ஞாயிறு, 26 அக்டோபர், 2014

வைரமுத்து : பகுத்தறிவு சுயமரியாதை கொள்கைகவாதி எஸ் .எஸ்.ராஜேந்திரன் !

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: "இலட்சிய நடிகரின் மறைவு திரையுலகத்துக்கும் மட்டுமல்ல; திராவிட இயக்கத்திற்கும் ஒரு பேரிழப்பு. மூத்த தலைமுறையின் கடைசிப் பெரும் நடிகர் சிவகங்கைச் சீமையில் மருதுபாண்டியர்கள் தூக்கிலேற்றப்பட்ட பிறகு மூன்றாவதாகத் தூக்கு மேடையேறும் முத்தழகு பாத்திரத்தில் தூக்கு மேடையில் நின்றுகொண்டு, ”மன்னர் இருவரை மரணம் அழைத்தது; இன்னும் ஒருவன் இருக்கிறேன் இங்கே”  என்று வெண்கலக் குரலெடுத்து முழங்குவார் எஸ்.எஸ்.ஆர்.
பகுத்தறிவுத் தத்துவத்திற்கு உட்பட்டுத்தான் பாத்திரங்களை ஏற்றுக்கொள்வேன் என்று இறுதிவரை உறுதியாக இருந்ததால்தான் அண்ணா இவரை ’இலட்சிய நடிகர்’ என்று உச்சிமேல் உவந்து மெச்சினார். திராவிட இயக்கத்தை வளர்த்த கலைஞர்களுள் எஸ்.எஸ்.ஆருக்குப் பெரும் பங்கு இருக்கிறது. அண்ணாவின் பொன்விழாவில் 50 பொற்காசுகளால் அண்ணாவுக்குப் பொன்னாபிஷேகம் செய்தவர். ’பூம்புகார்’ அவருக்கு வரலாறு தந்தது. ’சாரதா’ குணச்சித்திர நடிகர் என்ற கிரீடம் கொடுத்தது. ’கை கொடுத்த தெய்வம்’ சிவாஜிக்கு ஈடு கொடுக்கும் நடிகர் என்ற பீடு கொடுத்தது. என்னைவிட வசனத்தை அழகாக உச்சரிப்பவர் என்று சிவாஜியால் புகழப் பெற்றவர் எஸ்.எஸ்.ஆர். நடிகர் - இயக்குநர் - தயாரிப்பாளர் - வசனகர்த்தா - பாடலாசிரியர் - பாடகர் - வில்லிசைக் கலைஞர் என்ற பன்முகப் பரிமாணம் மிக்கவர்.
சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அவர் பேசிய பழைய வசனங்களையெல்லாம் நான் உச்சரித்துக் காட்டியபோது, படுக்கையில கிடந்தவர் எழுந்து உட்கார்ந்துவிட்டார். “படுப்பவர்களையே எழவைக்கும் வசனம் உங்களுடையது“ என்றேன். வாய்விட்டுச் சிரித்தார். அந்தச் சிரிப்பு இன்று காற்றில்.
திரையுலக நடிகர்களுக்கு உடல் மரணம்தான் உண்டு; உருவ மரணம் இல்லை. மரணத்திற்குப் பிறகும் அவர்கள் நம்மோடு வாழ்கிறார்கள். உடல் அழியலாம். அவர்களின் பிம்பம் - அசைவு - குரல் மூன்றும் அழிவதில்லை. இலட்சிய நடிகரின் புகழ் நீண்ட காலம் நிலைத்திருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் அத்தனை உறவுகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக