திங்கள், 25 ஆகஸ்ட், 2014

மைக்கேல் பிரௌன் ! அமெரிக்க மனசாட்சி நீதி வழங்குமா ?

மைக்கேல் ப்ரௌன் 18 வயதே ஆன அமெரிக்க கருப்பின இளைஞன். அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்திற்கு உட்பட்ட செயின்ட் லூயிஸ் பகுதியில் அமைந்துள்ள பெர்குசன் நகரத்தைச் சேர்ந்தவர். மைக்கேல் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி இரவு தன் பாட்டி வீட்டிற்கு நண்பன் டோரியன் ஜோன்சனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த டேரன் வில்சன் என்கிற வெள்ளையின போலீசு அதிகாரி, இந்த இளைஞர்களைத் தடுத்து நிறுத்துகிறார்.

பெர்குசன் போலீஸ்
மைக்கேல் பிரவுன் கொல்லப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை தாக்கும் பெர்குசன் போலீஸ்
கருப்பர்கள், வெள்ளை போலீசு அதிகாரிகளால் சோதனை என்கிற பெயரில் துன்புறுத்தப்படுவது அமெரிக்காவில் வழமையானது தான். தெருவில் நடமாடாமல் உடனடியாக ஓடிப் போகுமாறு ஆத்திரமாக கூச்சலிடுகிறார் டேரன் வில்சன். அவருக்கு பதிலளித்த மைக்கேல், தாங்கள் செல்லும் இடம் அருகில் தான் இருப்பதாகவும், சீக்கிரம் சென்று விடுவோம் என்றும் பதில் அளித்துள்ளார்.
தனது உத்தரவிற்கு கீழ்ப்படியாமல் ஒரு கருப்பினத்தவன் எதிர்வாதம் புரிந்து கொண்டிருப்பதைக் கண்டு ஆத்திரமுற்ற போலீசு அதிகாரி, அவரது ரோந்து காரின் முன்பக்க ஜன்னலின் வழியே மைக்கேலின் சட்டையைப் பிடித்து இழுத்துள்ளார். அவரிடமிருந்து போராடி விடுவித்துக் கொண்ட மைக்கேல் உடனடியாக தனது நண்பனை அழைத்துக் கொண்டு ஓடியிருக்கிறார். ஆத்திரம் தலைக்கேறிய டேரன் வில்சன் காரில் இருந்து வேகமாக இறங்கி, முன்னே பத்து மீட்டர் தொலைவில் ஓடிக் கொண்டிருந்த மைக்கேலை தனது பிஸ்டலால் இரண்டு ரவுண்டுகள் சுடுகிறார்.
குண்டடிபட்ட மைக்கேல் கைகளை உயர்த்தியவாறே தன்னிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். மைக்கேலின் கதறல்களைக் காதில் போட்டுக் கொள்ளாத வில்சன், நிராயுதபாணியாக நின்று கொண்டிருந்த அந்த இளைஞனை நோக்கி மேலும் நான்கு முறை துப்பாக்கியால் துளைக்கிறார். ஆறு குண்டுகளை உடலில் தாங்கி கீழே சரியும் மைக்கேல் ப்ரௌன் அதே இடத்தில், அடுத்த மூன்று நிமிடங்களில் உயிர் துறக்கிறார்.
மைக்கேலின் மரணம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. பெர்குசன் பகுதி கருப்பின மக்கள் அடர்த்தியாக வாழும் கெட்டோ (Ghetto) எனப்படும் சேரியைக் கொண்டதாகும். அவர்களில் அனேகர் வெள்ளை இனவெறியால் கல்வி, வேலை வாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட ஏழைகள். மைக்கின் குடும்பமும் ஒரு ஏழைக் குடும்பம் தான். மைக் அப்பொழுது தான் பள்ளிக் கல்வியை  முடித்துவிட்டு, குளிர்சாதனங்கள் பழுது பார்க்கும் தொழில்நுட்பத்தை கற்று வந்தார்.
ஆர்ப்பாட்டம்
“எனது கருப்பு நிறம் ஒரு ஆயுதமல்ல”
மிசௌரி மாகாணம் வெள்ளை இனவெறிக்குப் பெயர் போன பகுதிகளில் ஒன்று. 1860-களில் தீவிரமடைந்திருந்த அமெரிக்க உள்நாட்டுப்போர் காலத்தில் கருப்பின அடிமை முறையை தக்க வைத்துக் கொள்ள போர் புரிந்த தென்மாநிலங்களில் ஒன்று மிசௌரி.  பின்னர் 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தின் வெள்ளை இனவெறி பயங்கரவாதக் குழுவான கூ க்ளக்ஸ் கிளான் செல்வாக்கு இந்தப் பகுதியில் மிகுந்திருந்தது. நியோ நாஜிகளின் வெளிப்படையான செயல்பாடுகள் மிகுந்த இப்பகுதியில் தற்போது கன்சர்வேட்டிவ் சிட்டிசன் கவுன்சில் என்கிற கவுரவமான பெயரில் பழைய கூ கிளக்ஸ் கிளான் மற்றும் நியோ நாஜிகள் வெளிப்படையாக வெள்ளை இனவெறி பேசி வருகிறார்கள்.
இந்தியாவில் பார்ப்பனியத்தின் பிடியில் தலித்துகள் – பழங்குடி மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு சற்றும் குறையாத சித்திரவதைகளை அமெரிக்க கருப்பினத்தவர்கள் வெள்ளை இனவெறியின் கீழ் அனுபவித்து வருகிறார்கள்.
வரலாற்று ரீதியில் கருப்பின மக்கள் அனுபவித்து வந்த இனவெறிக் கொடுங்கோன்மை அவர்களிடையே கோபாவேச உணர்வைத் தோற்றுவித்திருந்தது. மைக்கின் மரணம் காய்ந்து கிடந்த சருகுகளின் மேல் மின்னல் போல பாய்ந்ததற்கு ஒப்பான விளைவை உடனடியாகவே ஏற்படுத்தியது. கருப்பின மக்கள் இந்த முறை தனித்து விடப்படவில்லை; அவர்களோடு  ஜனநாயகவாதிகளும், நிறவெறி எதிர்ப்பாளர்களும் கைகோர்த்தனர். அவற்றில் வெள்ளையின மக்களும் அடக்கம். ஃபெர்குசன் பகுதி மக்கள் ஒன்று கூடி மைக்கின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிப் பேரணி ஒன்றை  நடத்தினார்கள்.
ஆனால் போலிஸ் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் இந்தக் கொலையை எப்படி மூடி மறைப்பது என்பதில் கவனமாக இருந்தார்கள். நடந்த படுகொலை பற்றி முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாமல், சாட்சிகளை விசாரிக்காமல் பாராமுகம் காட்டிய போலீசு நிர்வாகம், ஊடகங்களில் மாறுபாடான குழப்பமான செய்திகள் வெளியாகுமாறு பார்த்துக் கொண்டது. முக்கியமாக மைக்கை கொன்ற போலிஸ்காரன் யார் என்ற தகவலைக் கூட தெரிவிக்காமல் மறைத்து கொலைகாரனைக் கைது செய்யாமல் பாதுகாத்தனர்.
ஆர்ப்பாட்டம் செய்பவரை கைது செய்யும் போலீஸ்
ஆர்ப்பாட்டம் செய்பவரை அடித்துக் கைது செய்யும் போலீஸ்
போலீசின் அதிகாரத்துவ திமிர் மக்களிடையே ஆத்திரத்தை உண்டாக்குகிறது; மெல்ல மெல்ல போராட்டங்கள் வலுத்து சில நூற்றுக்கணக்கில் கூடிய போராட்டக் கூட்டம், சில ஆயிரங்களாக வளர்ந்தது. போராட்டம் பெரிதாகப் பெரிதாக மைக்கின் அநியாய மரணம் குறித்த செய்திகள் பிற பகுதிகளுக்கும் பரவுகிறது. உடனடியாக போராட்டத்தை அடக்கி, விவகாரத்தை அமுக்கி விட எத்தனித்த போலீசு, போராட்டம் நடந்த இடங்களில் கூடியிருந்த மக்களை அடித்து துவைத்தனர்.
ந்த நிலையில் தான் ஆகஸ்ட் 17-ம் தேதி இரவு, மைக்கின் மரணத்திற்க்கு நீதி கேட்டு ஒரு அமைதியான ஊர்வலம் பெர்குசன் நகரில் நடந்தது. ஆரம்பத்தில் இருந்தே போலிசார் பல கெடுபிடிகளை செய்ய தொடங்கினார்கள். குறிப்பாக ஊடகங்கள் மூலம் விவகாரம் நாட்டின் பிற பகுதிகளுக்கு உண்மை சென்று சேர்வதைத் தடுக்க பத்திரிகையாளர்களைக் குறிவைத்தனர்.
பேரணியின் நடுவே செய்தி சேகரித்துக் கொண்டிருந்த கார்க் ஆக்ஸ் ரேடியோவின் நிருபர் முஸ்தபா உசைனை பார்த்து போலிஸ்காரர் ஒருவர், “கேமரா விளக்குகளை அணைத்து விட்டு  வெளியே போ, இல்லையென்றால் கொன்று விடுவேன்” என மிரட்டியுள்ளார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வெளிவந்து பரபரப்பு தொற்றிக் கொண்டது, மெல்ல பிற நிருபர்களும் அந்த இடத்தில் தாங்கள் போலிஸாரால் மிரட்டப் பட்ட விடயத்தை பகிர ஆரம்பித்துள்ளனர்.
அமெரிக்காவில் புகழ் பெற்ற எம்எஸ்என்பிசி செய்திச் சேனலின் முக்கிய செய்தியாளரான கிறிஸ்டபர் ஹேயிஸ் போரட்டங்களை பற்றி தகவல் சேகரிக்கச் சென்ற போது, போலிசாரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் இன்னொரு பிரபல பத்திரிகையான பைனான்ஸியல் டைம்ஸ் நிருபர் நீல் முன்ஷி, தன்னை போலிசார் மிரட்டியதாகவும் கைது செய்து பின்னர் விடுவித்ததாகவும்,  டிவிட்டரில்  பகிர்ந்துள்ளார்.
ராணுவமா, போலீசா?
ராணுவமா, போலீசா?
அதே போல் செய்தி சேகரிக்கச் சென்ற வாஷிங்டன் போஸ்ட்  நிருபர் வைஸ்லே லோவ்ரி மற்றும் ஹஃபிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபர் ரேயன் ரேய்லியை உணவகம் ஒன்றில் சாப்பிட்டு கொண்டிருந்த போதே மடக்கிய போலிசார், கைது செய்து பின்னர் விடுவித்தனர். பல பத்திரிகையாளர்கள் போராட்டம் நடந்த இடங்களுக்குச் செல்லவோ, செய்தி சேகரிக்கவோ முடியாதபடி காவல் துறையினரால் தடுக்கப்பட்டுள்ளனர். விஷயம் தேசிய அளவில் வெளிச்சத்திற்கு வந்த பின் பவிசான ஜனநாயக முகமூடிக்குள் ஒளிந்திருந்த அமெரிக்க வெள்ளை இனவெறியின் உண்மை மூஞ்சி அம்பலத்திற்கு வந்தது.
இவ்வளவிற்கும் இந்த ஊடகங்கள் அமெரிக்க வல்லரசின் ஊதுகுழல்களாகத்தான் இயங்கி வருகின்றன. எனினும் அங்கே அமெரிக்க வல்லரசின் பண்பாட்டு முகமான வெள்ளை நிறவெறிக்கு எதிராகவும், போலீசை அம்பலப்படுத்தியும் செய்தி வருவது கூட சாத்தியமற்ற நிலை இருக்கிறது. இங்கே இந்துமதவெறியர்களால் மிரட்டப்படும், தாக்கப்படும் முசுலீம் மக்கள் குறித்த செய்திகளுக்கும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.
வேறு வழி இல்லாத போலிஸ், கொலை செய்த  காவலரை கைது செய்துவிட்டதாகவும், அவரின் பாதுகாப்பு கருதி அவர் பெயரை வெளியிட மாட்டோம் எனவும் கூறியது. இதற்குள் ஃபெர்குசனில் பற்றிய நெருப்பின் புகை அமெரிக்காவின் பிற பகுதிகளுக்கும் பரவி, ஜனநாயகவாதிகளும் சில ஊடகங்களும் போலீசாரைக் கடுமையாக விமர்சிக்கத் துவங்கினர்.
இதற்கிடையே கைதான காவலர் “வில்சன்” பற்றிய மேல் விவரங்களும் ஊடகங்களில் கசியத் துவங்கியது. அவர் ஒரு இன வெறியர், கொடுமைக்காரர் என்று அவரை பற்றிய தகவல்கள் அவர் நண்பர்கள், உடன் வேலை செய்தவர்களிடமிருந்து வெளியே வர, நிலைமை பதட்டமாகியது. மக்களின் எதிர்ப்பலை குரல்வளையை நெறிக்கத் துவங்கி இதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியாது என்கிற நிலை ஏற்பட்ட பின் தாமதமாக வாய் திறந்த அமெரிக அதிபர் ஒபாமா, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்படும் என அறிவித்துள்ளார். ஒரு கருப்பரே அதிபர் ஆனாலும் அங்கே வெள்ளை நிறவெறிதான் கோலோச்சுகிறது, கோலோச்ச முடியும் என்பதை இப்போதாவது ஒபாமாவை ஆதரித்த அசடர்கள் புரிந்து கொள்வார்களா?
கைது செய்யப்பட்ட பெண்
பாதையை மறித்ததற்காக கைது செய்யப்பட்டு அழைத்துப் போகப்படும் பெண்.
இன்னொரு பக்கம் பெர்குசன் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நகர் முழுவதும் தீவிரவாத முறியடிப்பு உத்திகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற தேசிய காவல் படையினரைக் குவித்துள்ளார்.
ல பத்தாண்டு கால தூக்கத்தில் இருந்து இப்போது தான் விழித்துக் கொண்டது போல் நடிக்கும் அமெரிக்க ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைகள் ”அய்யோ பாசிசம் வந்து விட்டதோ” என்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றன. பத்திரிகையாளர் ஒருவர் “அமெரிக்க போலீசு போர்க்கோலம் பூண்டு மக்களை எதிர்த்து நின்ற காட்சி இராணுவத்தை நினைவூட்டுகிறது” என்று புலம்புகிறார்.  இதே அமெரிக்க இராணுவம் ஈராக்கிலும், ஆப்கானிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் கொன்ற கணக்கும், கொடூரமும் இவர்களுக்கு எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. அது தேசபக்தி என்றால் இதையும் அதே தேசபக்தியை காவல்துறை காட்டாதா என்ன?
ஒரு பரபரப்புச் செய்தி என்கிற அளவில் ஃபெர்குசன் சம்பவத்தை வைத்து 24/7 திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட திரைக்கதைகளை அவிழ்த்து விட்டு டி.ஆர்.பியை எகிற வைத்துக் கல்லா கட்டலாம் என்று நாக்கில் எச்சில் வடிய ஓடி வந்த அமெரிக்க கார்ப்பரேட் ஊடகங்கள், இனவெறித் தீயை விட்டு பாதுகாப்பான தொலைவில் இருந்தால் தான் கதகதப்பாக இருக்கும் என்பதையும், கிட்டே நெருங்கித் தீண்டினால் தன்னையும் சுடும் என்பதை அதிர்ச்சிகரமாக உணர்ந்துள்ளது. இருந்தாலும் ஒரு பிளான் B ஆக, தான் அடிவாங்கியதை ஒட்டி இனவுரிமைக்காக குரல் கொடுத்து ஃபெர்குசன் போலீசை விமர்சித்து எழுதி வருவதன் மூலம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்கு கல்லாவை நிரப்பி வருகின்றது.
கருப்பின மக்களோ, ஊடகங்களின் ஆதரவிற்காகவோ அதன் வெளிச்சத்திற்காகவோ ஏங்கி நிற்கவில்லை. அவர்கள் இன்றும் போராடி வருகிறார்கள். ஏற்கனவே வேலை இல்லை, விலைவாசி உயர்வு, பசி பட்டினி, என்று இருந்த ஏழை கறுப்பின மக்கள் தங்களுக்கு நீதியும் இல்லை என்றவுடன் வெடித்தெழுந்துள்ளனர். இது அரசுக்கும் நன்றாகவே தெரியும்.
எதிர்ப்பு பேரணி
எதிர்ப்பு பேரணி
இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு சிறிய துப்பாக்கி சூடு, லண்டன் நகரில் கிளப்பிய போராட்டங்களை அமெரிக்கா நினைவில் வைத்துள்ளது. இந்த முறை பெர்குசன் நகரில் அப்படி எதுவும் நடந்து விடக் கூடாது என்பதில் குறிப்பாக உள்ளது; எனவே, போராடும் மக்களைக் கடுமையாக தாக்குவதன் மூலம் நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைக்கத் துடிக்கிறது. எரியும் காட்டுத் தீயை வைக்கோல் போரால் மூடி அணைக்க எத்தனிக்கிறது அமெரிக்கா.
ஓரளவுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை கொண்ட அமெரிக்க அறிவுத் துறையினர் சிலர் “அமெரிக்க அரசு தோற்றுவிட்டது. இனவெறியையோ, சமுக ஏற்றத் தாழ்வையோ அது கட்டுப்படுத்தவில்லை, அதன் விளைவாகத் தான் இந்த சம்பவம் மக்களை கிளர்ந்தெழச் செய்துள்ளது” என்கிறார்கள்.
ஊர்ப் பெண்களையெல்லாம் கையைப் பிடித்திழுக்கும் காமவெறி கொண்ட மைனர், தன் வீட்டுப் பெண்களை எப்படி மதிப்பான்? தனது முதலாளிகளின் நலனுக்காக ஈராக், ஆப்கான் துவங்கி மத்திய கிழக்கெங்கும் வெறியாட்டம் போடும் அமெரிக்கா, தனது குடிமக்களை – அதுவும் ஏழைகளை – மட்டும் கவுரவமாகவா நடத்தப் போகிறது?
நீதியைத் தேடும் அமெரிக்கர்கள் டாம்ஹாக் எரிகணைகளுக்கும், ட்ரோன் தாக்குதல்களுக்கும், அமெரிக்க துவக்குகளுக்கும் இலக்காகி மடிந்த மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்கான போராட்டமும் தங்கள் சொந்த நாட்டைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்கான போராட்டமும் வேறு வேறல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதைப் புரிந்து கொள்ளும் போதுதான் மைக்கேல் ப்ரௌனின் கொலைக்கான நீதியையும் ஈராக்கிய ஆப்கானியக் குழந்தைகளின் கொலைகளுக்கான நீதியையும் சேர்த்து வென்றெடுக்க முடியும்.
-    ஆதவன். vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக