திங்கள், 29 செப்டம்பர், 2014

தண்டிக்கப்பட்டவர்கள் வன்முறைகளில் ஈடுபடுவது எவ்வகை நியாயம்? கே.வீரமணி கேள்வி !

தண்டிக்கப்பட்டவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்
வன்முறைகளில் ஈடுபடுவது எவ்வகை நியாயம்?
காவல்துறை முன்னெச்சரிக்கையாக ஏன் நடந்து கொள்ளவில்லை?
தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பினைத் தொடர்ந்து, ஆளும் அதிகாரத்தில் உள்ள கட்சியினரே வன்முறைகளில் ஈடுபடுவது கண்டிக்கத் தக்கது; பொது அமைதியும் பொது மக்களுக்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு முதலமைச்சராக நேற்று (27.9.2014)  காலை வரை இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள்மீதும், அவரது தோழிகள், முன்னாள் வளர்ப்பு மகன் ஆகிய மூவர் மீதும், கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு (ஊழல் செய்ததாக) வழக்கின் தீர்ப்பு - கர்நாடக மாநில பெங்களூரு செஷன்ஸ்  நீதிமன்றத்தில் அதனுடைய நீதிபதி மைக்கேல் ஜான் குன்ஹா அவர்களால் வழங்கப் பட்டுள்ளது!

மாரத்தான் வழக்கு
18 ஆண்டுகள், 160 ‘வாய்தாக்கள், 259 அரசு சாட்சிகள் 99, தற்காப்பு - குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் சாட்சிகள் 1,066 ஆதாரத் தடயங்கள், 2,341 எக்சிபிட்ஸ் இவைகளைக் கொண்டு, சென்னையில் 8 ஆண்டுகளும், கர்நாடகத்திற்கு மாற்றப்பட்ட பின்பு அங்கே 10 ஆண்டுகள் தொடர்ந்த சொத்துக் குவிப்பு வழக்கு என்ற மாரத்தான் வழக்கு ஒரு வகையாக முடிவுக்கு வந்து, அதிர்ச்சி தரும் தீர்ப்பின்மூலம், முதல்அமைச்சரான ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றப் பதவி, முதல்வர் பதவி, 10 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிடும் தகுதி இழப்பு, 4 ஆண்டு கால சிறை, 100 கோடி  ரூபாய் அபராதம், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு; வழக்கில் தொடர்புடைய குவிக்கப்பட்ட சொத்துக்களின்  அட்டாச்மெண்ட் - இப்படி தண்டனைகளை ஊழல் ஒழிப்பு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், கிரிமினல் செக்ஷன்கள் ஆகியவற்றின்கீழ் அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் பெங்களூரு சிறைச் சாலைக்கு அனுப்பப்பட்டனர்.
இதன்மீது மேல் முறையீட்டினை கர்நாடக உயர்நீதி மன்றம், பிறகு தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்திலும் செய்ய தண்டிக்கப்பட்டோருக்கு உரிமையும், வாய்ப்பும் உண்டு என்பது சட்டப்படியான நிலைமையாகும்.
என்னென்ன விசித்திரங்கள்!
மாரத்தான் வழக்காக 18 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் விசித்திரங்களில் குறிப்பிட்டத்தக்கவை எவை என்றால்,
எண்ணற்ற வாய்தாக்கள் ஒருபுறம், மறுபுறம் காலதாமதக் கண்ணோட்டத்தில் வழக்கின் மேல் முறையீடு - உச்சநீதி மன்றம் வரையில் என்ற சட்டக் கண்ணாமூச்சும், அதைவிட இதுவரை கேள்விப்பட்டிராத, தன்னை விசாரிக்கும் நீதிபதியாக குறிப்பிட்டவரே தொடர, நீதிமன்றத்தின் மூலமே குற்றம் சாற்றப்பட்டவரே கோரிக்கை வைத்து, உச்சநீதிமன்றமும் அதை அனுமதித்ததும், அதை விட வியப்பும் வேடிக்கையும் கலந்த ஒன்று, - தனக்கு எதிராக வழக்கு நடத்தும் பிராசிக்யூட்டராக  குறிப்பிட்ட இன்னாரே தொடர வேண்டும், அவரை மாற்றக் கூடாது என்றும் உச்சநீதிமன்றத்திலேயே மனு போட்டு வெற்றி பெற்றதும் இதுவரை எந்த வழக்கிலும் காணாத புதுமை யிலும் புதுமை!
விலை மதிப்பில்லா நீதிபதி!
இவையெல்லாம் தாண்டி, இறுதியில் இப்படி ஒரு தீர்ப்பு - மயக்கமில்லா நீதிபதிகளும், விலை மதிப்பில்லாத கண்ணைக் கட்டிய நீதி தேவதையின் சரியான வார்ப்படம் போன்ற நீதிபதிகளும் நாட்டில் உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளார். நீதித்துறை என்ற ஜனநாயகத்தின் மூன்றாம் தூண் இன்னமும் பலமாக உள்ளது; அதே நேரத்தில் மக்களின் கடைசி நம்பிக்கை வீண் போக வில்லை என்பதையும் காட்டுவதாக, நாடே அதிசயத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ள வரலாற்றுத் தீர்ப்பாகவும் இத்தீர்ப்பு அமைந்துள்ளது.
1240 பக்கங்கள் எழுதப்பட்டுள்ள இத்தீர்ப்பில், இதுவரை வெளிவந்த செய்திப்படி, அந்நீதிபதி நடுநிலை தவறாமல் அதே நேரத்தில் ஜனநாயகத்தின் மாண்பினைக் காத்திடும் வண்ணம் தனது தீர்ப்பினை அளித்தார் என்றே கூற வேண்டும்;  சட்டத்தின் முன்னே அனைவரும் சமம் என்றும், அதிகாரத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் அளவுக்குமீறிய நாணயத்தோடு இருக்க வேண்டும் என்றும் பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடிய வகையிலும் நீதிபதி தனது தீர்ப்பை அளித்துள்ளது தெரிய வருகிறது.
ஏற்படக் கூடிய அரசியல் விளைவுகள்!
இதனால் ஏற்படக் கூடிய அரசியல் விளைவுகள் தமிழ்நாட்டில் உடனடியாகவும், தொலைநோக்குடனும் பல உள்ளன. முதலாவதாக, அம்மையார் வகித்த முதல் அமைச்சர் பதவிக்கு ஒருவர் அக்கட்சியிலிருந்து (அதிமுக வின் சட்டமன்ற உறுப்பினர்களால்) தேர்வாகி ஆட்சியை அமைத்திட வேண்டியது அவசர, அவசியக் கடமையாகும்.
ஜெயலலிதாவின் தலைமைதான் இன்னமும் அக்கட்சிக்கு உள்ளது. கட்டுப்பாடு உள்ள அவரது சட்ட மன்ற உறுப்பினர்கள் தலைமையின் நம்பிக்கைக்குரிய ஒருவரை இன்றோ, நாளையோ தேர்வு செய்து ஆட்சி அமைக்கக்கூடும்; அதில் எந்த சிக்கலும் இருக்காது - காரணம் பெரும்பான்மை உள்ளது அக்கட்சிக்கு.
கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள்
இந்நிலையில் நேற்று தண்டனை அறிவிக்கும் முன்பும் - குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டபோதும் - தமிழ் நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை வெறியாட் டங்கள், ரகளைகள், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு எவ் வளவு சீர்குலைந்து விட்டன என்பதை வெட்டச் வெளிச்சமாக்கியது.
செய்தியாளர்களின் பணி என்பது செய்தி சேகரித்து அளிப்பதே; அந்தக் கடமையைச் செய்யும் அவர்களைத் தாக்குவது, அப்பாவிப் பொது மக்கள்மீது கல்லெறிவது , பேருந்து எரிப்பு, பயணிகளுக்கு மிகப் பெரிய ஆபத் தல்லவா! பொதுச் சொத்து சேதம்  செய்யப்படுவதை யெல்லாம் காவல்துறையினர் வேடிக்கை பார்த்த நிலையிலேயே நடைபெற்று உள்ளது.
தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பியதே! கலைஞர் மற்றும் தலைவர்கள் வீடு, கட்சி அலுவலகங்கள் முன்பு ரகளைகளையெல்லாம் எப்படி காவல்துறை அனுமதித்தது?
காவல்துறை என்ன செய்திருக்க வேண்டும்?
இப்படி ஒரு முக்கிய தீர்ப்பு வருகின்ற நிலையில், தீர்ப்பு யாருக்குச் சார்பாக எதிராக - வந்தாலும், அதன் தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்த்து, போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டாமா? கொடி அணி வகுப்பு, கலவரங்களைத் தடுக்கும் காவல் படைப் பிரிவு - இவைகளைத் திட்டமிட்டு சட்டம், ஒழுங்கு காப்பாற்றப் பட்டு, பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்க வேண்டாமா? அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் தொடரும் நிலையில், அவமானம் அவர்களுக்கு அல்லவா? பொறுப்புணர்வு இருந்திருக்க வேண்டாமா?
இந்த நிலையில் ஆளுநர் அழைத்து கூட்டம் போட்டார் என்பது ஓரளவு ஆறுதல் என்றாலும், மக்கள் பாதிக்கப்படக் கூடாது; எதிர்க்கட்சி தலைவர்கள், ஊடகச் செய்தியாளர் களுக்கு போதிய பாதுகாப்பு உறுதி செய்தாக வேண்டும்.
தண்டிக்கப்பட்டவர்கள் சட்டப்படி மேல் முறையீட்டைச் செய்து தங்களுக்குப் பரிகாரம் தேடுவதுதான் ஜனநாயகத் தில் முறையே தவிர, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் (Free for all)   என்ற நிலையை உருவாக்கிடக் கூடாது!
அறிவுடைமையல்ல!
இப்படி எதிர் வன்முறை நடத்தினால்தான் தங்களுக்கு கட்சியில் எதிர் காலத்தில் பதவிகள் வாய்ப்பு ஏற்படும் என்ற மலிவு வித்தைகளில் இறங்கி தங்களைத் தாழ்த்தி, தங்கள் அரசுக்கும் நெருக்கடியை உருவாக்கிக் கொள்ளுவது அறிவுடைமையாகாது.
பொது மக்களின் கடமை!
நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கினால் அதனை எதிர்த்து ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சியினரே வன்முறையில் ஈடுபடுவது மிகவும் தவறான, ஆபத்தான முன்னுதாரணம் ஆகிவிடும். நாட்டில் அமைதி நிலவிட, பொதுச் சொத்துகள் காப்பாற்றப்பட, மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட, பொது மக்களும் விழிப்பாக இருந்து ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக