ஞாயிறு, 27 ஜூலை, 2014

கௌரவ கொலையில் இருந்து தப்பி வந்த ராஜஸ்தான் பெண்ணும் தமிழ்நாட்டு பையனும் !

சாமி கும்பிடச்சொல்லி சுட்டுக் கொன்னுடுவாங்க... ''எங்கள் இனத்தில் வேறு இனத்தினரை திருமணம் செய்துகொண்டால் கொன்றுவிடுவார்கள். நான் வேறு இனத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டேன். அதனால் நிச்சயம் என் பெற்றோர் எங்களைக் கொன்றுவிடுவார்கள்'' என்ற பகீர் புகாருடன் பாதுகாப்பு கேட்டு நீதிமன்றப் படியேறியிருக்கிறார் மஞ்சு. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சு, கோவையைச் சேர்ந்த சுதாகரைத் திருமணம் செய்திருக்கிறார். திருமணமான ஒரே வாரத்தில் பிரிக்கப்பட்ட இந்த ஜோடி, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். ஆனாலும், பதற்றம் குறையவில்லை.

கோவையில் இருந்த மஞ்சு - சுதாகர் ஜோடியைச் சந்தித்தோம். சுதாகர் ஆரம்பித்தார். ''நான் இங்கே பிளாஸ்டிக் கடை நடத்திட்டு இருக்கேன். நண்பர்கள் மூலம் மஞ்சு மூணு வருஷத்துக்கு முன்னாடி அறிமுகமானார். ராஜஸ்தான்ல இருந்து இங்கே வந்து செட்டில் ஆகியிருந்தாங்க. ஆரம்பத்துல நண்பர்களாகத்தான் பழகினோம். ரெண்டு பேருக்கும் பிடிச்சுப்போச்சு. எங்க காதலுக்கு மஞ்சு வீட்டுல மட்டும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. அதனால, ஏப்ரல் மாசம் 13-ம் தேதி பேரூர் கோயில்ல நானும் மஞ்சுவும் கல்யாணம் பண்ணிகிட்டோம். ரெண்டு பேரும் மேஜர் என்பதால், அவங்களால எதுவும் செய்ய முடியலை.
ஒரு வாரத்துக்குப் பிறகு மஞ்சுவோட அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு வந்தாங்க. 'எங்களுக்குப் பிரச்னை இல்லை. உங்களையும் ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க முறைப்படி உங்களுக்கு சில பூஜைகள் பண்ண வேண்டி இருக்கு. நீங்க வீட்டுக்கு வரணும்’னு கூப்பிட்டாங்க.
24-ம் தேதி நாங்க மஞ்சு வீட்டுக்குப் போனோம். ரொம்ப நல்லா பேசினாங்க. நைட் 11 மணி இருக்கும். எலுமிச்சைப் பழம் சுத்திப்போடணும்னு கூட்டிட்டுப் போனாங்க. முதல்ல என்னை உள்ளே அனுப்பிட்டாங்க. அடுத்து மஞ்சுவை கூட்டிட்டுப் போனாங்க. என்னை ஒரு ரூமுக்குள்ள அடைச்சிட்டு, மஞ்சுவை முகத்துல துணியை சுத்தி கார்ல கடத்திட்டுப் போயிட்டாங்க. போலீஸுக்கு போன் பண்ணி தகவல் சொன்னேன். அவங்கதான் வந்து என்னை மீட்டாங்க. சென்னை உயர் நீதிமன்றத்துல ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தேன். அதுக்குப் பிறகுதான் மஞ்சுவை ஒப்படைச்சாங்க...'' என்றவரை இடைமறித்து மஞ்சு தொடர்ந்தார்.
'என்னைக் கடத்திட்டுப் போய் ராஜஸ்தான்ல எங்க மாமா வீட்டுல அடைச்சு வெச்சிருந்தாங்க. வீட்டுக்குள்ள கைதி மாதிரிதான் என்னை நடத்தினாங்க. எங்க சமூகத்துல லவ் மேரேஜ் பண்ணாலே பொண்ணுங்களைக் கொன்னுடுவாங்க. சாமி கும்பிடச் சொல்லி, சுட்டு கொன்னுடுவாங்க. எங்க சொந்தக்காரப் பொண்ணுங்க மூணு பேரை அப்படிக் கொன்னு இருக்காங்க. அது மாதிரி என்னையும் கொன்னு இருப்பாங்க. ஆனா, என்னைக் கடத்தினதா போலீஸ் கேஸ் இருந்ததால, அமைதியா இருந்தாங்க. ஆனா, என்னைக் கொன்னுடணும்னு தினமும் பேசிட்டே இருந்தாங்க.
என்னை மிரட்டி வெள்ளை பேப்பர்ல கையெழுத்து வாங்கினாங்க. அதுல, ராஜஸ்தான்ல இருந்து சுதாகர் என்னைக் கடத்திட்டுப் போனதா, அங்கே இருக்கும் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தாங்க. ராஜஸ்தான்ல சுதாகர் மேல கடத்தல் கேஸ் போட்டு, அவரை அங்கே வரவழைச்சு அவங்க இஷடத்துக்கு என்ன வேணும்னாலும் செய்யலாம்னு திட்டம் போட்டாங்க.
நிலைமை மோசமாயிடுச்சுன்னு எனக்குத் தெரிஞ்சுது. உடனே வீட்டுல எல்லோர் முன்னாடியும் நான் நடிக்க ஆரம்பிச்சேன். 'அந்தப் பையன்கூட போக மாட்டேன். உங்ககூடதான் இருப்பேன்’னு சொல்லி நம்ப வைச்சேன். அவங்களும் அதை நம்பி எனக்கு போன் கொடுத்துட்டாங்க. சுதாகர்கிட்ட இங்கே நடக்குற எல்லாத்தையும் சொன்னேன்.
அதுக்குப் பிறகுதான் சென்னையில் இருக்கும் கோர்ட்ல என்னை ஆஜர்படுத்த கூட்டிட்டு வந்தாங்க. 'நீ அவன்கூட போறதா கோர்ட்ல சொல்லிட்டா, வெளியில வரும்போது கண்டிப்பா உன்னை சுட்டுடுவோம்’னு மிரட்டிதான் அனுப்பினாங்க. அதனால 'இப்போதைக்கு நான் அப்பாகூட போறேன். இன்னும் ஒரு வருஷம் வரைக்கும் படிக்கிறேன்’னு கோர்ட்ல சொன்னேன்.
அதுக்குப் பிறகு என்னை கோவைக்கு கூட்டிட்டு வந்தாங்க. வேற ஒரு வீட்டுல அடைச்சு வெச்சிருந்தாங்க. அது எந்த இடம்னு எனக்குத் தெரியவே இல்லை. வீட்டுக்குப் பக்கத்துல இருந்த ஒரு கடையை சுதாகருக்கு அடையாளம் சொன்னேன். அவர் அந்த அடையாளத்தை வெச்சுத் தேடிக் கண்டுபிடிச்சு வந்துட்டாரு. அங்கே இருந்து தப்பிச்சு நானும் சுதாகரும் ஓடினோம். எங்களை அப்பா துரத்த ஆரம்பிச்சிட்டாரு. அப்போதான் ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். அவங்க பாதுகாப்போடுதான் திரும்ப கோர்ட்ல ஆஜரானேன். சுதாகர்கூடத்தான் போவேன் என்று கோர்ட்ல சொன்னேன்.
எங்க அப்பாவும் கோர்ட்டுக்கு வந்தாரு. 'நான் அவங்களை எதுவும் செய்ய மாட்டேன்’னு கோர்ட்ல சொல்லிட்டாரு. ஆனாலும், நான் அதை நம்பலை. அதனால்தான் போலீஸ் பாதுகாப்பு கேட்டிருக்கோம்'' என்று படபடத்தார்.
மஞ்சுவின் பெற்றோரைச் சந்திக்க அவர்களது வீட்டுக்குச் சென்றோம். வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவர்கள் ராஜஸ்தான் சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் சொன்னார்கள். மஞ்சுவின் குடும்பத் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ஃப்ராங்க்ளினிடம் பேசினோம். ''மஞ்சுவின் அப்பா கோவையில் ஏழ்மை நிலையில் பீடா வியாபாரம் செய்பவர். அந்தச் சூழ்நிலையிலும் மஞ்சுவை ஃபேஷன் டெக்னாலஜி படிக்க வைத்தார். இந்த நேரத்தில்தான் பிளாஸ்டிக் கடை ஒன்றில் வேலைபார்த்த சுதாகருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. 'படிப்பு முடியட்டும், அதற்குள் அந்தப் பையனும் ஒரு நல்ல வேலை தேடிக்கட்டும். நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்’ என்றுதான் சொல்லியிருக்கிறார். அதற்குள் காதல் வேகத்தில் அவசரப்பட்டுவிட்டார்கள். மற்றபடி அவர்கள் சொல்வதுபோல் கௌரவக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு துளிகூட இல்லை. இந்த விஷயத்தை சிலர் தேவை இல்லாமல் பெரிதுபடுத்திவிட்டார்கள்'' என்று சொன்னார்.
ராஜஸ்தானோ தமிழ்நாடோ கௌரவக் கொலைக்கான முயற்சிகள் நடந்திருந்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது!  
- ச.ஜெ.ரவி  vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக