புதன், 2 ஜூலை, 2014

மோடி அரசின் மீது உச்ச நீதிமன்ற நீதிபதி லோதா கடும் அதிருப்தி !

"உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பெயர் பரிந்துரைப் பட்டியலில் இருந்து மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியத்தின் பெயர் நீக்கப்பட்டது, மத்திய அரசின் தன்னிச்சையான முடிவு; இது சரியானதல்ல' என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் முதல் முறையாக தலைமை நீதிபதி வெளிப்படையாக கருத்து வெளியிட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சௌஹானுக்கு பிரிவு உபசார விழா தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா பங்கேற்றுப் பேசியதாவது:
""உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்காக அனுப்பப்பட்ட 4 நீதிபதிகளின் பெயர் அடங்கிய பரிந்துரைப் பட்டியலில் இருந்து, மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியம் கோப்புகளை மட்டும், எனக்கு தெரியாமலேயே மத்திய அரசு தனியாக எடுத்து வைத்துள்ளது. இது மத்திய அரசின் தன்னிச்சையான முடிவாகும்; இது சரியானதல்ல.

அரசியலமைப்பின் முக்கியப் பதவிக்காக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட கோப்புகளை மத்திய அரசு சர்வ சாதாரணமாக கையாண்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக நீதித்துறையின் சுதந்திரத்துக்காக நான் போராடியுள்ளேன். அதை எக்காரணத்துக்காகவும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன். நீதித்துறையின் சுதந்திரத்துக்கு குந்தகம் ஏற்பட்டால் எனது பதவியில் ஒரு நிமிடம் கூட நீடிக்க மாட்டேன்.
வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த ஜூன் 28ஆம் தேதி இந்தியா திரும்பிய நான், கோபால் சுப்ரமணியத்தை சந்தித்தேன். நீதிபதிகள் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்க வேண்டும் என்ற முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன். கோபால் சுப்ரமணியம் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், எனக்கு வேறு வழியில்லாத காரணத்தால் அவரது பெயர் திரும்பப் பெறப்பட்டது'' என்று கூறினார்.
அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி பேசுகையில், "நடைபெற்ற சம்பவம் குறித்த அனைத்து உண்மைகளையும் தலைமை நீதிபதி வெளிப்படுத்திவிட்டார். ஆகையால் இந்த விவகாரம் முடிவு பெற்றுவிட்டது' என்று கூறினார்.
மூத்த வழக்குரைஞர் கே.டி.எஸ். துளசி பேசுகையில், "உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு எடுத்த முடிவும், கோபால் சுப்ரமணியம் வெளிப்படையாக பேட்டியளித்ததும் இந்த விவகாரத்தை சிக்கலாக்கிவிட்டன' என்று கூறினார்.
இந்நிலையில், ஆர்.எம். லோதாவின் பேச்சு குறித்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். எனினும், "நீதிபதிகள் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருந்த கோபால் சுப்ரமணியத்தின் பெயரை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டதையடுத்து, அது தொடர்பான ஆய்வு நடைபெற்று வந்த நிலையில், தனது பெயரை திரும்பப் பெற, கோபால் சுப்ரமணியமே கேட்டுக் கொண்டதால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது' என்று மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக