டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, திமுக எம்.பி கனிமொழி, திமுக
தலைவர் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்டோருக்கு எதிராக அன்னிய செலாவணி மோசடி
குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.
ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்தபோது, சட்ட விரோதமான முறையில், ஷாகித்
பல்வாவின் டி.பி. நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு
2ஜி லைசென்ஸ் அளித்ததற்காக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இதற்காக திமுக நடத்தும் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடியை ஷாகித்
பல்வா லஞ்சமாக கொடுத்தார் என்பதும் குற்றச்சாட்டு.
ஆனால், இதை கடனாக வாங்கி வட்டியுடன் திருப்பிச் செலுத்திவிட்டோம் என்கிறது
கலைஞர் டிவி.
இந் நிலையில் இந்க ரூ. 200 கோடி பணம் கலைஞர் டிவிக்கு தரப்பட்டதில் அன்னிய
செலாவணி மோசடியும் நடந்துள்ளதாக அமலாக்கப் பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.
கலைஞர் டிவிக்கு தரப்பட்ட ரூ. 200 கோடி லஞ்சம் ஷாகித் பல்வாவுக்கு
சொந்தமான குசேகான் புரூட்ஸ், வெஜிடபிள்ஸ் நிறுவனம், சினியுக் பிலிம்ஸ்
நிறுவனம் மூலம் தரப்பட்டது என்று அமலாக்கப் பிரிவு கூறியுள்ளது.
அந்த குற்றப்பத்திரிகையில் 10 தனிநபர்கள், 9 நிறுவனங்களுக்கு எதிராக
குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக, ராசா, கனிமொழி, திமுக தலைவர்
கருணாநிதி மனைவி தயாளு அம்மாள், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஷாகித்
உஸ்மான் பல்வா வினோத் கோயங்கா உள்ளிட்டோர் பெயர்கள் உள்ளன.
இந்நிலையில் அமலாக்கப் பிரிவின் குற்றச்சாட்டை டெல்லி சிபிஐ நீதிமன்றம்
இன்று பதிவு செய்து கொண்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 120-பி (குற்றச்
சதி) பிரிவு, அன்னிய செலாவணி மோசடி தடுப்பு சட்டம் பிரிவு 4
உள்ளிட்டவற்றின்கீழ் இந்த குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இக்குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதால் தங்களை நிரபராதி என்று
அறிவிக்க வேண்டும் என்று குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் வேண்டிக்கொண்டதை
கோர்ட் ஏற்கவில்லை.
இந்த 2ஜி வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த வழக்கில் தயாளு அம்மாள் சாட்சியாகத்
தான் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், அமலாக்கப் பிரிவு அவரையும்
குற்றவாளியாக சேர்த்துள்ளது.
கலைஞர் டிவியில் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும், கனிமொழிக்கு 20
சதவீதமும், சரத் ரெட்டிக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளதால் தயாளு
அம்மாளையும் குற்றவாளியாக சேர்த்துள்ளதாக அமலாக்கப் பிரிவு கூறியுள்ளது.
ஆனால், தயாளு அம்மாள் கலைஞர் டிவியின் எந்த நிர்வாகக் குழுக் கூட்டத்திலும்
பங்கேற்றதில்லை, நிர்வாகரீதியில் எந்த முடிவுகளையும் எடுத்ததில்லை என்று
கலைஞர் டிவி தரப்பு கூறியுள்ளது.
இன்று தயாளு அம்மாள், கனிமொழி, ராசா தவிர ஸ்வான் டெலிகாம் நிறுவன
அதிபர்களான ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா, குசேகான் புரூட்ஸ்,
வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குனர்களான ஆஷிப் பல்வா, ராஜிவ் அகர்வால், சரத்
கபூர், சினியுக் நிறுவன அதிபரான கரீம் மொரானி, கலைஞர் தொலைக்காட்சியின்
நிர்வாகியான அமிர்தம் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு பதிவு
செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டைப் பதிவு செய்தவுடன் நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும்
குற்றத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா என்று கேட்க, அனைவருமே நிரபராதிகள் என
குற்றம் சாட்டப்பட்டோரின் வழக்கறிஞர்கள் கூறினர்.
tamil.oneindia.com/
tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக