செவ்வாய், 30 செப்டம்பர், 2014

அம்மா கிளிசரின் ! அழுதுவிடு இல்லையேல் பேருந்துகளைக் கொளுத்தி கடைகளை உடைத்து கல்லால் அடித்து அழ வைக்கப்படுவாய்!

ஜெயா - திரைத்துறைஅழு!
இல்லையேல்
அழ வேண்டி வரும்.
எதை நினைத்தாவது
எங்களோடு சேர்ந்து
அழுதுவிடு.
இல்லையேல்
பேருந்துகளைக் கொளுத்தி
கடைகளை உடைத்து
கல்லால் அடித்து
அழ வைக்கப்படுவாய்!
கண்ணையாவது கசக்கிவிடு…
இல்லையேல்
காவல் தெய்வம்
உன்னைக் கசக்கிவிடும்!

தின்ன சோற்றுக்கு
திரையுலகே தெருவுக்கு வந்து
“அன்னமிட்ட தாய்க்கு அநீதியா?!”
என்று ஆர்ப்பரிக்கையில்
கன்னத்தில் ஒருதுளி
கண்ணீர் வழியாவிட்டால்
நீ கண்காணிக்கப்படுவாய்.
ஆகையினால்,
உன் விதியை நினைத்தாவது
அழுதுவிடு!
தேம்பித் தேம்பி
பதவியேற்றவர்களின்
திருமுகத்தைப் பார்..
உனக்கும் அழுகை வரும்!
அழக்கூடிய மூஞ்சிகளா அவை?
அம்மாவின் அடிபணிந்து
அடங்கிப்போகும்
ஓருணர்ச்சியன்றி
வேறுணர்ச்சி அறியாத
அவர்களுக்கே அழுகை வரும்போது
உனக்கு வராதா என்ன?!
உடனே அழுதுவிடு!
இல்லையேல்
சந்தேகத்திற்குள்ளாவாய்!
மக்களைப் பொறுத்தவரை
சிக்கல் இல்லை,
தொலைந்துபோன ஒரு
செருப்பை நினைத்தால் கூட
உடனே அழுகை வரும்!
குடித்துக் குடல்வெந்து
இறந்துபோன மகனை நினைத்தவுடன்
அழுகை வரும்…
எப்படி அழுவது
என்று தெரியாமல்
தடுமாறும் வர்க்கமே,
‘அம்மாவை நினை’
உடனே அழுகை வரும்!
பதினெட்டு ஆண்டுகள்
வனவாசம் போன நீதிக்கு
அப்படியென்ன அவசரம்?
ஓ.பி.எஸ்-சும், இ.பி.கோ.-வும்
வேறு, வேறு என்று யார் சொன்னது?
அம்மா சொன்ன நீதிபதி…
அம்மா சொன்ன நீதிமன்றம் … …
அம்மா சொன்ன நீதி மட்டும் தராமல்… … …
அம்மாவுக்கு வரும்
கோபத்தை நினைத்தால்
அழுகை வந்தே தீரும்!
விடுதலைப் புலிகளால் உயிருக்கு ஆபத்து
எனத் தாயுள்ளத்தோடு தவிக்கும் அம்மாவை
விடுதலை செய்தால்தான்
நீதியான அரசு நிலைக்குமென
அற்புதத்தம்மாளே
தளுதளுக்கும்போது
நீ அழுது தொலைத்தால்தான் என்ன?
தனது வாழ்வுரிமையையே
பணயம் வைத்து
தமிழக வாழ்வுரிமைக்காக
அம்மாவை சிறை மீட்க
கண்ணீரைக் கனலாக்கும்
வேல்முருகனைப் பார்த்தாவது
அழுகை வராதா?
பேருந்துப் படிக்கட்டில்
பாட்டுப்பாடி, தொங்கிவரும்
மாணவர்களை
காலிகள் எனக் கருவலாம்,
கார்ப்பரேட் முதலாளிகளின்
கொள்ளைக்கு எதிராக
போராடும் மக்களை
“வேறு வேலையில்லை” என்று
முகம் சுளித்து ஒதுங்கிப்போகலாம்,,
ஆனால்,
சட்டப்படி கைதான அம்மாவுக்காக
சட்டத்தைக் கையில் எடுத்து
வெறியாடும் ரத்தத்தின் ரத்தங்களிடம்
அழுது காட்டுவதுதான்
நீ பிழைக்கும் வழி!
ஆகையால்
உன் நிலைமையை நினைத்து அழுதுவிடு!
லூயி போனபார்ட்டின்
டிசம்பர்-10 கும்பல்
கோழிக்கறி வாழ்க! கோமான் வாழ்க!
எனக் கூவியதைப்போல
அம்மாவின் தினசரிக் கும்பல்
அம்மா உணவகம், அம்மா குடிநீர்,
அம்மா லேப்டாப்.. என்று கத்துவது
உன் காதுகளுக்குக் கேட்கவில்லையா?
அதை நினைத்தாவது
அழுதுவிடு!
சட்டத்தின் ஆட்சியைக்
கரைத்துக் கொள்ள
அடிமைகளின்
விழிகளைப் பிதுக்கி
விழிநீர் எடுப்பதற்கு
அம்மா யாரைக் கேட்கவேண்டும்?
தமிழகமே அம்மாவினுடையது
என்று ஆனபிறகு
உன் கண்ணீர் மட்டும் உனக்கா சொந்தம்?
சட்டத்தை யாரும்
கையில் எடுக்கக் கூடாது!
அம்மாவே
நம் கண்ணில் எடுக்கிறார்…
அழுதுவிடு!
ஒன்று விழ வேண்டும்
இல்லை, அழ வேண்டும்!
அம்மாவின் ஜனநாயகத்திற்குள்
உனக்கு அவ்வளவுதான் வாய்ப்பு.
பாவம் …
என்ன செய்வாயோ.. .. … கண்ணே!
- துரை. சண்முகம் vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக