செவ்வாய், 14 அக்டோபர், 2014

அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுவினர் நடத்திய போராட்டங்களின்போது சேதப்படுத்தப்பட்ட அரசுச் சொத்துக்களுக்கு இழப்பீடு வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒரு மாதத்திற்குள் இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.  இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, பெங்களூர் தனிக்கோர்ட் கடந்த மாதம் 27ந் தேதி 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு வெளியானதும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களிலும், வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர். 234 அரசு பஸ்களை சேதப்படுத்தினர். இதில் 2 பஸ்களுக்கு தீ வைத்து முற்றிலும் எரித்து விட்டனர். இது தவிர ஏராளமான பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு பா.ம.க.வினர் இதுபோல் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டபோது, தமிழக அரசு பொதுச் சொத்துக்களுக்கு உண்டான சேதங்களுக்குரிய தொகையை அந்த கட்சியிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதுபோல, அரசு சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்குரிய தொகையை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோரிடம் இருந்து சேதப்படுத்திய அ.தி.மு.க.விடம் இருந்து உரிய தொகையை வசூலிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ந் தேதி மனு கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் விசாரித்தது. விசாரணைக்குப் பின்னர் ஒரு மாதத்திற்குள் மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக