வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

அண்ணாசாலையில் மாணவர்கள் கத்தி வாளுடன் மோதல் ! சினிமாக்காரன் தந்த கல்வி இதுதான் ! மக்கள் பீதியில் ஓடினர் !

சென்னை அண்ணாசாலையில் கத்தியுடன் மாணவர்கள் மோதல்
சென்னை அண்ணாசாலை கேசினோ தியேட்டர் அருகில் பிளாக்கர்ஸ் ரோடு சந்திப்பில் நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள் ‘18 கே’ மாநகர பஸ்சில் வந்து இறங்கினர். சிறிது நேரத்தில் மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர் ‘27எல்’ அரசு பஸ்சில் அங்கு வந்தனர். அப்போது இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.சென்னையில் மாணவர்கள் மோதலை தடுப்பதற்காக அவர்கள் செல்லும் பஸ் வழித்தடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடுமாறு கமிஷனர் ஜார்ஜ் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார். இதன்படி இணை கமிஷனர் சங்கர், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் கிரி ஆகியோரது மேற்பார்வையில் அண்ணாசாலை பகுதியிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.2 கல்லூரி மாணவர்கள் திரண்டு மோதலில் ஈடுபடும் தகவல் கிடைத்ததும் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்றனர்.அதற்குள் நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள் 7 பேர் கையில் கத்தியை எடுத்துக்கொண்டு மாநிலக் கல்லூரி மாணவர்களை விரட்டினர். பரபரப்பான அண்ணாசாலையில் நடைபெற்ற இச்சம்பவத்தை கண்டு பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துபோனார்கள்.


இதைத்தொடர்ந்து ரோந்து போலீசார் குணசேகரன், தெய்வீகன் ஆகிய இருவரும் துணிச்சலுடன் மாணவர்களை விரட்டிச் சென்றனர். போலீசார் விரட்டுவதை பார்த்ததும் நந்தனம் கல்லூரி மாணவர்கள் ஆளுக்கொரு திசையாக பிரிந்து தப்பிக்க முயன்றனர். ஆனால் போலீசார் விரட்டி சென்று மாணவர் ஒருவரை மடக்கி பிடித்தனர். அவரது பெயர் பார்த்தசாரதி (19). எம்.கே.பி. நகரை சேர்ந்த இவர் நந்தனம் கலைக்கல்லூரியில் பி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.
அவரிடம் இருந்து 2 அடி நீள கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. சரியான நேரத்தில் போலீசார் மாணவர்களை மடக்கி பிடிக்காமல் விட்டிருந்தால் அண்ணாசாலையில் இன்று மதியம் கொலை சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கும். இதனை தடுத்து நிறுத்தி மாணவர் ஒருவரையும் மடக்கி பிடித்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
மாணவர் பார்த்த சாரதியின் நணபர்களான மற்ற 6 பேரும் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய மாணவர்களில் மணி, சுதர்சன், திவாகர், குரு, பிரவீன் ஆகிய 5 பேர் அடையாளம் தெரிந்துள்ளது. அவர்களை பிடிக்க வலைவிரிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் இதுபோன்ற தொடர் மோதல்களை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக