வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

Facebook கில் இந்தித் திணிப்பு – சிக்கியது மோடி அரசு

மோடி அரசு பதவி ஏற்ற அடுத்த நாள், அனைத்து அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும், பொதுத் துறை நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் டுவிட்டர், பேஸ்புக், கூகிள், யூடியூப், வலைப்பதிவுகள் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிகார பூர்வ கணக்குகளில் இந்திக்கு முன்னுரிமை கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. அகண்ட பாரதத்தை அமைப்பதற்கு முன், சிக்கிய இந்தியாவில் இந்தியைத் திணிக்கும் இந்துமதவெறியர்களின் இயல்பான முயற்சிக்கு நாடு முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்தது.
இதையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நாட்டின் அனைத்து மொழிகளையும் பரப்புவதற்கு அமைச்சகம் கடமைப்பட்டுள்ளது” என்று டுவீட் செய்தார். உள்துறை இணை அமைச்சர் கிரண் ராஜூ, அனைத்து துறைகளிலும், பொது வாழ்க்கையிலும் ஹிந்தியை முன்னிறுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என்றாலும் அது மற்ற மொழிகளை பின்தள்ளுவதாக அமையாது என்று உறுதியளித்தார். வஞ்சப் புகழ்ச்சி போல இது சமத்துவத்தின் பெயரில் நடைபெறும் நாடகம் என்பதை எத்தனை பேர் அறிவர்?

இந்த சுற்றறிக்கை தொடர்பாக உள்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தில் “அலுவல் மொழிக்கான துறை 1963 அலுவல் மொழி சட்டத்தின்படியும் 1976 அலுவல் மொழிகள் விதிமுறைகளின் படியும் அவ்வப்போது அலுவல் மொழிக் கொள்கையை அமல்படுத்த சுற்றறிக்கைகள் அனுப்பி வருகிறது. அதன்படி சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பிய சுற்றறிக்கையின் தொடர்ச்சியாக, மார்ச் மாதம் 10-ம் தேதி அனைத்து அமைச்சகங்கள், துறைகள், துணை அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஹிந்தி அல்லது ஹிந்தி-ஆங்கிலத்தை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி உள்துறை அமைச்சகம் மே 27 தேதியிட்ட சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது.” என்று விளக்கம் சொல்லியிருந்தது.
இந்த சுற்றறிக்கை இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டும்தான் பொருந்தும், இந்தி பேசாத மாநிலங்களுக்கு பொருந்தாது என்றும் கூறினார்கள்.
நேஷனல் புக் டிரஸ்ட்
இந்தி மயமாகும் நேஷனல் புக் டிரஸ்ட் பேஸபுக் பக்கம்
உண்மையில் நடைமுறை மாறியிருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய இந்தி பேசும், மற்றும் இந்தி பேசாதா மாநிலங்கள் அனைத்துக்கும் பொதுவான மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் (மனித வளத் துறை) கீழ் இயங்கும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் பேஸ்புக் கணக்கை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். இந்த நிறுவனம்தான் இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட இதர தேசிய மொழிகளில் பல்வேறு நூல்களை வெளியிடும் மிகப்பெரும் மத்திய அரசு நிறுவனம்.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இன்று வரையிலான 100 நிலைத்தகவல்களை எடுத்து அவை எந்த மொழியில் இடப்பட்டுள்ளன என்று ஆய்வு செய்தோம்.
இந்தி மொழி பயன்பாடு துலக்கமாக அதிகரித்த ஜூலை இறுதி வரையிலான கால கட்டத்துக்கு முன்னும் பின்னும் என இந்த நிலைத்தகவல்களை பிரித்துக் கொண்டால்,
ஜனவரி 27 முதல் ஜூலை 24 வரை (சுமார் 6 மாதங்களில்)
ஆங்கிலம்
53
72%
இந்தி
15
20%
மற்றவை
6
8%
மொத்தம்
74

ஜூலை 24 முதல் இன்று வரை (சுமார் 1 மாதம்) பேஸ்புக் நிலைத்தகவல்களின் நிலவரம்
ஹிந்தி
20
77%
ஆங்கிலம்
5
19%
மற்றவை
1
4%
மொத்தம்
26

அதாவது, மோடி நிர்வாகம் தனது முடிவுகளை செயல்படுத்த ஆரம்பித்த கால கட்டத்திலிருந்து பார்க்கும் போது அது வரை ஆங்கிலம் முதன்மையான மொழியாக (70%) இருந்த நிலை மாறி இந்தி முதன்மையான மொழியாக மாற்றப்பட்டு (77%), ஆங்கிலம் இரண்டாம் நிலைக்கு (19%) தள்ளப்பட்டுள்ளது.
நேஷனல் புக் டிரஸ்ட் இந்தித் திணிப்புஜூலை மாதத்துக்கு முன்பு இந்தி நூல்கள் பற்றிய நிலைத்தகவல்கள் இந்தியிலும், மற்ற நிலைத்தகவல்கள் ஆங்கிலத்திலும் இருந்தன. கடந்த ஒரு மாதத்தில் பொதுவான நிலைத்தகவல்கள் இந்தியிலும், ஆங்கில நூல்கள் பற்றிய நிலைத்தகவல்கள் மட்டும் ஆங்கிலத்திலும் என்று மாறியிருக்கிறது.
மோடி அரசு பதவி ஏற்ற நாளிலிருந்தே பார்த்தாலும், இந்தி, ஆங்கிலத்துக்கு நிகராக பாதிக்குப் பாதி இடத்தை பிடித்திருக்கிறது.
இந்த கால கட்டம் முழுவதிலும் தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளுக்கு நேஷனல் புக் டிரஸ்டின் சமூக வலைத்தள தகவல் பரிமாற்றத்தில் இடமே இல்லை.
இந்த 100 நிலைத்தகவல்களில் பல ஆங்கில, இந்தி நூல்கள் பற்றிய செய்திகள் உள்ளன. ஒரு உருது மொழி புத்தகம் பற்றிய நிலைத்தகவல் உள்ளது. மற்ற எந்த இந்திய மொழி பற்றியும் எந்தத் தகவலும் இல்லை.
சரி, 2012-13 ஆண்டு மத்திய அரசிடமிருந்து (நாடு முழுவதும் வாழும் மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணத்திலிருந்து) சுமார் ரூ 44 கோடி நிதி உதவி பெற்ற இந்நிறுவனம்  வெளியிடும் புத்தகங்கள் பற்றிய விபரங்களை ஆய்வு செய்தோம்.
2012-13ம் ஆண்டு வெளியிடப்பட்ட மொத்தம் 1,553 புத்தகங்களில் 25% மக்கள் பேசும் இந்தி (511), மராத்தி (460) மொழிகளுக்கு 63% இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. (இந்தி மொழி பேசுபவர்களில் ராஜஸ்தானி, போஜ்பூரி, அவதி, சத்திஸ்கரி மொழி பேசுபவர்களை சேர்க்காமல்).
மூன்றாவது இடத்தில் ஆங்கிலம் (244) சுமார் 16% பங்கை பெற்றிருக்கிறது.
ஆங்கிலம் - இந்தி
ஆங்கில தகவலுக்கு இந்தியில் பதில்.
26 கோடி மக்கள் (17% மக்கள் தொகை) பேசும் வங்க மொழி (83), பஞ்சாபி (56), அசாமிய மொழி (48), உருது (45), குஜராத்தி (34) ஆகிய மொழிகளிலான புத்தகங்கள் சுமார் 17% இடத்தை மட்டும் பிடித்திருக்கின்றன.
ஒடியா (19), தெலுங்கு (16), மலையாளம் (10), தமிழ் (9), கன்னடம் (9), ஆகிய மொத்தம் 24 கோடி மக்கள் (20% மக்கள் தொகை) பேசும் பெரிய தேசிய மொழிகளுக்கு மொத்தம் 63 புத்தகங்கள் (4%) என ஏதோ போகிற போக்கில் பங்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, தென்னிந்திய மொழிகளை புறக்கணித்து இந்தி, மராத்தி மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இந்தி, ஆங்கில மொழி புத்தகங்களைத் தவிர பிற மொழி புத்தகங்கள் குறித்து நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் பேஸ்புக்கில் பேசவே இல்லை என்பது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 100 நிலைத்தகவல்களில் தெரிய வருகிறது.
அனைத்தையும் இந்தி மயமாக்குவதற்கான உதாரணமாக நிலைத்தகவல் ஒன்றை குறிப்பிடலாம். சென்ற மாதம், லூதியானாவிலிருந்து நேஷனல் புக் டிரஸ்ட்டின் நகரும் புத்தகக் கண்காட்சியை புகைப்படங்கள் எடுத்து, ஆங்கில தகவலுடன் அனுப்பி வைத்திருக்கிறார் ஜிதேந்தர் சிங் நேகி என்பவர். ஆனால், பேஸ்புக்கில் அதை பகிர்ந்து கொண்ட நேஷனல் புக் டிரஸ்ட் அதற்கான பதிலை இந்தியில் எழுதியிருக்கிறது.
இதிலிருந்து இந்து-இந்தி-இந்தியா என்ற கொள்கையை பின்பற்றும் மோடி அரசு பதவி ஏற்ற பிறகு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்திய நாட்டில், பெரும்பான்மை மக்களின் தேசிய மொழிகள் ஏற்கனவே புறக்கணிக்கப்பட்டு வரும் நிலை தொடர்வதோடு, இந்தித் திணிப்பு இன்னும் தீவிரமாக்கப்படுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.
இந்த தமிழ் விரோத, ஜனநாயக விரோத இந்துமதவெறி அரசைத்தான் திராவிடத்தை தனது கட்சி பெயரில் தக்க வைத்திருக்கும் வைகோ என்ற சந்தர்ப்பவாதி ஆதரித்தார், ஆதரிக்கிறார். இந்த பாஜகவைத்தான் விகடன், தினமலர், குமுதம், தினமணி, தி இந்து உள்ளிட்ட ஊடகங்கள் தலையில் வைத்து கொண்டாடுகின்றன. இன்னொரு புறம் இதே ஊடகங்கள்தான் தமிழுக்காக கவலைப்படுவதாக வேறு நடிக்கின்றன.
பாஜக அரசு இந்தியை திணிக்கவில்லை என்றெல்லாம் பல்வேறு அறிஞர் பெருமக்கள் சத்தியமடிக்காத குறையாக சாதித்தார்கள். ஆனால் உண்மை நிலை என்ன என்பது இந்த கட்டுரையை படிக்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும்.
“இந்து ராஷ்டிரம்” என்பதற்கான முன்னறிவிப்புதான் இந்த இந்தித் திணிப்பு. இதை தமிழக மக்கள், தமிழார்வலர்கள், ஜனநாயக அமைப்புகள் அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.
பாஜக மற்றும் அதற்கு பல்லக்கு தூக்கும் துரோகிகளை இனம் காண வேண்டும்.
இணைப்பில் உள்ள சுவரொட்டிகளை பரவலாக பகிருமாறும், நேஷனல் புக் ட்ரஸ்ட் ஃபேஸ் புக் பக்கத்திற்கு சென்று கருத்து பதிவு செய்யுமாறும் கோருகிறோம். vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக