சனி, 6 செப்டம்பர், 2014

ஊருக்கு ஒரு சலீம் இருக்கக்கூடாதா ?

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம் ‘சலீம்’. அவர் இதற்கு முன்பு நடித்த ‘நான்’ படத்தின் தொடர்ச்சியாகவே கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் என்.வி.நிர்மல் குமார். சமூகத்தில் நடந்து வருகிற மிக முக்கியமான ஒர் அவலத்தை அடிப்படையாகக் கொண்டு நகர்கிறது திரைக்கதை.வழக்கமாக பல படங்களில் தோன்றிய கதாபாத்திரத்தைத் தான் நினைவுபடுத்துகிறது சலீம். நீதி, நேர்மை, நியாயம் பேசுகிற, மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று வாழ்கிற ஒருவன். இன்னும் சொல்லப்போனால், ரூல்ஸ் ராமானுஜம், சின்சியர் சிகாமணி என்று பலரும் கிண்டலடிக்கிற லிஸ்டில் சலீமும் ஒருவன். ஆனால் இதற்கு முன்பு எடுத்துக்காட்டாக இருந்தவர்களுக்கும் இவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம், சலீம் ஒரு இஸ்லாமியர்.பொதுவாகவே தமிழ் சினிமாவில் இப்படி நேர்மையாக நடந்து கொள்கிறவர்கள் உபநயனம் செய்தவர்களாக இருப்பார்கள்
(அந்நியன்), அல்லது அவர்களுக்கு உபநயனம் செய்துவிடுவார்கள் (ஜென்டில் மேன்). சமீபமாக வெளிவந்த ‘நான் தான் பாலா’ வரைக்கும் இது தொடர்ந்து கொண்டே வருகிறது. நிமிர்ந்து நில் படத்தில் கூட சமஸ்கிருத பாடல் ஒலிப்பதை கவனித்திருக்க முடியும்.>சலீம் படத்தின் முதல் காட்சியிலேயே இஸ்லாமிய தொழுகை ஒலிப்பது சிலிர்ப்பை உண்டாக்குகிறது. மருத்துவராக வருகிறார் சலீம் என்கிற விஜய் ஆண்டனி. சமூகத்தை நேசிக்கும் அவருக்கு யாரும் இல்லை. தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் அவருக்கு பல எதிரிகள், காரணம் இவர் பல நேரங்களில் பணம் வாங்காமல் வைத்தியம் பார்ப்பது தான். இதனால் மருத்துவமனையின் லாபம் குறைவாக இருக்கிறது என்பதால் அந்த மருத்துவமனையின் உரிமையாளரும் சலீமை கடிந்துகொள்கிறார்.இந்த நேரத்தில் தான், நிஷாவுக்கும் சலீமுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. எந்த நேரமும் மருத்துவமனையில் தன் நேரத்தை செலவிடும் சலீம், காதலிக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை மறந்துவிடுகிறார். சின்ன சின்ன ஏமாற்றங்களை தாங்கிக்கொள்ள முடியாத காதலி நிஷா, திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். அதே நேரம் நேர்மையாக நடந்துகொள்ளும் காரணத்திற்காக மருத்துவமனையில் இருந்து சலீம் வெளியேற்றப்படுகிறார்.இரவு நேரத்தில் ஒரு முட்புதரில் உடம்பில் காயங்களோடு ஒரு பெண்ணை பார்க்கிறார். அவரை எடுத்து வந்து அவருக்கு சிகிச்சை கொடுக்க, அதை போலிசிடமும் தெரிவிக்கிறார். அடுத்த நாள் அந்த பெண்ணை காணவில்லை. அவள் கற்பழிக்கப்பட்டு, முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டிருப்பதை தெரிந்து கொள்ளும் சலீம், இதில் நிதியமைச்சரின் மகன் சம்பந்தப்பட்டிருப்பதையும் அறிந்துகொள்கிறார். அதன் பிறகு தான் வேகம் எடுக்கிறது படத்தின் இரண்டாவது பாதி.>நேர்மையாக நடந்தால் முடியாது, சட்டத்தை நம்பினால் நடக்காது, காதலி சென்றுவிட்டாள், வேலை போய்விட்டது... தானே கைகளில் துப்பாக்கி ஏந்துகிறார் சலீம். அதன் பின் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது திரைக்கதை. க்ளைமாக்ஸ் வரை நம்மை அடுத்தடுத்த காட்சிகளில் எதிர்பார்ப்போடு இறுக்கையில் அமரவைக்கிறான் சலீம்!
நடிப்பில் அதிகமாக ஸ்கோர் பண்ணி இருப்பதாலோ என்னவோ, பாடல்களில் கோட்டை விட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. ‘உன்னைக் கண்ட நாள் முதல்...’ பாடலில் ஸ்டைலான விஜய் ஆண்டனியும் அழகான அக்‌ஷாவும் மனதில் நின்ற அளவுக்கு பாடல் மனதில் நிற்கவில்லை. ‘சிவசம்போ’ பாடலை பிரேம்ஜியை வைத்து கெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது. நிதியமைச்சர் தவபுண்ணியம் கதாபாத்திரத்தில் வரும் ஆர்.என்.ஆர்.மனோகர் அசத்தலான நடிப்பு. போன் கட்டானது தெரியாமல் பேசிக்கொண்டே இருக்கும் காட்சி சீரியஸ் நேரத்திலும் சிரிப்பை வரவழைக்கிறது. மற்றவர்களின் உயிரை துச்சமாக நினைக்கும் அமைச்சர், தன் மகனுக்காக கண்ணீர் விடுவது எந்த விதத்தில் நியாயம் என்று நாம் மனதில் கேள்வி எழுப்பும் போதே, விஜய் ஆண்டனி திரையில் அதற்கு பதில் சொல்கிறார். ஒளிப்பதிவில் காட்சிக்கு காட்சி சபாஷ் வாங்குகிறார் கணேஷ் சந்திரா. ‘சாமியெல்லாம் கண்ண திறக்கல, நீதான் எனக்கு சாமி’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கதறும் காட்சி கண்களை ஈரமாக்குகிறது. முதல் பாதியில் அப்பாவித்தனமாகவும் இரண்டாவது பாதியில் ஆக்ரோஷமாகவும் அசத்துகிறார் விஜய்? ஆண்டனி. க்ளைமாக்ஸ் முன்பு மூன்று பசங்களுடன் விஜய் ஆண்டனி நடத்தும் சண்டைக்காட்சி விறுவிறுப்பின் உச்சம்!போலிஸ் சலீமிடம் நீ யார்? அல் கொய்தாவா? லஷ்கர் இ தய்பாவா? என தீவிரவாத இயக்கங்களை அடுக்கிக்கொண்டே போக... சலீம் என்பது வெறும் பெயர்தான். அந்தப் பெயர் உங்களை இவ்வளவு தூரம் யோசிக்க வைக்குமா? சரி... என் பெயரை விஜய் என்றோ, ஆண்டனி என்றோ வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும் வசனம் கைத்தட்ட வைக்கிறது. 

சமூகத்தின் அவலத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொங்கி எழும் சூப்பர் ஹீரோ கதைதான் சலீம் என்றாலும், அதை விறுவிறுப்போடும் சற்று வித்தியசமான காட்சியமைப்போடும் கையாண்டிருக்கிற இயக்குனர் வென்றுவிட்டார் என்பதில் சந்தேகமில்லை! படத்தின் முடிவில் ஊருக்கு ஒரு சலீம் இருக்கக்கூடாதா என்று எண்ணத்  தோன்றுகிறது...

சலீம் - சாகசம் நிகழ்த்துகிறான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக