புதன், 24 செப்டம்பர், 2014

ராமன் ஒரு கோழை மன்னன் ! பொய்புலவர்களால் ஊதி ஊதி பெருசாகிய பலூன்தான் ஸ்ரீ ராமன் என்பவன் !

டாக்டர் அம்பேத்கர்இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – டாக்டர் அம்பேத்கர் – 2 சுக்ரீவனும், அனுமானும் இராமனுக்காக திரட்டிய (வானர) சேனையோடு இலங்கை மீது இராமன் படையெடுக்கிறான். அப்போதும் வாலி-சுக்ரீவன் ஆகிய இரு சகோதரர்களிடையே கையாளப்பட்ட மிகக் கேவலமான வழிமுறையைத்தான் இராமன் கையாளுகிறான். பேரரசன் இராவணனையும் அவன் மகனையும் கொன்றுவிட்டு இராவணனுடைய தம்பி விபீஷணனை அரியணை ஏற்றுவதாய்ச் சொல்லி விபீஷ்ணனின் உதவியைப் பெறுகிறான். அதன்படி இராவணனையும் அவனுடைய மகன் இந்திரஜித்தையும் இராமன் கொன்று விடுகின்றான். போர் ஓய்ந்தபின் இராமன் செய்கிற முதற் காரியம் பேரரசன் இராவணனின் உடலை நல்லடக்கம் செய்வது தான். அதன் பின்னர் இராமனின் நோக்கமெல்லாம் விபீஷணனை அரியணையிலேற்றுவதிலேயே இருந்தது. ஆட்சி அரங்கேறிய பின், தானும் இலட்சுமணன் சுக்ரீவன் ஆகியோரும் சுக மகிழ்வோடு இருப்பதாகவும் இராவணன் கொல்லப்பட்ட சேதியையும் அனுமான் மூலம் சீதைக்கு அனுப்புகிறான்.

இராவணனை நல்லடக்கம் செய்த பின் இராமன் செய்திருக்க வேண்டிய முதற் காரியம் ஓடோடிச் சென்று தன் மனைவி சீதையை சந்தித்திருக்க வேண்டும். அவன் அப்படிச் செய்யவில்லை. சீதையை சந்திப்பதைக் காட்டிலும் விபீஷணனை அரியணையிலேற்றுவதிலேயே அவன் அதிக ஆர்வம் காட்டுகிறான். விபீஷணனை ஆட்சியிலமர்த்திய பிறகும் கூட சீதையைக் காண அவனே போகவில்லை. அனுமானைத்தான் அனுப்புகிறான். அனுமன் மூலம் அவன் அனுப்பும் சேதிகள் தான் என்ன? சீதையை அழைத்து வா என்று அனுமனிடம் சொல்லவில்லை. தாமும் தம் தோழர்களும் சகல நலத்தோடிருப்பதாக சீதைக்கு சொல் என்றுதான் சேதி அனுப்புகிறான். இராமனை சந்திக்க வேண்டுமென்ற பேராவலை சீதைதான் அனுமன் மூலம் சொல்லியனுப்புகிறாள். தன்னுடைய சொந்த மனைவி சீதை. இராவணன் அவளைக் கடத்திக் கொண்டுபோய் சிறைப்படுத்தி பத்து மாதங்களுக்கு மேலாகிறது. இருந்தும் தனிமையிலிருந்த சீதையைக் காண இராமன் போகவில்லை.
சீதையை இராமன் முன் கொண்டு வருகிறார்கள். அவளைப் பார்த்த போதாவது இராமன் சொன்னதென்ன?
மனித மனம் படைத்த பாமர மனிதன் கூட துயரம் கவ்விய நிலையிலுள்ள மனைவியிடம் இராமன் சீதையிடம் நடந்து கொண்டதைப் போல நடந்து கொண்டிருப்பானா என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிகழ்ச்சியாய்த் தோன்றுகிறது. இலங்கையில் சிறைப்பட்டிருந்த சீதையை இராமன் நடத்திய முறைமைக்கு வால்மீகி நேரடியாக ஏதும் ஆதாரம் அளிக்கவில்லை எனினும் அடியிற் காணும் பகுதியில் இராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான் : (யுத்த காண்டம், சருக்கம் 115, சுலோகம் 1-23) “உன்னை சிறைப் பிடித்தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்து பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இராவணனைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை.”
இராமன் சீதையிடம் இதைவிடக் கொடுஞ்செயல் வேறு என்ன செய்திருக்க முடியும்? இராமன் அதோடு நிற்கவில்லை, சீதையை நோக்கி மேலும் கூறுகிறான்: “உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்கு பெரும் எரிச்சலூட்டுகிறது. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை. போரிட்டு உன்னை மீண்டும் மீட்டு வந்தேன். என்னுடைய நோக்கம் அவ்வளவே! உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.”
இப்படிப்பட்ட இராமனை சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே. தான் கவர்ந்து சென்ற சீதையை இராவணன் களங்கப்படுத்தியிருப்பான் என்ன எண்ணத்தை-சிறைப்பட்டிருந்த வேளையில் தன்னை சந்திக்க வந்த அனுமன் மூலம் சொல்லியனுப்பி-அதன் அடிப்படையில் சீதையை கை கழுவி விடுகிறேன்-என்று இராமன் புலப்படுத்தி இருந்தால் இவ்வளவு சிரமத்திற்கு இடமிருந்திருக்காது-”நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே”-என்று சீதை வெளிப்படையாக சொல்கிறாள்.
நெருப்பில் சீதை
இப்படிப்பட்ட இராமனை சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே.
ஆயினும் இராமனுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு தன் புனிதத்தை நிரூபித்திட முன்வருகிறாள். அதன்படி சீதை அக்னிப் பிழம்பில் இறங்கி எவ்வித சேதாரமுமின்றி வெளிவருகிறாள். அவள் மேற்கொண்ட சோதனையின் மூலம் அவள் புனிதமானவள் என்பதைக் கடவுள்களே மெச்சிப் பாராட்டினார்கள். அதன் பின்னரே தன் மனைவி சீதையை இராமன் மீண்டும் அயோத்திக்கு அழைத்துப் போகிறான்.
அயோத்திக்குத் திரும்பிய மன்னன் இராமன் தன் மனைவி சீதையிடம் எவ்வாறு நடந்து கொள்கிறான்? இராமன் இப்போது அயோத்தியை ஆளும் அரசன். அவன் மனைவி சீதையோ பேரரசி. இராமன் அரசாளுங் காலத்திலேயே வெகு விரைவில் சீதை அரசி என்ற நிலை இல்லாமற் போய் விட்டது. இராமனின் அவப்பெயருக்கு இந்நிகழ்ச்சி முத்தாய்ப்பு வைத்தது போல உள்ளது. வால்மீகி எழுதிய இராமாயணத்திலேயே இந்நிகழ்ச்சி காணக் கிடக்கிறது.
அயோத்திக்கு அரசனாக இராமனும், அரசியாக சீதையும் கொலுவேறிய கொஞ்ச காலத்திலேயே சீதை கர்ப்பிணியாகிறாள். நாட்டில் அவதூறு பேசுவோர் சிலர், சீதை கருவுற்றிருப்பதைக் கண்டு அவளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், இராவணனிடம் சிறைப்பட்டிருந்த காலத்திலேயே சீதை கருவுற்றிருக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட நடத்தை கெட்ட ஒருத்தியை தன் மனைவி என மீண்டும் நாட்டுக்கு திரும்ப அழைத்துக் கொண்டு வந்ததற்காக இராமனைப் பழித்துப் பேசினர் என அரசவைக் கோமாளியான பத்ரன் என்பவன் தன் காதிற்பட்ட அவதூறு வார்த்தைகளை இராமனிடம் சொல்கிறான். இராமனும் இவ்வித வதந்திகளைக் கேட்டுத் தாள முடியாத அவமானத்தில் அமிழ்ந்து போனான் என்பது இயல்பே. எனினும் அக்களங்கத்தைக் கழுவிட இராமன் மேற்கொள்ளும் அணுகுமுறையோ இயல்புக்கு மாறானதாக உள்ளது. இவற்றினின்று விடுபட இராமன் மிகத் துரிதமான குறுக்கு வழியைக் கையாளுகிறான்.
அதாவது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளவளை உணவின்றி, இருக்க இடமின்றி, முன் தகவல் ஏதுமின்றி மக்கள் நடமாட்டமில்லாத காட்டில் கொண்டுபோய் விட்டு விட்டதானது நாணயமற்ற சதியாகும். சீதையை நாடு கடத்திக் காட்டிற்கு அனுப்புவதெனும் இராமனின் முடிவு திடீரென மேற்கொள்ளப்பட்டதல்ல என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. இராமனுக்குள் இப்படியோரு முடிவு உதயமானது, உருவெடுத்தது, நிறைவேறியதைப் பற்றியெல்லாம் சற்று தெளிவாக குறிப்பிட வேண்டியது அவசியம்.
சீதையைப் பற்றி நாட்டில் உலவிய வதந்திகளைத் தன் அரசவைக் கோமாளியான பத்ரன் மூலம் கேட்டறிந்த இராமன் தன் சகோதரர்களை அழைத்து, தனது உணர்வுகளைப் புலப்படுத்துகிறான். சீதையின் புனிதமான கற்பும், தூய்மையும் இலங்கையிலேயே நிரூபிக்கப்பட்டது. அதற்குக் கடவுள்களே சாட்சியாயிருந்தார்கள். தானும் அதனை முற்றிலும் நம்புவதாக இராமன் தன் சகோதரர்களுக்கு சொல்கிறான். “எனினும் பொதுமக்களோ சீதை மீது வதந்திகளைக் கிளப்புவதாகவும் என்னைப் பழிப்பதாகவும், எனக்கு அவமானம் ஏற்படும் வகையில் பேசுவதாகவும் அறிகிறேன். இத்தகைய இழிவினை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது. மானம், கௌரவம் என்பது பெரும் சொத்து. கடவுள்கள் மற்றும் பெருமான்கள் எல்லாம் அத்தகைய மாண்பினைத் தக்கவைத்துக் கொள்ள பெரும்பாடு படுகின்றனர். இத்தகைய இழிவையும் அவமானத்தையும் தாங்கிக்கொள்ள என்னால் முடியவில்லை. அப்படிப்பட்ட இழிசொல் மற்றும் அவமானத்திலிருந்து என்னை நான் காப்பாற்றிக் கொள்ள உங்களைத் துறந்திடவும் நான் தயாராய் இருக்கிறேன். சீதையை கைவிட்டு விட மாட்டேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்” என்றான் இராமன்.
நாட்டு மக்களின் வதந்திகளிலிருந்து தப்பிட சீதையை காட்டிற்கு அனுப்பி விடுவதொன்றே சுலபமான வழியென இராமன் திடமாக முடிவு செய்து விட்டான் என்பதையே இவ்வாக்குமூலம் காட்டுகிறது. இப்படிச் செய்வது சரியா, தவறா!-என்பதை யோசிக்கக் கூட அவன் காத்திருக்கவில்லை. சீதையின் வாழ்வு அவனுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவனுடைய பேரும் புகழுமே அவனுக்குப் பெரிதெனத் தோன்றியது. அரசாளும் மன்னன் என்ற முறையில், அவ்வித அவதூறுகளைப் போக்கிட அவன் என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்யவில்லை. ஓர் அப்பாவி மனைவியின் நம்பிக்கைக்குரிய கணவன் ஒருவன் எதைச் செய்வானோ அதையும் செய்யவில்லை. யாரோ ஒரு சிலர் கிளப்பிவிட்ட வதந்திகளுக்கு இணங்க வேண்டியவனானான்.
இராமனின் இச்செயலைச் சுட்டிக்காட்டி இராமன் ஒரு ஜனநாயகப் பேரரசன் எனச் சொல்லித் திரியும் இந்துக்கள் இல்லாமலில்லை. அதே வேளையில் இராமன் கோழைத்தனமாய் விளங்கிய பலவீனமான மன்னன் எனச் சொல்பவர்களும் இல்லாமலில்லை.
எது எப்படி இருப்பினும் தன் பெயரையும் புகழையும் காப்பாற்றிக் கொள்ள சீதையை காட்டிற்கு அனுப்பிடுவது எனத் தான் செய்த கொடுமையான முடிவினை தன் சகோதரர்களுக்கு சொல்லிய இராமன் சீதைக்கு சொல்லவில்லை. அந்த முடிவினால் பாதிப்புக்கு ஆளாகப் போவது சீதை மட்டுந்தான். எனவே அந்த முடிவினை கட்டாயம் தெரிந்து கொள்ளும் உரிமைக்குரியவள் சீதையாவாள். ஆனால் சீதையோ முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறாள். இத்திட்டம் சீதைக்குத் தெரியக் கூடாத மிகப்பெரும் இரகசியமெனக் கருதி அத்திட்டத்தை செயற்படுத்த சரியானதொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இராமன் காத்திருந்தான். சீதையின் கொடிய விதி இராமனின் எதிர்பார்ப்புக்கு கைகொடுத்தது.
பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் விசேஷமான சில பொருட்கள் மீது ஆசைப்படுவார்கள். அத்தகைய ஆசைகளை, விருப்பங்களை நிறைவேற்றுவது மரபு என்பது இராமனுக்கும் தெரியும். சீதைக்கு அப்படி ஏதேனும் விருப்பமுண்டா என்று ஒரு நாள் இராமன் சீதையிடம் கேட்டான். ஆம் என்றாள் சீதை. அந்த ஆசை என்னவென்று கேட்டான் இராமன். கங்கைக் கரையோரம் அமைந்துள்ள ஏதாவதொரு முனிவரின் ஆசிரமத்தில் தங்கி, அங்கு கிடைக்கும் பழங்களையும், கிழங்குகளையும் சாப்பிட்டு ஓரிரவாவது தங்கித் திரும்ப வேண்டும் என்பதே தன் ஆசை என்றாள் கர்ப்பிணியான சீதை. அதைக் கேட்டு இராமனுக்கு அளவிலா மகிழ்ச்சி. ‘’அன்பே, கொஞ்சம் பொறுத்துக் கொள். நாளையே நீ அங்கு போக நான் ஏற்பாடு செய்கிறேன்’’ என்றான் இராமன். நேசத்திற்குரிய கணவனின் நேர்மையான பேச்சென்று சீதை இராமனின் வார்த்தையை கருதுகிறாள். ஆனால் இராமன் செய்ததென்ன?
லவன் - குசன்
சீதை தன்னுடைய தூய்மையைப் புலப்படுத்தினால், அதற்குப் பின் இந்தத் தடவையாவது இராமன் சீதையை மீண்டும் தன் மனைவியாய் ஏற்றுக்கொள்வான்-என்பதற்கு உத்திரவாதம் ஏதுமில்லை.
சீதையைக் காட்டிற்கு அனுப்பி கைகழுவிட இதுவே தக்க தருணம் என இராமன் நினைக்கிறான். அதற்கொப்ப தம் சகோதரர்களை இரகசியமாய் அழைத்துச் சந்திக்கிறான். சீதையை வனவாசம் அனுப்பி விடுவதெனும் தன் அறுதியான முடிவினை அவர்களோடு பகிர்ந்து கொள்கிறான். அதற்கு இதுவே தக்க தருணம் என்பதையும் வலியுறுத்திச் சொல்கிறான். இராமனின் சகோதரர்கள் எவரும் சீதைக்காகப் பரிந்து பேசக் கூடாது என்கிறான். இராமனின் முடிவுக்கு எதிராக சீதைக்காகப் பரிந்து பேசினால் அவர்களை எதிரிகளாய்க் கருதுவேன் என்கிறான்.
அடுத்த நாள் காலையில் சீதையைத் தேரில் ஏற்றிக் கொண்டு போய் கங்கைக் கரையோரக் காட்டிலுள்ள ஓர் ஆசிரமத்தில் விட்டுவிட்டு வா என்று இராமன் இலட்சுமணனுக்கு ஆணையிடுகிறான். சீதையைப் பற்றி இராமன் செய்துள்ள முடிவை சீதைக்கு தெரிவிக்க இலட்சுமணனுக்கு போதிய துணிவுமில்லை, வழியும் தெரியவில்லை. இச்சங்கடத்தைப் புரிந்துகொண்ட இராமன் கங்கைக் கரையோரக் காடுகளில் தங்கி சில காலத்தைக் கழிக்க சீதையே விரும்பிச் சொன்னாள் எனச் சொல்லி இலட்சுமணனின் மனதிற்கு ஆறுதல் அளிக்கின்றான்.
இந்த உரையாடல்கள் எல்லாம் இரவிலேயே நடந்து முடிந்தன. மறுநாள் விடியற் காலையில் இலட்சுமணன் சுமந்தனை அழைத்து தேரில் குதிரைகளைப் பூட்டச் சொன்னான். குதிரைகளைப் பூட்டியுள்ள தேர் தயாராய் உள்ளதென்று சுமந்தன் சொன்னான். பிறகு இலட்சுமணன் அரண்மனைக்குப் போகிறான். சீதையை சந்திக்கிறான். வனத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கிச் சில நாள் வாழ்ந்து திரும்பிட விரும்பியதாய் அவள் வெளிப்படுத்திய ஆசையை நினைவூட்டுகிறான்; அதனை நிறைவேற்ற இராமன் அளித்த உறுதிமொழியை சொல்லுகிறான். அதன்படி அப்பணியைத் தான் செய்ய இராமன் பணித்திருப்பதையும் சீதைக்கு சொல்லுகிறான். பூட்டிய குதிரைகளுடன் காத்திருக்கும் தேரைக் காட்டி, ‘புறப்படுங்கள் போகலாம்’ என்கிறான். சீதையின் உள்ளம் விம்மிப் புடைக்கிறது. தாவி ஏறித் தேரில் அமர்கிறாள். அவள் உள்ளமெல்லாம் இராமனுக்கு நன்றி சொல்லும் நல்லுணர்வால் நிரம்பியது. சுமந்தன் தேரோட்ட இலட்சுமணன் காவலனாய்த் தொடர அவர்கள் குறிப்பிட்ட வனத்திற்குப் போகிறார்கள். கடைசியில் கங்கைக் கரையை அடைந்தார்கள். மீனவர்களின் உதவியோடு படகில் ஏறி அக்கரையை அடைகிறார்கள். இலட்சுமணன் சீதையின் கால்களில் வீழ்கிறான். அவன் தன் கண்களில் நீர் மல்க ‘மாசற்ற பேரரசியே, என்னை மன்னியுங்கள். உங்களை அரண்மனையில் வைத்திருப்பது அவமானத்திற்குரியதென்று மக்கள் கிளப்பிய வதந்திகளிலிருந்து தப்பிட நாடாளும் இராமன் எனக்கிட்ட கட்டளையை நான் நிறைவேற்றுகிறேன். உம்மைக் காட்டிலே கைவிட்டுத் திரும்பும் என்னை மன்னிக்க வேண்டும்’ என்றான் இலட்சுமணன்.
காட்டில் எப்படியாவது செத்தொழியட்டும் என்று கைவிடப்பட்ட சீதை, அடைக்கலம் தேடி அருகிலிருந்த வால்மீகியின் ஆசிரமத்தை அடைந்தாள். வால்மீகி தன் ஆசிரமத்தில் சீதைக்கு இடமளித்துப் பாதுகாப்பும் கொடுத்தார். கொஞ்ச காலத்தில் சீதை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். குசா, லவா என அக்குழந்தைகளுக்குப் பெயரிட்டாள். தாயும் இரு குழந்தைகளும் வால்மீகியுடன் வாழ்ந்து வந்தனர். வால்மீகி அச்சிறுவர்களை வளர்த்து தாம் இயற்றிய இராமாயணத்தை அவர்கள் பாடக் கற்றுக் கொடுத்தார். காட்டிலுள்ள வால்மீகியின் ஆசிரமத்தில் அந்தச்சிறுவர்கள் 12 ஆண்டுகள் வளர்ந்து வந்தனர். வால்மீகியின் ஆசிரமம் இராமன் அரசாளும் அயோத்தி நகருக்கு நெடுந் தொலைவிலொன்றுமில்லை. இந்த 12 ஆண்டுகளில் ஒரு தடவையாவது இந்த உதாரண புருஷனான இராமன், பாசம் மிக்க தந்தை, சீதை என்னவானாள்-அவள் செத்தாளா-பிழைத்தாளா-என்பதைப் பற்றி விசாரிக்கக் கூட இல்லை.
12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விநோதமான சூழ்நிலையில் இராமன் சீதையை சந்திக்கிறான். இராமன் ஒரு யாகம் வளர்க்க நினைக்கிறான். அந்த யாகத்தில் அனைத்து ரிஷிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கிறான். வால்மீகியின் ஆசிரமம் அயோத்திக்கு மிக அருகிலிருந்தும் கூட வேண்டுமென்றே இராமன் வால்மீகியை அந்த யாகத்திற்கு அழைக்கவில்லை. ஆனால் வால்மீகியோ, குசா, லவா ஆகிய சீதையின் இரு பிள்ளைகளைத் தன் சீடர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த யாகத்தில் கலந்து கொள்ள வந்தார்.
யாகம் நடந்து கொண்டிருந்தபோது குழுமியிருந்த பேரவை முன் அவ்விரு சிறுவர்களும் இராமாயணப் பாடல்களைப் பாடினர். செவிமடுத்த இராமன் நெகிழ்ந்து போனான். இக்குழந்தைகள் யார் எனக் கேட்டான். அவர்கள் சீதையின் பிள்ளைகள் என்றார்கள். அப்போதுதான் சீதை அவன் நினைவுக்கு வருகிறாள். அந்த நேரத்திலும் அவன் செய்ததென்ன? சீதையை அழைத்து வாருங்கள் என்று அவன் ஆள் அனுப்பவில்லை. பெற்றோர்கள் செய்த பாவத்தை அறியாத அந்த அப்பாவிக் குழந்தைகளை அழைத்து வால்மீகிக்கு சொல்லச் சொன்னான்.
‘’சீதை களங்கமற்றவளாகவும் கற்புமுள்ளவளாகவுமிருந்தால் யாகத்தில் குழுமியுள்ள இச்சபையோர் முன் வந்து தன் தூய்மையை நிரூபிக்கட்டும். அதன் வாயிலாக என் மீதும் அவள் மீதும் படிந்துள்ள விஷம பேச்சுக்கள் மறைந்து போகும்’’-என விதிப்பயன் விளைவித்த கொடுமைக்கு ஆளான அக்குழந்தைகள் மூலம் சொல்லியனுப்புகிறான்.
இதே மாதிரியான சோதனையை சீதை முன்பொருமுறை இலங்கையிலே மேற்கொண்டாள். சீதையை காட்டிற்கு அனுப்புமுன், மீண்டும் சீதை அத்தகையதொரு சோதனையை மேற்கொள்ள வேண்டுமென்று இராமன் சொல்லி இருக்கலாம். சீதை தன்னுடைய தூய்மையைப் புலப்படுத்தினால், அதற்குப் பின் இந்தத் தடவையாவது இராமன் சீதையை மீண்டும் தன் மனைவியாய் ஏற்றுக்கொள்வான்-என்பதற்கு உத்திரவாதம் ஏதுமில்லை. இருப்பினும் வால்மீகி சீதையை யாக சபைக்கு அழைத்து வருகிறார். இராமன் முன் சீதையை நிறுத்தி வால்மீகி சொன்னார்: ‘’தசரதனின் மகனே, வம்பர்களின் வாய்ப் பேச்சைக் கேட்டு காட்டிலே நீ கைவிட்ட சீதை இங்கே இருக்கிறாள். நீ அனுமதித்தால் இச்சபை முன் அவள் தன் தூய்மையை சத்தியம் செய்து நிரூபிப்பாள். இதோ உன்னுடைய இரட்டைப் புதல்வர்கள் இங்கே இருக்கின்றார்கள். அவர்களுக்கு உணவளித்து, என் குடிலை உறைவிடமாய்த் தந்து நான் பராமரித்து வளர்த்து வந்தேன்’’ என்றான். இதைக் கேட்ட இராமன் சொன்னான்: ‘’சீதை களங்கமற்றவள், கற்புள்ளவள் என்பதை நான் நன்கறிவேன். இவர்கள் என் பிள்ளைகள் என்பதும் எனக்குத் தெரியும். அவளுடைய தூய்மைக்கு ஆதாரமாக முன்பொருமுறை இலங்கையில் அவள் கடும் சோதனையை மேற்கொண்டாள். அதன் பின்னரே நான் அவளை மீண்டும் மனைவியாய் ஏற்று கூட்டி வந்தேன். ஆயினும் மக்கள் இன்னும் அவ்வித சந்தேகம் கொண்டுள்ளனர். எனவே சீதை மீண்டுமொரு முறை இங்கு கூடியுள்ள ரிஷிகள் மற்றும் பொது மக்கள் முன்னால், அவர்கள் பார்க்கும்படி அத்தகையதோர் சோதனையை மேற்கொள்ளட்டும்’’ என்றான்.
நீர் மல்கிய கண்கள் நிலம் நோக்கிட இரு கரம் கூப்பிய நிலையில் சீதை சொன்னாள்: ‘’இராமனைத் தவிர வேறொரு ஆடவனை நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை; அது உண்மையானால் பூமாதேவியே வாய் திறவாய், நான் புதையுண்டு போகிறேன். என் சொல்லிலும் செயலிலும் நினைவிலும் கனவிலும் எப்போதும் நான் இராமனையே நேசிக்கிறேன்-அது உண்மையானால் பூமாதேவியே வாய் திறவாய். நான் புதையுண்டு போகிறேன்’’ என்றாள். சீதை வார்த்தைகளை உதிர்க்கும்போதே பூமி பிளந்தது; சீதை உட்புகுந்தாள். தங்கத்தாலான சிம்மாசனத்தில் அமர்ந்து அவள் மறைந்து போனாள். சீதை மீது வானவர்கள் பூமாரி பொழிந்தார்கள். பார்த்திருந்த மக்களோ மெய்மறந்து நின்றார்கள்.
அதாவது காட்டுமிராண்டித் தனமானவனை விட கேவலமாய் நடந்து கொண்ட இராமனோடு மனைவியாய் திரும்பப் போவதைக் காட்டிலும் சீதை மரணத்தையே விரும்பி ஏற்றுக் கொண்டாள். கடவுளான இராமனின் கயமையும் சீதையின் துயரமும் இவ்வாறு காணப்படுகிறது…
(தொடரும்)
அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – பாகம் 2
முந்தைய பகுதி : நயவஞ்சகன் இராமன் – டாக்டர் அம்பேத்கர்  vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக