வியாழன், 17 ஜூலை, 2014

Chennai Airport வாகனங்கள் கட்டாய கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ! கொள்ளையோ கொள்ளை ?

சென்னை விமான நிலையத்தின், உள்நாட்டு முனைய வருகை பகுதிக்கு வரும், வாகனங்கள் இனி கட்டணம் செலுத்தாமல், விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லாத வகையில், புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய விதியால், முதியோர், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சென்னை விமான நிலைய, உள்நாட்டு முனையத்தின் வருகை பகுதியில், 'அலைட்டிங் பாயின்ட்' எனப்படும், 'போர்ட்டிகோ' பகுதியில், வெளியூர்களில் இருந்து வரும் உள்நாட்டு விமான பயணிகளை, அவரவர் வாகனங்களில் வந்து அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த வார இறுதியில் இருந்து, உள்நாட்டு முனைய வருகை பகுதியில், பயணிகளின் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், பன்னாட்டு முனையத்தின் புறப்பாடு மற்றும் வரவேற்பு பகுதி, உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதியில், வாகனங்களுக்கு கட்டுப்பாடு இல்லை. அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், உயர் அரசு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் வாகனங்களைத் தவிர்த்து, மற்ற வாகனங்கள் செல்ல, உள்நாட்டு முனையத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.  அம்மா உணவகம் மாதிரி 'அம்மா ஏர்போர்ட்' கட்டுனாத்தான் இந்த பிரச்னை முடியும்
இனி, சாதாரண விமான பயணிகள், வருகை பகுதியில் இருந்து, 50 மீட்டர் தூரம் நடந்து சென்று, 'பார்க்கிங்' பகுதியை அடைந்து, அங்கிருந்து வாகனங்களில் புறப்பட்டு செல்ல வேண்டும்.
10 நிமிடங்களுக்குள்...:

தற்போது, விமான நிலையத்திற்குள் தினமும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. கார், டெம்போ, பன்முக பயன்பாட்டு வாகனம் (எஸ்.யு.வி.,), மினி பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு, 10 நிமிடத்திற்கு மேல், 135 ரூபாய்; பஸ்களுக்கு, 253 ரூபாய்; இருசக்கர வாகனங்களுக்கு, 'பார்க்கிங்' பகுதியில், நான்கு மணி நேரம் நிறுத்த, 17 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விமான நிலையத்தை விட்டு, 10 நிமிடத்திற்குள் வெளியேறும் வாகனங்களுக்கு கட்டணம் இல்லை. தற்போது, முன்னறிவிப்பு ஏதுமின்றி, திடீரென பின்பற்றப்படும் இந்த நடைமுறையால், வெளியூர்களில் இருந்து வரும் முதியோர், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
சுங்க கட்டணம்:
உள்நாட்டு முனையத்தில் இருந்து உடைமைகளுடன் வெளியில் வந்து, 'பார்க்கிங்' பகுதிக்குச் சென்று, அவரவர் வாகனத்தில் வெளியே செல்ல, குறைந்தது, 15 நிமிடங்களாவது ஆகும். இந்த திடீர் விதியால், இனி உள்நாட்டு முனையத்திற்கு வரும் வாகனங்கள், கட்டாயம், சுங்க கட்டணம் செலுத்தியே தீர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (ஏ.ஏ.ஐ.,) உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பாதுகாப்பு காரணங்களுக்காகவும், அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.,க்கள் வரும் போது, ஏற்படும் நெரிசல் குறைக்கவும், விமான முனையத்திற்கு உள்ளே ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கவும், இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது' என்றார்.
உள்நாட்டு விமான பயணிகள் சிலர் கூறியதாவது:
விமான நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்றால், கூடுதல் போலீசாரை நியமித்து கண்காணித்தால் போதும்; நிலைமை சரியாகிவிடும். விமான நிலையத்திற்குள் வாகனங்கள் வந்து செல்ல, இலவசமாக, 10 நிமிடங்கள் அனுமதி உள்ளது. விமான முனையத்தில் இருந்து, 'பார்க்கிங்' பகுதி வரை செல்லவே, 10 நிமிடத்திற்கு மேல் ஆகிறது.
>புதிய நடைமுறை:
இனி, அப்பகுதி வரை நடந்து செல்ல வேண்டும் என்ற கஷ்டத்துடன், அனைத்து வாகனங்களும் கட்டணம் செலுத்திய பின்னரே, விமான நிலையத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், இந்த விதி அமல்படுத்தப்பட்டு உள்ளது. வேறு எந்த விமான நிலையத்திலும், இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுவது இல்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக