புதன், 2 ஜூலை, 2014

உறுப்பு வேணுமா? உறுப்பு.. கிட்னி. லிவர்.. ஹார்ட்.. ரெண்டு வாங்குனா ஒன்னு Free

‘மக்களிடமிருந்து கற்றுக் கொண்டு பிறகு மக்களுக்கு சேவை செய்வது’ இதுவே மருத்துவத்தின் அடிப்படை.
ஒருவர், மருத்துப் படிப்பை படிப்பதற்கு அவருக்கு மனித உடல் தேவை. அந்த உடலை டாடா, பிர்லா, அம்பானி பரம்பரையோ அல்லது அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களோ அவ்வளவு ஏன் தனியார் மருத்துக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த மருத்துவக் கல்லூரியின் முதலாளி குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ தங்கள் உடலை பரிசோதனைக்கு தருவதில்லை. செத்தப் பிறகும் கூட கிடைக்காது. மருத்துவர்களே கூட அதற்குத் தயார் இல்லை.
குறிப்பாக நோயாளிகளையும் நோய்களின் தன்மைகளையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது தான் அதை கற்றுக் கொள்ள முடியும்..
வசதியானவர்கள் இதுபோன்ற கத்துக்குட்டி மருத்துவர்களிடம் ஒருபோதும் வரமாட்டார்கள். எழை. எளிய மக்களே மருத்துவர்களின் பரிசோதனைக் களம்.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் OP யிலும், உள் சிகிச்சைகளிலும் எளிய மக்களே பரிசோதனை எலிகள்.
இப்படியாக எளிய மக்களின் உடல்களின் மீது மருத்துவம் படித்துவிட்டு வருகிற மருத்துவர்கள். பிறகு தங்களின் ‘சேவை’களை யார் அதிகம் பணம் தருகிறார்களோ அவர்களுக்கே தான் செய்கிறார்கள்.மருத்துவத்தின் ‘தரம்’ மனிதர்களின் பொருளாதார ‘தரத்தை’ வைத்துதான் முடிவாகிறது.
பல மருத்துவர்கள் சந்தையில் மாடு வாங்குபவர்களைபோல் கையில் துண்டுப் போட்டு ரகசியமாக கூட வியாபாரம் பேசுவதில்லை; பகிரங்கமாக பேசுகிறார்கள். மாட்டு வியாபாரிகளுக்கு இருக்கிற கூச்சம் கூட மருத்துவர்களிடம் இல்லை.
தன்னை அதிக விலையுள்ளவர்களாக காட்டிக் கொள்வதற்கு அவர்கள் செய்கிற விளம்பர யுக்தி, மகா மட்டரகமானது. பத்திரிகைகளில் தங்களைப் பற்றி செய்திகள் வரவைப்பதற்காக நடிகர், நடிகைகளைப்போல் PRO வைத்து செயல்படுகிற டாக்டர்களே அதிகம் இருக்கிறார்கள்.
ஊடகக்காரர்களோடு அவர்கள் பழகுகிற விதமே பத்திரிகைகாரர்களுடன் நடிகர் நடிகைகள் பழகுவதைப்போல் தான் இருக்கும்.
‘மருத்துவம் ஒரு சேவை’ என்று அழகாக வசனம் பேசுவார்கள். ஆனால், அவர்கள் அதை ஒரு தொழிலாகக் கூட செய்வதில்லை. வியாபாரமாக தான் செய்கிறார்கள்.
ஆமாம். நிறைய முதலீடு செய்து மருத்துவமனையை திறந்து வைத்துவிட்டு அதற்கு கூட்டம் சேர்ப்பதற்கு அவர்கள் படுகிறபாடு, சினிமா தியேட்டர் அதிபர்கள் தோற்றுப் போனார்கள்.
குழந்தையின்மை அதாவது ‘மலடு’ நீக்கும் மருத்துவர்கள் கூட கவர்ச்சியாக ‘செக்ஸ்’ மருத்துவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு ஊடகங்களின் துணையோடு சில்லரை சேர்க்கிறார்கள்.
சேலம் சிவராஜ் என்ன செய்கிறாரோ அதையே தான் ஆங்கில மருத்தவம் படித்த பல டாக்டர்களும் ‘அழகாக’ செய்கிறார்கள். இவர்கள் சேலம் சிவராஜின் ஹைடெக் வடிவம். அதனால் தான் ஷேர் மார்க்கெட் கட்டிடம் போல் பிரம்மாண்ட மருத்துவனை கட்ட முடிகிறது.
குழந்தையின்மை ஒரு தனிநபரின் பிரச்சினையல்ல இன்னும் சரியாக சொன்னால் அது பிரச்சினையே அல்ல; அதை ஒரு பிரச்சினையாகப் பார்ப்பது பெண்களுக்கு எதிரான சமூக அமைப்பே.
சமூகத்தின் இந்த சாபக்கேடை தனக்கான வர்த்தகமாக மாற்றிக் கொண்டார்கள் மருத்துவர்கள். குழந்தையின்மை என்பதை பெரிய அவமானகரமானப் பிரச்சினையாக இன்னும் பெரிதுப் படுத்தியதில் மலட்டுத்தன்மையைப் போக்கும் மகப்பேறு மருத்துவத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.
மிக வறுமையான குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு குழந்தையில்லை என்றால் அதற்கு தீர்வு காண்பதற்கு வாய்ப்பே இல்லை, இந்த மருத்துவத்தில்.
பிரச்சினை மருத்துவமல்ல, அந்த மருத்துவம் எட்டாக்கனியானதற்குக் காரணம் பணம் தான். அந்தப் பெண்ணுக்குத் தீர்வு தற்கொலை தான்.
ஆம், இந்த நவீன மருத்துவத்தில் குழந்தையின்மைக்கு தீர்வு கண்ட பெண்களின் எண்ணிக்கையை விட தற்கொலை மற்றும் கணவன் வீட்டால் விரட்டப்பட்ட பெண்களின் எண்ணிக்கையே அதிகம்.
இதன் இன்னொரு மிக மோசமான வடிவம் தான் எளிய பெண்களுக்கு எதிரான வாடகைத் தாய் முறை. இது முழுக்க முழுக்க பணம் பண்ணுவதற்கான ஒரே திட்டம் தான்.
இதுபோலவே தான் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை. இந்த முறையும் வறுமையில் இருப்பவர்களின் உறுப்புகளைக் கழட்டி வசதியானவர்களுக்குப் பொருத்துவது. பல விவசாயிகளின் நெசவாளர்களின் கிட்னி இப்படி தான் காணாமல் போனது.
இந்தியாவின் தலைநகரம் டெல்லி. வர்த்தகத்திற்கான தலைநகரம் மும்பை. மருத்துவத்திற்கான தலைநகரம் சென்னை.
இந்தப் ‘பெருமை’யை சென்னை பெற்றதற்கான முக்கிய காரணம். உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை தான்.
‘உறுப்பு வாங்கலியோ உறுப்பு.. கிட்னி, லிவர், இதயம் வேணுமா.. அணுகவும் சென்னையை..’
இதுவும் அதுவே தான். அதாங்க வசதியானவர்களுகளிடம் பணம் வாங்கிக் கொண்டு…
அதற்கு சாட்சி,
உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான உறுப்புகள், அரசு மருத்துவமனையிலிருந்து மிகப் பெரிய தனியார் மருத்துவ மனைகளுக்குத் தான் போகிறதோ ஒழிய ஒரு போதும் தனியார் மருத்துவ மனைகளிலிருந்து அரசு மருத்துவ மனைகளுக்கு வருவதே இல்லை என்பதே.
மருத்துவம் இப்படி மிகப் பெரிய வர்த்தகமா மாறியதற்கு அடையாளம், நட்சத்திர ஓட்டல்களுக்கு சவால் விடும் மருத்துவ மனைகளே. இன்று நட்சத்திர ஓட்டல் நட்சத்திர மருத்துவமனை இரண்டும் தான் மிக நவீனமான பந்தாவான வர்த்தகம்.
மருத்துவம் வியாபாரமாக ஏன் மாறியது?
மருத்துவக் கல்வியே வியாபாரமாக இருக்கிறது.
கல்வி ஏன் வியாபாரமானது?
அது தனியார் துறைக்கு தாரை வார்க்கப்பட்டது.
ஒரு மருத்துவர் முதலீடு செய்து மருத்துவமனையை கட்டுவதற்கு முன் தன் பெரிய முதலீட்டை தனது முதலாமாண்டு மருத்துவக் கல்வியின் போதே தொடங்கி விடுகிறார். ஆம், பல லட்சங்களைத் தாண்டி கோடிகளில் வந்து நிற்கிறது மருத்துவக் கல்வி.
எம்.டி படிப்பெல்லாம் பல கோடிகளுக்குப் போவதாக செய்தி.
‘அந்தக் காலத்தில டாக்டர்கள் சேவை மனப்பான்மையோடு இருந்தார்கள். நோயாளிகளை கருணையோடு அணுகினார்கள். பல மருத்துவர்கள் பணம் இல்லாதவர்களுக்கு இலவசம் வைத்தியம் பார்த்தார்கள். ஆனால் இப்போது அப்படி பார்ப்பது அரிதாக இருக்கிறது’ என்கிற பழம்பெருமைகளை நாம் சகஜமாக கேட்க முடிகிறது அல்லவா?
அந்தக் காலம் என்பது ஏதோ மந்திரங்கள் நிகழந்த காலமல்ல, அப்போது மருத்துவக் கல்லூரிகளை அரசு மட்டுமே நடத்தியக் காலம்.
அதனால் அந்தக் காலத்து மருத்துவர்கள் மிகப் பெரும்பாலும் வர்த்தகத்தைத் தாண்டியவர்களாக இருந்தார்கள்.
இந்தக் காலம் கார் கம்பெனி நடத்துபவர்கள், சாராயக் கடை நடத்தியவர்கள், வட்டிக் கடை நடத்துபவர்கள் மருத்துவக் கல்லூரிகள் நடத்துகிற காலம்.
சாராயக் கடைகளையும் வட்டிக் கடைகளையும் எதற்காக நடத்தினார்களோ அதற்காகவே தான் அவர்கள் மருத்துவக் கல்வியையும் நடத்துகிறார்கள்.
அவற்றை விட கல்லூரிகள் நடத்துவது அதிகம் லாபம் தருவது மட்டமல்ல, சமூகத்தில் மரியாதையும் கிடைக்கிறது.
ஆக.
‘குழந்தை வேணுமா.. குழந்தை. ஒரே பிரசவத்துல நாலு குழந்தை போதுமா? இன்னும் ரெண்டு வேணுமா?.’
‘உறுப்பு வேணுமா? உறுப்பு.. கிட்னி. லிவர்..ஹார்ட்.. ரெண்டு வாங்குனா ஒன்னு Free’
‘வாங்க … ஓடி வாங்க .. போனா கெடைக்காது.. mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக