செவ்வாய், 7 அக்டோபர், 2014

அதிமுக கும்பலின் அராஜகத்தை எதிர்த்து நிற்குமாறு ம க இ கழகம் வேண்டுகோள் !

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அதிகார முறைகேடு, ஊழல், சொத்துக் குவிப்பு ஆகிய கிரிமினல் குற்றங்களை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் குற்றங்கள் ஐயத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜெயலலிதா, அவரது கூட்டாளிகள் சசிகலா, இளவரசன், சுதாகரன் ஆகிய நால்வருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்துச் சிறையிலடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிழைப்புவாத அதிமுக பொறுக்கிக் கும்பல் பெரும் வன்முறையில் இறங்கியுள்ளது. மூன்று அரசுப் பேருந்துகள் எரிக்கப்பட்டு, பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அரசு அதிகாரத்தையும், போலீசையும் பயன்படுத்தி வணிகர்கள், தொழிலாளிகள், மீனவர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் மிரட்டி வேலை நிறுத்தம், கடையடைப்பு, உண்ணாவிரதம், மனித சங்கிலி என கட்டாயமாகப் போராட்டத்தில் ஈடுபட வைத்து இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கிறது.

ஜெயலலிதா குற்றவாளி என்பது மட்டுமல்ல, அவரால் தலைமை தாங்கப்படும் அதிமுக என்ற கட்சியே ஒரு சமூக விரோத கிரிமினல் கும்பல் என்பது தற்போது பளிச்சென்று நிரூபணமாகி வருகிறது.
அதிமுக கும்பலின் அராஜகச் செயல்பாடுகளைக் கண்டித்தும், அதனை எதிர்த்து நிற்குமாறு மக்களை அறைகூவியும்,  மக்கள் கலை இலக்கியக் கழகம், வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் சுவரொட்டி இயக்கம் மேற்கொண்டன. அதிமுக கும்பலின் அராஜகத்தைத் துணிவுடன் அம்பலப்படுத்திய எமது சுவரொட்டிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
ஆனால் தமிழகம் முழுவதும் கடந்த பத்து நாட்களாக அதிமுகவினர் நடத்தி வரும் சட்டவிரோத, ஜனநாயக விரோத கிரிமினல் நடவடிக்கைகளுக்கு உடனிருந்து ஒத்துழைப்பும் பாதுகாப்பும் கொடுத்து வரும் காவல்துறை,
இச்சுவரொட்டிகளை ஒட்டியதற்காக உசிலையிலும், மதுரையிலும் வழக்கு போட்டதோடல்லாமல் சிவகங்கையிலும், பரமக்குடியிலும் எமது தோழர்களைக் கைதும் செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
சிவகங்கையில் கைது செய்யப்பட்டுள்ள பு.ஜ.தொ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் நாகராஜன், குருசாமி மயில்வாகனன், கணேசன், சுரேஷ் கண்ணன், பரமக்குடியில் கைது செய்யப்பட்டுள்ள தோழர் ஆனந்தன் ஆகியோரை உடனே விடுதலை செய்ய வேண்டும், எல்லா ஊர்களிலும் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
அச்சத்தைக் கைவிட்டு அதிமுக கும்பலின் அராஜகத்தை எதிர்த்து நிற்குமாறு மக்களை அறைகூவி அழைக்கிறோம்.
இவண்,
காளியப்பன்,
மாநில இணைப் பொதுச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக