வெள்ளி, 10 அக்டோபர், 2014

43 மாணவர்கள் கொன்று புதைக்கப்பட்டனர் ? மெக்சிகோவில் போலீஸ் வெறியாட்டம் ?

ரியோடி ஜெனீரோ, அக் 10– வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த மாதம் (செப்டம்பர்) ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்கள் குயர்ரோ மாகாணத்தில் உள்ள இகுவாலா நகரில் போராட்டம் நடத்தினார்கள். அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதலும் அதை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது.
அப்போது மாணவர்கள் சென்ற பஸ் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பின்னர் 43 மாணவர்களை காணவில்லை. அவர்களை போலீசார் கடத்தி சென்று கொலை செய்து எரித்து புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் 6 புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் எரிந்த நிலையில் 23 உடல்கள் இருந்தன. அவர்கள் யார் என்று இன்னும் அடையாளம் கண்டு பிடிக்கப்படவில்லை.

இதற்கிடையே, மெக்சிகோவில் போலீசுக்கு எதிராக போராட்டம் வலுத்துள்ள நிலையில் இந்த மர்மம் குறித்து கண்டறிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மேலும் 4 புதை குழிகள் கண்டு பிடிக்கப்பட்டன.
அவற்றிலும் எரிக்கப்பட்ட நிலையில் பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதில் எத்தனை பேர் உடல்கள் உள்ளன என்ற விவரம் தெரியவில்லை.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஏற்கனவே 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும் பாலானவர்கள் உள்ளூர் போலீஸ்காரர்கள் ஆவர்.
இச்சம்பவத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. இவர்களின் கட்டாய வசூலுக்கு மாணவர்கள் பணம் தர மறுத்ததால் அவர்கள் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக