ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

சட்டம் ஒரு இருட்டறை ? சொத்து குவிப்பு வழக்கின் இழுத்தடிப்பு பற்றி கலைஞர் !

சட்டம் ஓர் இருட்டறை” என்று அண்ணா சொன்னதை மறந்துவிட முடியுமா? கலைஞர் பதில்!

திமுக தலைவர் கலைஞர் 06.09.2014 சனிக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

கேள்வி :- ஜெயலலிதா மீதான வருமான வரித்துறை வழக்கில் விசாரணை மீண்டும் செப்டம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறதே?

கலைஞர் :- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதும், அவருடைய உடன் பிறவாச் சகோதரி சசிகலா மீதும், வருமான வரித் துறை தொடர்ந்த ஒரு வழக்கு பதினெட்டு ஆண்டுகளாக நீடித்து, தற்போது முடிவுக்கு வருகின்ற நேரத்தில், நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று கடுமையாக நீதிபதி தெட்சிணாமூர்த்தி தெரிவித்த நிலையில், ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில், தாங்கள் துறை மூலமாகவே பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள மனு ஒன்றினைத் துறையிடம் தாக்கல் செய்திருப்பதாக வும், அந்த மனு நிலுவையிலே இருப்பதாகவும் தெரிவித்து, அதற்கு வருமான வரித் துறையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆட்சேபணை தெரிவிக்காததால், நீதிபதி விசாரணையை ஜூலை 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். 

18 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று - அதற்காக நீதிமன்றங்களும், அரசும், வழக்கறிஞர்களும் பல மணி நேரம் செலவிட்ட பிறகு, தற்போது எடுத்திருக்கும் இந்த முடிவினை ஜெயலலிதா தரப்பினர் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து, அப்போது துறை மூலமாகப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முன்வரவில்லையா? இந்த வழக்குக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று, உச்ச நீதிமன்றத்தின் பொன்னான நேரம் செலவழிக்கப்பட்டதே, அப்போதே துறையின் வாயிலாகப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதாக ஜெயலலிதா தரப்பினர் கூறியிருக்கலாம் அல்லவா? 

துறை மூலமாக இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள அவர்கள் ஏற்கனவே துறையினரிடம் மனுக் கொடுத்தார்களா? அப்படிக் கொடுத்திருந்தால் அந்த மனுவின் கதி என்ன? அப்போது என்ன முடிவெடுக் கப்பட்டது? இதே பிரச்சினை தொடர்பாக தே.மு.தி.க. தலைவர், விஜயகாந்த் குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியிருந்தார். 

ஜெயலலிதாவும், சசிகலாவும் தங்களை இந்த வழக்குகளிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று கோரி மனுக்களைத் தாக்கல் செய்து விட்டு, அதனை நடத்தாமல் காலம் கடத்தியதைத் தொடர்ந்து, வருமான வரித் துறை உயர் நீதிமன்றம், மற்றும் உச்ச நீதிமன் றத்தை அணுகியதையொட்டி, 4-9-2006 அன்று உச்ச நீதிமன்றம் நான்கு வாரக் காலத்திற்குள் விசாரணை நீதிமன்றத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் தங்களை விடுவிக்க வேண்டுமென்று தொடுத்த வழக்கை முடிவு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர். அவ்வாறே முதன்மை மாநகர மாஜிஸ்திரேட் அவர்கள் விசாரித்து ஜெயலலிதாவின் மனுவினைத் தள்ளுபடி செய்தார். 

உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பினர் மேல் முறையீடு செய்து கொண்டபோது, விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கினை நான்கு மாத காலத் திற்குள் விசாரணை செய்து முடிக்குமாறு 30-1-2014 அன்று தீர்ப்பளித்தது. அந்த நேரத்திலாவது தாங்கள் இப்பிரச்சினையை துறை வாயிலாகத் தீர்த்துக் கொள்வதாக ஜெயலலிதா தரப்பினர் சொன்னார்களா என்றால் இல்லை.
 
உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பில், “குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் எத்தகைய சூழலில் தாங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருப்பதில் இருந்து, இந்த வழக்கில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய கடப்பாடு ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக் கும்தான் உள்ளது என்பதை மனதிலே கொள்ள வேண்டும். 

இதே வருமான வரித் துறை பற்றிய வழக்கு ஜெயலலிதா மீது உச்ச நீதிமன்றத்தில் 24-2-2006 அன்று நீதிபதிகள் பி.என். அகர்வால், ஏ.கே. மாத்தூர் முன்னி லையில் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் வக்கீல் அப்போது ஆறு வாரம் அவகாசம் வேண்டு மென்றார். 

அப்போது நீதிபதிகள் “நீதிபரிபாலன முறையையே நீங்கள் கேலிக் கூத்தாக்கி வருகிறீர்கள். இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த நீதிமன்ற நடவடிக்கைகளை இழுத்துச் செல்ல முடியும்?” என்றெல்லாம் கேட்டார்களே, அப்போதாவது “நாங்கள் துறை வாயிலாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்கிறோம்” என்று சொல்லியிருக்கலாம் அல்லவா? அல்லது துறையிடம் ஏற்கனவே முறையிட்டு, அவர்கள் இந்தக் கோரிக்கையை ஏற்கமாட்டோம் என்று தெரிவித்து விட்டார்களா? 

விசாரணை நீதிமன்றம் நான்கு மாத காலத்திற்குள் இந்த வழக்கினை விசாரித்து முடிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் 30-1-2014 அன்று தெரிவித்து நான்கு மாதங்கள் அல்ல, ஏழு மாதங்கள் முடிந்துவிட்டன. இடையில் உச்ச நீதிமன்றமே மேலும் மூன்று மாதங்கள் நீடிப்பு கொடுத்து அந்தக் காலமும் முடியப் போகிறது. ஆனால் ஜெயலலிதா தரப்பினர், வருமான வரித் துறையிடம் தாங்கள் கொடுத்துள்ள மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்வரை இந்த வழக்கினைத் தள்ளி வைக்க வேண்டுமென்று தொடர்ந்து ஜூலை மாதம் முதல் மனுப் போட்டு வழக்கு விசாரணையை நீட்டித்து இழுத்துக்கொண்டே வருகிறார்கள். வருமான வரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமசாமி நேற்றையதினம் வாதிடும்போது, “துறை ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கை வேறு, தற்போது நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது நடைபெறும் குற்ற வழக்கு வேறு. இந்த வழக்கை நான்கு மாதங்களில் முடிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப் படுத்த வேண்டும். விசாரணையைத் தள்ளி வைக்கக் கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.
 
ஆனால் மாஜிஸ்திரேட் தெட்சிணாமூர்த்தி அவர்கள், உச்ச நீதிமன்றம் வழங்கிய கால அவகாசத்தை மேலும் இரண்டு மாதங்கள் நீடிக்க வேண்டுமென்று கடிதம் எழுதியிருப்பதாகவும், அதற்கு இன்னும் பதில் வரவில்லை என்றும், வழக்கை 18ஆம் தேதிக்குத் தள்ளி வைப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டுமென்று தெரிவித்த பிறகும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரி இத்தனை ஆண்டுக் காலம் கழித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனுக் கொடுத்து, அந்த மனு மீது துறை நடவடிக்கை எடுக்கும் வரை எழும்பூர் நீதிமன்றம் காத்திருப்பதும், வழக்கைத் தள்ளி வைப்பதும், உச்ச நீதிமன்றத்திற்கே கால அவகாசம் கேட்டுக் கடிதம் எழுதுவதும் சட்டப்படி சரியான நடைமுறைதானா என்று சட்டவல்லுநர்கள்தான் கூற வேண்டும்! “சட்டம் ஓர் இருட்டறை” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதை மறந்துவிட முடியுமா? 
nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக