கிறார்கள். அதை எந்த ஓட்டலில் தங்க அனுமதிப்பார்கள். அதேபோல் இடம்பெயர முடியாமல் உள்ள பல நோயாளிகளும் அங்குள்ள சில வீடுகளில் உள்ளனர். அந்தக் குடும்பங்கள் வீட்டை காலி செய்ய முடியாது என்று சொன்னதால், பலத்த மிரட்டலுக்கு ஆளாகியுள்ளனர்! இவர்களுக்கெல்லாம் போலீஸ் அடையாள அட்டை அளித்துள்ளது. அதைக் காட்டினால்தான் தெருவை விட்டுப்போக முடியும் திரும்ப முடியும். அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய வை.கோ. கட்சிப் பிரமுகருமான அழகு. திருநாவுக்கரசு வீட்டுக்கும் அடையாள அட்டை தரப்பட்டுள்ளது!

திருமணத்துக்கு வருபவர்கள் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி குடும்பத்துக்குச் சொந்தமான செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்! வருகிற 11 ஆம் தேதியன்று அங்கு கால்வருடப் பரீட்சை! ஆயிரக்கணக்கில் பந்தல் அமைப்பாளர்களும் பொதுப் பணித்துறை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் போலீஸும் அந்தப் பகுதியைச் சூழ்ந்துவிட்டதால் கடந்த ஒன்றாம் தேதி முதல் செயல்பட முடியாமல் விடுமுறையில்தான் உள்ளது பள்ளி!

பாடங்களைச் சரிவர நடத்தி முடிக்காததால் பரீட்சை எப்படி எழுதப் போகிறோம் என்று புரியாமல் தவித்தபடி உள்ளனர் குழந்தைகள்! வி.ஐ.பி.க்கள் உட்காரும் இடம் என தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் இடைஞ்சலாக இருந்ததால் கிட்டத்தட்ட நாற்பது மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன!

தனது வளர்ப்பு மகன் திருமணத்துக்கு வரும் வெளி மாநில வி.ஐ.பி.க்கள் எந்த சிரமும் இன்றி, குழப்பம் இன்றித் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சென்று அமர வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம்!

இந்தப் பிரச்னையை அழகாகத் தீர்த்து வைக்க முன்வந்தது கல்வித் துறை! தமிழகத்தின் முக்கியமான சில கல்லூரிகளுக்கு அவசரச் செய்தி சென்றது! ஒவ்வொரு கல்லூரியும் தங்களிடம் பயிலும் மிக அழகான பத்து மாணவிகளைத் தேர்ந்தெடுத்து சென்னை முன்கூட்டி அனுப்புகின்றன! மணமகன் வீட்டுச் செலவிலேயே விலை உயர்ந்த பட்டுச் சேலை ஜாக்கெட் தைத்து அளிக்கிறார்கள்! இந்த மாணவிகள்தான் வரவேற்பு கமிட்டி! புன்னகைத்த முகத்துடன் வி.ஐ.பி-க்களை வரவேற்று அழைத்துச் சென்று அவரவர் இடங்களில் அமர்த்த வேண்டும்! திருமணம் முடிந்த பிறகு தலைக்குப் பத்தாயிரம் ரூபாய் இந்த மாணவிகளுக்கு அளிக்கப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்!

ஆறு மற்றும் ஏழாம் தேதிகளில் சென்னை நகரின் பியூட்டி பார்லர்கள் (அழகுநிலையங்கள்) பெரும்பாலும் புக்’ செய்யப்பட்டுவிட்டன. சசிகலா குடும்பத்துப் பெண்களின் விசேஷ அலங்காரத்துக்காக?

தனது திருமண நிகழ்ச்சி பற்றி அநாவசியமான விமரிசனங்கள் பத்திரிகைகளில் வருவதை வளர்ப்பு மகன் சுதாகர் விரும்பவில்லையாம். இதனால் திருமணத்துக்கு நிருபர்கள் வர அனுமதியில்லை! பத்திரிகை புகைப்படக்காரர்களுக்கு நிச்சயம் அனுமதியில்லை! ஆளுங்கட்சிக்கு வேண்டிய மிகச் சில பத்திர்கை ஆசிரியர்கள் மற்றும் சில இந்ருபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது!
என்.டி.ஆர்., தேவகௌடா, லல்லு பிரசாத் யாதவ், பைரான்சிங் ஷெகாவத், பிஜுபட்நாயக் ஆகியோர் முதல்வர் எதிர்பார்க்கும் முக்கிய அரசியல் வி.ஐ.பி-க்கள்!

இத்தனை திருமண ஆர்ப்பாட்டங்களுக்கும் இடையில் மிகுந்த கவலையுடன் இருப்பவர்கள் மூன்று அமைச்சர்கள்! கண்ணப்பன், எஸ்.டி.எஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகிய மூவர்தான் இவர்கள்!

‘அன்பளிப்புகளைத் தவிர்க்கவும்’ என்று திருமண அழைப்பிதழில் அச்சிட்டிருந்தாலும் அதற்கு நேர் எதிரான ‘பாலிஸி’தான் கடைப்பிடிக்கப்படுகிறது. திருமணத்துக்குத் தேதி குறிக்கப்பட்ட தினத்திலிருந்தே பணமாகவும் பொருளகவும் வசூல் தொடங்கிவிட்டது அனைவரும் அறிந்த சேதி!

ஆனால், திருமணத்தன்று வருகிற கட்சி முக்கியஸ்தர்களிடமும் தொழிலதிபர்களிடமும் கண்டிப்புடன் திருமணப் பரிசுகளை வாங்க வேண்டியது மேற்சொன்ன மூன்று அமைச்சர்களின் பணிதான்! பரிசுப் பொருட்கள் மற்றும் செக், டிராஃப்ட், சூட்கேஸ் எதுவானாலும் திருமண வளாகத்துக்குக் கொண்டு வரக்கூடாது என்பது முன்கூட்டியே சொல்லப்பட்டுவிட்டது! அதை இந்த மூன்று அமைச்சர்களின் வீடுகளுக்கே கொண்டுசென்று கொடுத்துவிட வேண்டும்! லட்சம், கோடி எல்லாம் சாதாரணமாக ‘டீல்’ செய்யும் இந்த அமைச்சர்களே மிரண்டுபோயிருக்கிறார்களாம்.
பரிசுப் பொருட்களைப் பெற்று, சரியாக கணக்கு சொல்லி அவற்றைப் பத்திரமாக ஒப்படைக்கும் வரை இவர்களுக்கு நிம்மதி கிடையாது! பல கோடி செலவு செய்து நடக்கும் இந்தத் திருமணத்துக்கு என்னென்ன பரிசுப் பொருட்கள் வரப்போகிறது என்று மத்திய அரசு அதிகாரிகளும் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பதுதான் அமைச்சர்களின் கவலைக்கு முக்கிய காரணம்!

இத்தனைக்கும் மத்தியில் தேர்ந்த ஜோதிடர்கள் சொன்ன ஒரு கருத்து திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து சம்பந்தப்பட்டவர்களை வாட்டுகிறது! ஜோதிடர்கள் சொன்னது -‘‘திருமணத்துக்குக் குறித்த தேதி சரியில்லை! செப்டம்பர் ஏழாம் தேதி சனி- செவ்வாயைப் பார்க்கிறான். அதுவும் வக்கிரப் பார்வை! பெரும் தீவிபத்துகளும் ரயில் விபத்துகளும் நடந்தது இந்தக் கிரக நிலையில்தான்!’’

இன்னொரு பக்கம், இந்தியாவிலேயே இதுவரை நடக்காத இந்தப் பிரமாண்ட திருமணத்தல் மணமகளுக்குத் திருஷ்டிபடுமோ என்ற கவலையும் இருக்கிறது. திருமணம் முடிந்த கையோடு, அந்தப் பகுதியில் ஏதாவது பந்தலை வலியக் கொளுத்தி திருஷ்டிகழிக்கலாமா எனவும் யோசிக்கப்படுகிறது!

படங்கள்: சு.குமரேசன்  vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக