திங்கள், 25 ஆகஸ்ட், 2014

மெட்ரிக் கொலைக்கூடங்கள்! தனியார் கல்வி கொள்ளைக்கு முடிவில்லையா ?

ஹேமலதாதனியார் கல்விக்கொள்ளைக்கு பலியான இளந்தளிர்கள் – சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவி ஹேமலதா
குடந்தை பள்ளித் தீயில் தனது பிள்ளையைப் பறிகொடுத்த ஒரு தாய், நீதிமன்ற வளாகத்தில் தன்னைத்தானே நொந்து புலம்பிக் கொண்டிருந்தாள். குடந்தை கிருஷ்ணா பள்ளி உரிமையாளரின் மனைவி, ஆங்கில வழிக்கல்வி, தரமான கல்வி என்ற ஆசை காட்டியதையும், அதற்கு மயங்கி தன் பிள்ளையை அங்கு சேர்த்து நெருப்புக்கு பலி கொடுத்து விட்டதையும் நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தாள் அந்தத் தாய். தனியார் கல்விக்கொள்ளைக்கு பலியான இளந்தளிர்கள் – புதுக்கோட்டை குரும்பக்காடு, லாரல் மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவன். அருண்ராஜ்
பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. அன்று குடந்தைப் பள்ளிக்கு தேடிச்சென்று ஆள் பிடித்தார்கள் என்றால், இன்றைக்கு பெற்றோர் தனியார் மெட்ரிக் பள்ளிகளைத் தேடிச் சென்று தமது பிள்ளைகளை விட்டில் பூச்சிகளா கருகக் கொடுக்கிறார்கள். மாணவர் தற்கொலை அல்லது மர்ம மரணம் என்ற செய்தி இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது.

அருண்ராஜ்கடந்த ஜூலை-9 அன்று, கடலூர் செயிண்ட் ஜோசப் கல்வி குழுமத்தின் தனியார் கலை – அறிவியல் கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு பயின்றுவந்த மாணவர் ராம்குமார், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதே கல்லூரியில் போஸ், ஆல்வின் ஜோஸ், பரதன் ஆகிய மாணவர்களின் மர்ம மரணத்தை தொடர்ந்து இது அடுத்த மரணம். நிர்வாகம், இது தற்கொலை என்றது. புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் பொதுமக்களை அணிதிரட்டிச் சென்று சம்பவம் நடந்த அறையின் பூட்டை உடைத்தனர். பூட்டிய அறைக்குள் இருந்த இரத்தச் சிதறல்களும், சுவர்களில் படிந்திருந்த இரத்தக் கறைகளும் ராம்குமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதை உறுதிப்படுத்தின. போலீசு வழக்கு பதிவு செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என்று போராடிய மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டு, 6 தோழர்கள் சிறை வைக்கப்பட்டனர். ஆனால், நிர்வாகத்தினர் யாரும் கைது செய்யப்படவில்லை.
ஜூன் 27 அன்று, சென்னை, திருவொற்றியூரில் ஸ்ரீ சங்கர வித்யாலயா கேந்திரா மெட்ரிக் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி வைஷ்ணவி மாலை வீடு திரும்பவில்லை; பள்ளியில் தன் பிள்ளை இருக்கிறதா என்று தேடவும் பெற்றோர்கள் அனுமதிக்கப்படவில்லை. இரவு 7.30 மணிக்கு பள்ளியின் ஒவ்வொரு அறையாக பெற்றோர் தேடிக்கொண்டிருக்கும்பொழுதே, மர்மமான முறையில் மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்து தம் பெற்றோர்கள் கண்ணெதிரிலேயே துடிதுடித்து இறந்துபோனாள் வைஷ்ணவி. இங்கும் பு.மா.இ.மு தோழர்கள் தலையிட்டு போராட்டம் நடத்திய பின்னர்தான் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நிர்வாகத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை.
ராம்குமார்
தனியார் கல்விக்கொள்ளைக்கு பலியான இளந்தளிர்கள் – கடலூர் செயின்ட் ஜோசப் கலை – அறிவியல் கல்லூரி மாணவர் ராம்குமார்.
புதுக்கோட்டை குரும்பக்காடு, லாரல் மேநிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவன் அருண்ராஜ், சென்னை மணலி – சி.பி.எல். நகர் தனியார் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி பூஜா ஆகியோர் உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக பள்ளி நிர்வாகத்தால் அவமானப்படுத்தப்பட்டு, அதன் விளைவாகத் தற்கொலை செய்து கொண்டனர்.
நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் அருண்குமாரும்; கூடுவாஞ்சேரியிலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் தமிழரசனும்; திருச்சி காட்டூர் மான்போர்டு பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டனர். காரணம், தேர்வில் மதிப்பெண் குறைவாகப் பெற்றதால், மாற்றுச்சான்றிதழ் வாங்கிக் கொண்டு வேறு பள்ளிக்குச் செல்லுமாறு நிர்வாகம் அளித்த மிரட்டல்.
இவை மட்டுமல்ல, கடந்த சில மாதங்களில் மட்டுமே இன்னும் பல மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அத்தனையும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. எந்தவொரு சம்பவத்திலும் இத்தகைய அநியாய மரணம் குறித்து பள்ளி நிர்வாகங்கள் வருத்தமோ அதிர்ச்சியோ அடையவில்லை. பெற்றோர் வந்து கதறினாலும் இவர்களது கல்மனம் கரைவதில்லை.
நாமக்கல் ராசிபுரம் வட்டாரத்தில், ஊருக்கு வெளியே பொட்டல் காட்டில், பல நூறு ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ள பிராய்லர் பள்ளிகளில் மாணவர்களின் மர்ம மரணங்கள் மிகவும் சகஜமாகிவிட்டன. மாணவனின் உடலை மருத்துவமனையில் கொண்டு வந்து போட்டு, சவப்பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்துவிட்டுத்தான், பெற்றோருக்கு சாவுச்செய்தியையே தெரிவிக்கின்றன பள்ளி நிர்வாகங்கள். பெற்றோர் குமுறினாலும் கொந்தளித்தாலும் அனைத்தும் மருத்துவமனை வளாகத்தில்தான். அதிகபட்சம் அங்கேயே சாலை மறியல் செய்யலாம். போலீசு வந்து அப்புறப்படுத்தும் வரை கத்திவிட்டு பிறகு ஓய்ந்து போவதைத் தவிர பெற்றோருக்கு வேறு வழி கிடையாது. சம்பந்தப்பட்ட பள்ளிகளோ எதுவுமே நடக்காதது போல இயங்கிக் கொண்டிருக்கும். இது மிகையான கூற்று அல்ல.

தனியார் கல்விக்கொள்ளைக்கு பலியான இளந்தளிர்கள் – சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவி ஹேமலதா
ஜூலை, 16, 2007 அன்று திருச்செங்கோடு வித்ய விகாஷ் பள்ளியின் +1 மாணவி திவ்யா, இரவு நேர வகுப்புக்கு வரவில்லை என்பதற்காக விடுதி வார்டனால் அடிக்கப்பட்டு இறந்திருக்கிறாள். போலீசு கொடுத்த அறிக்கையை சம்மந்தப்பட்ட நீதிபதிக்கு அனுப்பவேண்டுமென்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும் கடந்த 7 ஆண்டுகளாக எதுவும் நடக்கவில்லை. திவ்யாவின் தந்தை நித்தியானந்தனின் விடாமுயற்சியின் விளைவாக, ஜூலை3, 2014 அன்று சென்னை உயர்நீதி மன்றம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
டிச, 21, 1999 அன்று சின்னசேலம் செயின்ட் லிட்டில் பிளவர் மழலையர் பள்ளியில் படித்து வந்த தனது 5 வயது மகன் சுரேஷை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக அன்று மாலை பள்ளிக்குச் சென்றபோது, பிள்ளையைக் காணவில்லை. பள்ளி நிர்வாகம் தங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டது. இரண்டு நாட்களுக்குப் பின் பள்ளியிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள கிணற்றில் அந்தச் சிறுவனின் உடலை உறவினர்கள் கண்டெடுத்தனர். பள்ளியில் உள்ள பாதுகாப்பற்ற தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த சிறுவனின் உடலை நிர்வாகம் கிணற்றில் வீசியிருப்பது தெரியவந்தது. ஆத்திரமுற்ற மக்கள் பள்ளிக்கு எதிராகப் போராடினர். சிறுவனின் தந்தை 2003-ல் உயர்நீதி மன்றத்தில் மனுச் செய்தார். போலீசோ, கல்வித்துறை அதிகாரிகளோ நீதிமன்றத்துக்கும் பதிலளிக்கவில்லை. தங்கள் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளே இல்லையென்றும், அந்த மாணவன் தங்கள் பள்ளியில் படிக்கவே இல்லையென்றும் நீதிமன்றத்தில் வாதாடியது பள்ளி நிர்வாகம். அது பொய்யென்று அம்பலமானதால், அம்மாவட்ட போலீசு சூப்பிரெண்டு வழக்கை விசாரிக்கவேண்டுமென்றும், அலட்சியம் காட்டிய தமிழக அரசு 3.75 லட்சம் நிவாரணம் தரவேண்டுமென்றும், அக்குழந்தை செத்து 15 ஆண்டுகளுக்குப் பின் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
“மாணவர் மரணங்கள் போலீசு நிலையத்தில் நிகழும் கொட்டடிக் கொலைகளுக்கு ஒப்பானவை. பள்ளி – கல்லூரி நிர்வாகத்தை நம்பித்தான் பெற்றோர் தமது பிள்ளையை ஒப்படைக்கின்றனர். கொட்டடிக் கொலைகளுக்கு எப்படி போலீசைப் பொறுப்பாக்குகிறோமோ அதுபோல, பள்ளி தாளாளர்களையும், கல்லூரி முதல்வர்களையும்தான் இந்த மரணங்களுக்குப் பொறுப்பாக்கி சிறையிலடைக்க வேண்டும்.” என்கிறார் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜு.
தட்சிணாமூர்த்தி
விருத்தாச்சலம், விருதகிரி எஜுகேஷனல் டிரஸ்ட் மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறையிலேயே தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட அப்பள்ளியின் +2 மாணவன் தட்சிணாமூர்த்தி.
கைதிகளை போலீசார் வளைத்துப் பிடித்துச் செல்கின்றனர். பிள்ளைகளைப் பெற்றோர்களே விரும்பி ஒப்படைக்கின்றனர் என்ற வேறுபாட்டைத் தவிர, போலீசு நிலையத்துக்கும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. குற்றவாளிகளிடமிருந்து எத்தகைய கொடூரமான வழிமுறைகளைக் கையாண்டாவது, தாங்கள் விரும்பும் வகையில் உண்மையை வரவழைக்க போலீசு முயற்சிப்பதைப் போலத்தான், மாணவர்களிடமிருந்து மதிப்பெண்களை வரவழைக்க முயற்சிக்கின்றன இத்தகைய பள்ளிகள். இந்த முயற்சியில் மாணவன் அடிபட்டு செத்தாலும் சரி, அல்லது உளவியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டாலும் சரி, அதுபற்றி பள்ளி நிர்வாகங்கள் கவலைப்படுவதில்லை.
சிறையிலிருக்கும் தூக்கு தண்டனைக் கைதியைக் கூட மனுப்போட்டு பார்த்துவிடலாம் நாமக்கல் உறைவிடப்பள்ளியில் படிக்கும் சொந்தப் பிள்ளையைக்கூட பெற்றோரால் அவ்வளவு எளிதில் பார்த்து விடமுடியாது. இருந்த போதிலும், அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமென்ற தங்களது இலட்சியத்தைப் பிள்ளை நிறைவேற்ற வேண்டுமானால், இத்தகைய கட்டுப்பாடுகளைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டுமென்று பல முட்டாள் பெற்றோர்கள் நினைக்கின்றனர்.
நாமக்கல் சாலை மறியல்
நாமக்கல் பிராய்லர் பள்ளியொன்றில் 9-ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் இறந்து போனதையடுத்து நாமக்கல் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் நடத்திய சாலைமறியல் போராட்டம்.
மாட்டுக்கு ஊசி போட்டு பால் கறப்பதைப் போல, கறிக்கோழிக்கு எடை கூட்டுவதைப் போல, எப்படியாவது மாணவர்களின் மதிப்பெண்ணைக் கூட்டவேண்டும். அதை நாளேடுகளில் விளம்பரம் செய்து, அடுத்த ஆண்டுக்கான கட்டணக் கொள்ளையை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே தனியார்பள்ளிகளின் நோக்கம். அரசுப்பள்ளிகளில் தேர்வின் போது சில மாணவர்கள்தான் பிட் அடிப்பார்கள் என்றால், இப்பள்ளிகளில் நிர்வாகமே அதற்கு ஏற்பாடு செய்து தருகின்றது. லஞ்சம் கொடுத்து தேர்வுக்கு வருகின்ற கண்காணிப்பாளர்களைச் சரிக்கட்டுகிறது.
கொள்ளை இலாபத்துக்காக உணவுப்பொருளில் கலப்படம் செய்யும் வியாபாரியைப் போல, பொதுச்சொத்தைத் திருடுவதற்காக ஆவணங்களை போர்ஜரி செய்யும் கிரிமினலைப் போலத்தான் மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள் நடந்து கொள்கின்றன. இவர்கள் நேர்மையானவர்களாக இருக்க முடியாது. ஆற்றுமணல் கொள்ளையன் ஆறுமுகசாமி, கனிம மணல் கொள்ளையன் வைகுண்டராசன், கிரானைட் கொள்ளையன் பழனிச்சாமி ஆகியோரைப் போல இவர்கள் கல்விக்கொள்ளையர்கள். அந்தத் தொழில்களைப் போலவே இவற்றிலும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதலீடு செய்திருக்கிறார்கள். அல்லது முதலீடு செய்தவர்கள் அதனைப் பாதுகாத்து வளர்ப்பதற்காக அரசியல்வாதியாகவும் ஆகிவிடுகிறார்கள்
இலஞ்சம், ஊழல், போர்ஜரி, கள்ளக்கணக்கு, கொலை உள்ளிட்ட அனைத்தும் இந்தத் தொழிலின் அங்க லட்சணங்கள். ஆற்று மணலாவது அள்ள அள்ளக் குறையும். கல்வித்தொழில் என்பது அள்ள அள்ளப் பணம் ஊறும் கேணி. வேலைவாப்பின்மையால் போட்டியும், எதிர்காலம் குறித்த அச்சமும் மாணவர்களிடம் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு இவர்களின் கொள்ளையும் அதிகரிக்கிறது.
மெட்ரிக் கொலைக் கூடங்கள்
நாடு முழுதும் ஆண்டொன்றுக்கு 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் உருவாகின்றனர். இது சீனாவிலும் அமெரிக்காவிலும் சேர்த்து ஒரு ஆண்டில் உருவாகும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையை விட அதிகம். இந்தியாவில் ஆண்டுக்கு அதிகபட்சம் 1.5 லட்சம் பொறியியல் வேலைவாய்ப்புகள்தான் உருவாக்கப்படுகின்றன. உண்மைநிலை இவ்வாறு இருந்தும் காம்பஸ் இன்டர்வியூ, பிளேஸ்மென்ட் உறுதி என்று தொலைக்காட்சியில் மோசடியாக விளம்பரம் கொடுக்கின்றன பொறியியல் கல்லூரிகள். பொறியியல் கல்லூரியில் இடம் பிடிக்க வேண்டுமானால், எங்கள் பள்ளியில் சேருங்கள் என்று கடை விரிக்கின்றன மெட்ரிக் பள்ளிகள். ஒரு மாணவனைச் சேர்த்து விட்டால் இத்தனை ஆயிரம் கமிசன் என்று அலைகிறார்கள் தரகர்கள்.
தனியார் கல்வி என்று கவுரவமாக அழைக்கப்படும் இந்தத் தொழிலின் யோக்கியதை இதுதான். அப்பட்டமான பகற்கொள்ளை என்று தெரிந்தும் அரசு இதனை ஊக்குவிக்கிறது. காரணம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்திலும் தனியார்மயம், தாராளமயம் என்பதே அரசின் கொள்கை. அதனால்தான், மாணவர்களின் தற்கொலைகள், மர்ம மரணங்கள் நாள்தோறும் நடந்தாலும், அரசு அவர்களுடைய குற்றங்களை மூடி மறைக்கிறது. பெயரளவில் கூட நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. தனியார்மயத்தால் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதைப் போலவே, மனித வளமான இளைய தலைமுறையும் சூறையாடப்படுகிறது.
கல்வியை வணிகமாக நடத்தும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தையும் ஒழிப்பதும், கல்வி வழங்குவது அரசின் கடமை என்பதை நிலைநாட்டுவதும்தான் மாணவச் செல்வங்களை மரணத்திலிருந்து காப்பாற்றும்   vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக