புதன், 2 ஜூலை, 2014

கட்டிட இடிபாடு : தமிழகத்தை சேர்ந்தவர்கள் கடும் அவதி ! மொத்தம் 86 அப்பார்மேன்ட்களுக்கும் எத்தனி கோடி லஞ்சமோ ?

சென்னை: கட்டட இடிபாடுகளில் சிக்கிய,தமிழகத்தை சேர்ந்தவர்களின் உறவினர் களுக்கான தங்குமிடங்களை, அதிகாரிகள் ஏற்பாடு செய்யாததால், அவர்கள் அவதிக்கு உள்ளாகினர்.சென்னை, மவுலிவாக்கத்தில், இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கிய தமிழகம், ஆந்திரா, ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.அவர்களை மீட்கும் பணி, தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கி யவர்களின் உறவினர்கள், அவர்களை தேடி, சம்பவ இடத்தில் குவிந்தனர்.ஆந்திராவிலிருந்து வந்தவர்கள், இடிந்த கட்டடம் அருகே அமைந்துள்ள, ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில், தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு உணவு வழங்கப்பட்டது.ஆனால், தமிழகத்தை சேர்ந்தவர்கள் தங்க, இடம் ஒதுக்கப்படவில்லை. உணவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. அவர்கள், ஆந்திராவை சேர்ந்தவர்கள் தங்கியிருந்த பள்ளிக்கு சென்றால், அங்கிருந்த அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. சென்ற திமுக ஆட்சில நாலு துளி தூத்தல் போட்டாவே மேயர் சுப்பிரமணி வேஷ்டிய மடிச்சு கட்டீட்டு ரோட்டுக்கு வந்து மக்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்திருக்கான்னு பாப்பார் இப்போ ஒரு பேரிடர் நடந்து இருக்கு ஆனா சென்னை மேயர் எங்க இருக்காருன்னே தெரியலையே அவரு ஏன் தலைமறைவாகனும் ? இப்போ ஒரு சின்ன இடி விழுந்தாக்கூட வேஷ்டிய மடிச்சு கட்டிக்கிட்டு சென்னைய விட்டு வெளியே ஓடுற மொதோ ஆள் மேயராதான் இருப்பார்


இதனால், அவர்கள் செய்வதறியாமல் தவித்தனர். இது குறித்து, உளுந்தூர்பேட்டை அடுத்த, கணையாழி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் கூறியதாவது:என் தம்பி திருவேங்கடம், 28, இந்த கட்டடத்தில், வேலை செய்து வந்தார். அவரை தேடி வந்தேன். இதுவரை விவரம் தெரியவில்லை. நாங்கள் தங்க இடம் இல்லை. உணவும் ஏற்பாடு செய்யவில்லை. தம்பி நிலை குறித்த தகவலையும், அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.இவ்வாறு, அவர் தெரிவித்தார். தமிழகத்தை சேர்ந்தவர்களின் உறவினர்களுக்கு, தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்யப்படாதது குறித்து, இடிந்த கட்டடம் அமைந்துள்ள பகுதியில் உள்ள, தகவல் மையத்தில் அமர்ந்திருந்த, ஆர்.டி.ஓ.,விடம் கேட்டபோது, 'தமிழகத்தை சேர்ந்தவர்கள் எங்காவது தங்கிக் கொள்வர் எனக்கருதி, எந்த ஏற்பாடும் செய்யவில்லை' என, கூலாக பதில் அளித்தார்.

ஆந்திர தொழிலாளர்களின் உடல்-உறவினர்களிடம் ஒப்படைப்பு:கட்டட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள், ஆந்திராவிற்கு எடுத்து செல்லப்பட்டன. அவர்களின் உறவினர்களும், ஆந்திர அரசு ஏற்பாடு செய்த பஸ்சில், புறப்பட்டு சென்றனர்.மவுலிவாக்கத்தில், இடிந்த கட்டடத்தில், ஆந்திராவை சேர்ந்த, 35 குடும்பத்தினர் தங்கி, வேலை செய்து வந்தனர். கட்டட இடிபாடுகளில், ஆந்திர தொழிலாளர்கள் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். அவர்களை தேடி, ஆந்திராவிலிருந்து உறவினர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு உதவ, ஆந்திர மாநில அதிகாரிகளும், சென்னையில் முகாமிட்டுள்ளனர்.நேற்று மாலை வரை, ஆந்திராவை சேர்ந்த, நான்கு பெண்கள் உட்பட ஏழு பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. எட்டு பெண்கள் உட்பட, 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் உடல் மருத்துவப் பரிசோதனை முடிந்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவை சேர்ந்தவர்களின் உடல், ஆம்புலன்ஸ் மூலம், சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.உடன் செல்வோருக்கு, ஆந்திர அதிகாரிகள், 2,000 ரூபாய் பணம் கொடுத்து அனுப்புகின்றனர். அவர்களின் உறவினர்கள் செல்ல, ஆந்திர அரசு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளது.நேற்று மாலை, உயிர் தப்பிய தொழிலாளர்கள், இறந்தவர்களின் உறவினர்கள் என, 50 பேர், பஸ்சில் ஆந்திரா புறப்பட்டு சென்றனர்.

பணமின்றி பரிதவித்த தொழிலாளி -போக்குவரத்து ஆய்வாளர் உதவி:பணம் இல்லாமல் பரிதவித்த, ஆந்திர தொழிலாளிக்கு, வட்டார போக்குவரத்து ஆய்வாளர், 1,000 ரூபாய் கொடுத்து உதவினார்.ஆந்திராவை சேர்ந்தவர் சீனு. இவர் தன் மனைவியுடன், சென்னையில் இடிந்து விழுந்த கட்டடத்தில், வேலை செய்து வந்தார். இவர் உயிர் தப்ப, இவரது மனைவி நிலை என்னவென்று தெரியவில்லை. மனைவி நிலை அறிய, நான்கு நாட்களாக, அங்கேயே உள்ளார். கையில் பணமின்றி தவித்தார். இதை அறிந்த, ஆந்திர மாநிலம், செவலூர்பேட்டை வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சுதாகர்ரெட்டி, தன் சொந்தப் பணம், 1,000 ரூபாயை, சீனுவிற்கு கொடுத்து உதவினார்.

மீட்பு படையினருக்கு உதவும் ஐந்து மோப்ப நாய்கள்: இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்க, ஜான்சி, மேரி, பினா, ஜாக், ஜூலி, ருஸ்தம் என, ஐந்து மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தங்கள் மோப்ப சக்தி மூலம், இடிபாடுகளில் சிக்கியிருப்போரை கண்டறிகின்றன. இடிபாடுகளில் சிக்கியோர் உயிரோடு இருந்தால், பயிற்சியாளர்களை பார்த்து குரைக்கின்றன. இறந்த உடலாக இருந்தால், காலால் தரையைக் கீறுகின்றன. இதை வைத்து, மீட்பு படையினர் உடனடியாக களத்தில் இறங்குகின்றனர்.

பெரிய இயந்திரங்களை பயன்படுத்த முடியவில்லை:பேரிடர் மீட்பு குழு டி.ஐ.ஜி., பேட்டி:''இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை, உயிரோடு மீட்க, பெரிய அளவிலான இயந்திரத்தை பயன்படுத்த முடியவில்லை,'' என, தேசிய பேரிடர் மீட்பு குழு டி.ஐ.ஜி., செல்வம் தெரிவித்தார்.

இது குறித்து, அவர் அளித்த பேட்டி:
இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர்?
இடிபாடுகளில் சிக்கியவர்கள், எத்தனை பேர் என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டோரும், மழைக்கு ஒதுங்கியவர்களும், இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம்.

இடிபாடுகளில் குழந்தைகள் சிக்கியுள்ளனரா?
அதையும் உறுதிப்படுத்த முடியவில்லை. இதுவரை குழந்தைகள் யாரும் மீட்கப்படவில்லை.

மீட்பு படையினருக்கு இடையில், ஒருங்கிணைப்பு இல்லை என்று கூறப்படுகிறதே?
தினசரி காலை மற்றும் மாலை, மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள, அனைத்து துறை அதிகாரிகளும், அன்று மேற்கொண்ட நடவடிக்கை, அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதித்து, முடிவு செய்கிறோம்.

மீட்பு பணி மந்தமாக நடப்பதாக பேசப்படுகிறதே?
இடிபாடுகளில் சிக்கியவர்களை, உயிரோடு மீட்க வேண்டும் என்பதற்காக, கவனமுடன் செயல்படுகிறோம். இதனால், பெரிய அளவிலான இயந்திரத்தை பயன்படுத்த முடியவில்லை.இதன் காரணமாக, பணி மந்தமாக உள்ளதுபோல் தெரியலாம். அனைவரையும் உயிரோடு மீட்க வேண்டும் என்ற துடிப்புடன் பணிபுரிகிறோம்.
இவ்வாறு, அவர் பதிலளித்தார்.

உயிர் தப்பிய இளைஞர் சிறுநீர் குடித்த அவலம்:

கட்டட இடிபாடுகளில் சிக்கிய வாலிபர், சிறுநீர் குடித்து, தாகத்தை தீர்த்துள்ளார்.சென்னை, மவுலிவாக்கம் கட்டட இடிபாடுகளில், ஒடிசாவை சேர்ந்த பிரகாஷ்குமார் ராவத், 25, சிக்கிக் கொண்டார். இவர் உயிரோடு இருப்பதை, நேற்று பகல் 1:40 மணிக்கு, 'ருஷ்தம்' மோப்ப நாய் கண்டு பிடித்தது. உடனடியாக மீட்பு படையினர், அந்த இடத்தில், இடிபாடுகளை அகற்றினர். மாலை 5:05 மணிக்கு, அவர் உயிரோடு மீட்கப்பட்டார். அவர், இரண்டு நாட்களாக குடிநீர் இல்லாமல், நாக்கு வறண்டதால், சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்ததாகவும், தன் நண்பர் உள்ளே மாட்டிக் கொண்டிருப்பதாகவும் மீட்பு படையினரிடம் தெரிவித்தார். இதையடுத்து, நண்பரை மீட்கும் பணி தொடங்கியது.

தொழிலாளர்களின் நிலை அறிய மீட்பு குழுவினர் போராட்டம்:கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்கள், உயிரோடு இருக்கின்றனரா என்பதை அறிய, மீட்பு குழுவினர் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர்.சென்னை, மவுலிவாக்கத்தில், கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, அவர்களை உயிரோடு மீட்பதற்கான முயற்சியில், மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் உயிரோடு இருக்கின்றனரா என்பதை அறிய, இடிபாடுகளில் தெரியும் இடைவெளி வழியே, விசில் மூலம் ஒலி எழுப்பி வருகின்றனர்.மேலும், இடிபாடுகளில், ஒடிசா, ஆந்திரா, தமிழகம், ஆகிய மாநிலத் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதால், இந்தி, தெலுங்கு, தமிழ், ஆகிய மொழிகளில், குரல் எழுப்பி வருகின்றனர். இடிபாடுகள் உள்ளிருந்தும், சிலரது சத்தம் கேட்கிறது. எனவே, மீட்புப் பணி கவனமாக மேற்கொள்ளப்படுகிறது.

மீட்பு குழுவில் மோதல்:


கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள, தீயணைப்பு வீரர்களுக்கும், கமாண்டோ படையினருக்கும் இடையே, மோதல் ஏற்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மவுலிவாக்கத்தில், கட்டட இடிபாடுகளில் சிக்கி தவிக்கும், தொழிலாளர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தமிழக கமாண்டோ படை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தனியார் நிறுவன ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், மீட்பு பணி மந்தமாக நடந்து வருகிறது. இச்சூழ்நிலையில், நேற்று காலை 10:45 மணிக்கு, ஜெயலட்சுமி என்ற பெண்ணை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அப்போது, அவரை தீயணைப்பு வீரர்கள் சூழ்ந்து நின்றனர். அவர்களை கலைந்து செல்லும்படி, கமாண்டோ படையினர் கூறினர். இதற்கு தீயணைப்பு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், இரு தரப்பினருக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவர்களை சமாதானப் படுத்தினர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மீட்பு படையினருக்கு 'ஜூஸ்':


கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு, நேற்று, எலுமிச்சை பழம் ஜூஸ் வழங்கப்பட்டது.சென்னையில், இடிந்து விழுந்த, 11 மாடி கட்டடத்தில் சிக்கியவர்களை, மீட்கும் பணியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுக்கு, குடிநீர் மற்றும் உணவு வசதி, போதுமான அளவு செய்யப்படவில்லை. இது குறித்து, நேற்று 'தினமலரில்' செய்தி வெளியிடப்பட்டது.அதைத் தொடர்ந்து, நேற்று, காலை 10:30 மணிக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டோருக்கு, எலுமிச்சை பழம் ஜூஸ் வழங்கினர். அதை குடித்த பிறகு, மீட்பு பணியில் ஈடுபட்டோர், உற்சாகமாக பணியை தொடர்ந்தனர்.

மீட்பு படையினருக்கு தடுப்பூசி:

கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை, மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள, மீட்பு படையினருக்கு, நேற்று தடுப்பூசி போடப்பட்டது. சென்னை, மவுலிவாக்கத்தில், கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்கள் இறந்துள்ளதால், அப்பகுதி முழுவதும், துர்நாறறம் வீசுகிறது. எனவே, தொற்று நோய் பரவாமல் இருக்க, மீட்பு பணியில் ஈடுபட்டிருப்போருக்கு, சுகாதாரத் துறை சார்பில், நோய் எதிர்ப்பு தடுப்பூசி போடப்பட்டது. அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கும், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

குடிநீர், உணவு இல்லாமல் 15 நாட்கள் வாழலாம்:மருத்துவ கல்வி இயக்குனர் தகவல்:
'குடிநீர் அருந்தாமல், உணவு உட்கொள்ளாமல், ஒருவர் 15 நாட்கள் வரை, உயிரோடு இருக்கலாம்' என, மருத்துவ கல்வி இயக்குனர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

மன தைரியம்:



சென்னை, மவுலிவாக்கத்தில், இடிந்து விழுந்த கட்டடத்தில், நேற்று, நான்காவது நாளாக மீட்பு பணி நடந்தது. நேற்று, நான்கு பேர் உயிரோடு மீட்கப்பட்டனர்.

மேலும் எத்தனை பேர் உயிரோடு உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
இது குறித்து, மருத்துவ கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறியதாவது:ஒரு மனிதன் தண்ணீர் அருந்தாமல், உணவு உட்கொள்ளாமல், 15 நாட்கள் வரை, உயிரோடு இருக்கலாம். அவரது உடல் வலிமை, மன தைரியத்தை பொறுத்து, இது அமையும். எதுவும் சாப்பிடாமல், ஒரு வாரம் வரை, கட்டாயம் இருக்க முடியும். அதற்கு பிறகு, அவரது சிறுநீரகம் பாதிக்கப்படும். உடலில் நீர்சத்து குறைந்த விடுவதால், மயக்கமான நிலையில் காணப்படுவார்.எனவே, கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்கள், அனைவரையும் உயிரோடு மீட்க வேண்டும் என்பதற்காக, மீட்பு பணியில் விவேகமாக செயல்பட வேண்டி உள்ளது.

முதலுதவி:

உள்ளே சிக்கி இருப்போர் மீது, கான்கிரீட் துண்டு விழுந்து, அமுக்கிவிடக்கூடாது என்பதால், மீட்பு பணிகள் நிதானமாக நடக்கின்றன. இடிபாடுகளில் இருந்து மீட்கப்படுவோருக்கு, உடனடியாக முதலுதவி அளிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக