புதன், 22 அக்டோபர், 2014

எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் மரணம்: கம்யூனிஸ்டு தலைவர்கள் இரங்கல்

சென்னை, பிரபல எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு கம்யூனிஸ்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ராஜம்கிருஷ்ணன் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் ராஜம்கிருஷ்ணன். பிரபல எழுத்தாளரான இவர் 40-க்கும் மேற்பட்ட நாவல் களை எழுதியுள்ளார். கரிப்புமணிகள், வேருக்கு நீர், குறிஞ்சித் தேன் உள்ளிட்ட நாவல்கள் அவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும். 100-க்கும் மேற்பட்ட சிறுகதை களையும் எழுதி இருக்கிறார். உடல்தானம் 90 வயதான ராஜம்கிருஷ்ணன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். சாகித்ய அகாடமி, சரஸ்வதி சம்மான் உள்ளிட்ட விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இறந்தபிறகு தனது உடலை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனைக்கே தானம் அளிக்குமாறு தெரிவித்து இருந்தார். அதன்படி அவரது உடல் ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது.


கம்யூனிஸ்டுகள் இரங்கல்

ராஜம்கிருஷ்ணன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். தா.பாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

முற்போக்கு எழுத்துலகின் முன்னணி பெண் படைப்பாளரான ராஜம் கிருஷ்ணன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

எழுத்துலகத்தோடு மட்டுமல்லாது, சமூக செயல்பாடுகள் பலவற்றிலும் நேரடியாக பங்கேற்று வந்தார். எந்த கருத்தானாலும் ஆழமாக பதிவு செய்யும் இவர், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தில் மாநில தலைவராகப் பொறுப்பேற்று செயல்பட்டுள்ளார். பெண்களுக்கான இயக்கங்கள் பலவற்றிலும் செயல்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நெருங்கிய நண்பரான ராஜம் கிருஷ்ணனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நல்லக்கண்ணு அஞ்சலி

மறைந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் உடலுக்கு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் முத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மதுரவாயல் பகுதிச் செயலாளர் லெனின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். dailythanthi.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக