திங்கள், 29 செப்டம்பர், 2014

தீர்ப்பு : மக்களின் நம்பிக்கையை பெறும் ஆட்சியை நடத்த தவறிவிட்டார் ! நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா...

பெங்களூர்: நாட்டை வழிநடத்தி செல்லும் அதிகாரத்தை பெற்றுள்ளவர்கள் மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் ஆட்சி நடத்தினால் மட்டுமே உண்மையான ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். அதை ஜெயலலிதா தவறி விட்டதாக பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கல் டிகுன்ஹா தெரிவித்தார். ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. காலை 11 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசித்தார். அப்போது ஜெயலலிதாவை பார்த்து 1,200 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை வாசித்த அவர் கூறியதாவது: குற்றவாளிகள் மீதான குற்றத்தை உறுதி செய்து கூறியுள்ளதில், அரசு தரப்பில் உங்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளை பார்க்கும் போது, அனைத்தும் உண்மை என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் உள்ளன. உங்கள் மீது ஸி66 கோடியே 44 லட்சத்து, 73 ஆயிரத்து 573 ரூபாய் வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு அதற்கான ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தகுந்த சாட்சியங்கள் அடிப்படையில் குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டன.


அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து நிரபராதி என்று நிரூபிக்க தவறி விட்டதுடன், அதற்கான ஆவணங்களையும், சாட்சிகளையும் சமர்ப்பிக்கவில்லை. உங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஸி66.44 கோடி வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் ஸி9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 094 மட்டும் உங்கள் வருமானம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனடிப்டையில் பார்த்தால் ஒட்டு மொத்த தொகையில் உங்கள் வருமான தொகை போக மீதமுள்ள ஸி56 கோடியே 53 லட்சத்து 68 ஆயிரத்து 479 தொகைக்கான ஆவணங்களையும், சாட்சிகளையும் காட்டவில்லை. இது தொடர்பாக உங்கள் சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கம் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே உங்களை குற்றவாளி என்று இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது.
ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 13 (2), 13 (1) (இ) அடிப்படையில் உங்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான இந்த பிரிவின் கீழ் உங்களுக்கு 4 ஆண்டுகள் சாதாரண சிறை தண்டனையும், ஸி100 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும் இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி) பிரிவு 120 (பி)ன் கீழ் உங்கள் மீது கூறியுள்ள கூட்டு சதி தொடர்பான குற்றச்சாட்டுக்கும் உரிய ஆதாரங்கள் அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் 2, 3, 4வது குற்றவாளிகளுடன் இணைந்து நிறுவனங்களில் உங்கள் வருமானம் ஸி9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 094 போக மீதி தொகையை 32 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளீர்கள். இதை மறுத்து உங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ள வாதங்கள் திருப்திகரமாக இல்லை. எனவே ஐபிசி 120 (பி) பிரிவின் கீழ் உங்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. உங்களுடன் சேர்ந்து 2வது குற்றவாளியான சசிகலா, 3வது குற்றவாளியான சுதாகரன், 4வது குற்றவாளியான இளவரசி ஆகியோரும் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளதால், அவர்களுக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ஸி10 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.

பொது ஊழியர் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தொடர்பான ஒரு வழக்கில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் வழங்கிய தீர்ப்பில் பொது ஊழியர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கியுள்ளார். பெற்றோர் நல்லவராக இருந்தால் தான் பிள்ளை நல்லவனாக இருப்பான், ஆசிரியர் நேர்மையாக இருந்தால் தான் மாணவர் நல்லவனாக சிறந்தவனாக திகழ்வான், தொழிற்சங்க தலைவர் கடமை தவறாமல் செயல்பட்டால், தொழிலாளர்கள் சிறப்பாக இருப்பார்கள். அதுபோல் நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரத்தில் இருப்பவர்கள் நீதிக்கு பயந்தும், நேர்மையாகவும், கடமை உணர்வுடனும், விருப்பு, வெறுப்பு இல்லாமல், உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையில் தான் மக்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுக்கிறார்கள். ஆனால், ஐபிசி 109 பிரிவு படி நீங்கள் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளீர்கள்.

இந்த குற்றச்சாட்டும் அரசு தரப்பில் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொறுப்புள்ள பொது ஊழியர் இதுபோன்ற குற்றங்களை செய்வதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது. இதுபோன்ற குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை தான் தரப்பட வேண்டும். இருப்பினும் உங்களுக்கு 50 சதவீத தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதே பிரிவிலான குற்றச்சாட்டில் 2,3,4வது குற்றவாளிகளுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.

இதுபோன்ற குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை தான் தரப்பட வேண்டும். இருப்பினும் உங்களுக்கு 50 சதவீத தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தினகரன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக