வியாழன், 17 ஜூலை, 2014

தங்க வியாபாரிகளின் கொள்ளை ! 916 மி கிராமுக்கு பதிலாக 800 மி கிராம் தங்கம் மட்டுமே சேர்கிறார்கள் !

சத்தியத்தை கடைபிடித்து சுதந்திரம் பெற்றுத் தந்த காந்தியடிகள் பிறந்த நாட்டில் இன்று சத்தியத்திற்கு பெரும் கேடு ஏற்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் சத்தியத்தை கைவிட்டு மனம் போன போக்கில் அதர்மமான வழியில் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரங்களில் சத்தியம் தவறி நடக்கும் பல தரப்பினரை பற்றி பார்த்தோம். இந்த வாரம் தங்க நகை விற்பன்னர்களை பற்றி பார்ப்போமா... நமது செய்தித்தாள்களில் ஒவ்வொரு தினமும் தங்கத்தின் விலை நிலவரம் பற்றி தகவல் வரும். அதன்படி 24 காரட் தங்கத்தின் விலையும், 22 காரட் தங்கத்தின் விலையும் செய்தித்தாள்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது 24 காரட் என்பது சுத்தமான தங்கம். அதை வைத்து நகைகளை செய்யமுடியாது. எனவே 22 காரட் தங்கம் உருவாக்கப்படுகிறது. அதாவது 916 மி.கிராம் தங்கமும் 84 மி.கிராம் செப்பும் சேர்த்தால் அது 22 காரட் தங்கம் எனப்படுகிறது. இவையே ஆபரணத்தங்கம் எனப்படுகிறது.


அதாவது நகை கடைக்காரர்கள் நமக்கு நகைகள் ஒவ்வொன்றிலும் கிராம் ஒன்றுக்கு 916 மி.கி தங்கம் இருக்கவேண்டும். ஏனென்றால் 22 காரட் தங்கத்திற்கான விலையை தான் நம்மிடமிருந்து அவர்கள் பெறுகிறார்கள். உதாரணமாக நாம் இரண்டு கிராம் மோதிரம் வாங்குகிறோம் என்றால் அதில் (916மி.கி*2)1832 மி.கி தங்கமும் 168 கிராம் செப்பும் கலந்திருக்கவேண்டும். ஆனால் பெரும்பாலான கடைகளில் வாங்கும் தங்க நகைகளான மோதிரம், கம்மல் போன்றவற்றில் ஒரு கிராமிற்கு 916 மி.கிராம் தங்கத்திற்கு பதிலாக 800 மி.கிராம் தங்கமே சேர்க்கப்படுகிறது. மீதமுள்ள 200 மி.கிராமுக்கு செப்பை சேர்த்து 22 கேரட் என்று கூறி நமது தலையில் கட்டிவிடுகின்றனர்.

அவ்வாறு இரண்டு கிராம் தங்க நகை செய்வதற்கு 50 மி.கிராமுக்கும் குறைவான தங்கமே சேதாரமாகும். நகைகளின் தன்மை மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகளைப் பொறுத்து சேதாரம் கொஞ்சம் கூடுதலாகவோ குறைவாகவோ ஆகலாம். ஆனால் பெரும்பாலான நகை வியாபாரிகள் இந்த செய்கூலி, சேதாரம் விஷயத்தில் நியாயமாக நடந்துகொள்வதில்லை. நம்மிடம் ஏற்கனவே 200 மி.கிராம் தங்கத்தை சுரண்டிய நிலையில் நகை செய்ய சேதாரம் என்ற வகையில் மேலும் 200 மி.கிராமை சேர்க்கின்றனர். அதன் பின்னர் நகை செய்வதற்கு கூலி என்று கூறி 100 ரூபாயை சேர்க்கின்றனர். ஆனால் இதில் நகை செய்யும் விஸ்வகர்மாவினருக்கு 25 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை தான் கூலி தருகின்றனர்.

ஆக நாம் 2 கிராம் நகை வாங்கினால் நம்மிடம் 400 மி.கிராம் தங்கத்திற்குண்டான விலையை நம்மிடம் கொள்ளையடிக்கின்றனர். அதாவது 22 காரட் தரம் கொண்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி 2640 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அதில் 400 மி.கிராமிற்கு தொகையை கணக்கிட்டால் 1056 ரூபாய் வருகிறது. கூலியை கூட விட்டுவிடுவோம். ஏனென்றால் அது நகையை செய்பவர்களுக்கு போகவேண்டியது. ஆனால் 2 கிராம் நகை வாங்க நாம் (2 கிராம்*2640=5280, சேதாரம் 1056) என சேர்த்து 6336 ரூபாய் செலுத்தவேண்டும்.(கூலியில்லாமல்). ஆனால் நகை கடைக்காரர்களுக்கு அடக்கமோ 4356 ரூபாய் தான் வரும். அதிகபட்சமாக 4500 ரூபாய் தான் 2 கிராம் நகை செய்வதற்குண்டான அடக்க தொகையாகும். ஏனென்றால் அவர்கள் தான் 2 கிராம் தங்கத்திற்கு பதிலாக 1 கிராம் 600 மி.கி தங்கத்தை சேர்க்கின்றனர். மீதமுள்ள 400 மி.கிராம் முழுவதும் செப்பு தான் கலக்கப்படுகிறது.

ஆக 4500 ரூபாயை மூலதனமாக வைத்து நம்மிடம் 6336 ரூபாயை வாங்கிவிடுகின்றனர். அதாவது 2 கிராம் நகையில் 1836 ரூபாயை லாபமாக நகைக்கடைக்காரர்கள் நம்மிடம் அள்ளிவிடுகின்றனர். இதை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது தான் வேடிக்கை. 2 கிராம் நகைக்கே 1836 ரூபாய் லாபமென்றால் 20 கிராம் நகைக்கு எவ்வளவு லாபம் என்று பாருங்கள்.

நம்மவர்கள் பெண்ணிற்கு திருமணம் நிச்சயம் செய்துவிட்டால் நகை வாங்கவேண்டும் என்று இரவும் பகலும் தூக்கமில்லாமல் தவிப்பார்கள். ஆனால் திருமணத்திற்கான நகை வாங்க வந்துவிட்டாலோ நகைக்கடைக்காரர்கள் அடையும் மகிழ்ச்சியை சொல்லி மாளாது. ஏனென்றால் 10 சவரன் நகை ஒருவர் வாங்கினால்(அதாவது 80 கிராம்) இன்றைய நிலவரப்படி 244992 ரூபாயை செலுத்தவேண்டும். அதில் அவர்களுக்கு கிடைக்கும் லாபம் மட்டும் ஏறத்தாழ 50000 ரூபாயை எட்டும். அந்த அளவுக்கு மனசாட்சியே இல்லாமல் வாடிக்கையாளரின் வயிற்றில் அடிக்கின்றனர்.

இப்படி நாம் வாங்கும் மோதிரம், கம்மல், நெக்லஸ் மற்றும் ஆரம் போன்றவற்றில் 80 சதவிகித தங்கமும், பெண்கள் தாலியில் அணிந்து கொள்ளும் குண்டு, நாணல், வாழை சீப்பு மற்றும் மாங்காய் போன்றவற்றில் 76 சதவிகித தங்கமும், செயின் போன்றவற்றில் 84-86 சதவிகித தங்கமும் சேர்க்கப்படுகிறது. இது மக்களுக்கு தெரியாததால் நகைகடைக்காரர்களுக்கு பெருத்த கொண்டாட்டம் தான். அந்த அளவுக்கு மக்களின் வயிற்றில் அடித்து சொத்து சேர்த்து விடுகின்றனர். அதனால் தான் நகை கடை வைத்திருப்பவர்கள் எல்லாம் குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்கள் ஆகிவிடுகின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது ஊராரின் வயிற்றில் அடித்து உள் வீட்டில் பொருள் சேர்க்கும் இத்தகைய கயவர்களை இறைவன் என்று தண்டிப்பான் என எண்ணத் தோன்றுகிறது.

இவர்களின் கொள்ளைக்கு முடிவு கட்டும் வகையிலும், பெண்ணிற்கு திருமணம் செய்பவர்களின் வயிற்றில் பால் வார்க்கும் வகையிலும் தமிழகத்தில் அம்மா தங்க நகை கடையை முதல்வர் திறந்து வைத்தால் மிகவும் புண்ணியமாக இருக்கும். ஏழை மக்களுக்காக பாடுபடும் முதல்வர் இதையும் செய்வார் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது.

அடுத்த வாரம் வெள்ளி நகைகள் மற்றும் அடகு கடைக்காரர்கள் அடிக்கும் கொள்ளையை பார்ப்போம்... maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக