வெள்ளி, 11 ஜூலை, 2014

வரலாற்று ஆவணங்கள் அழிக்கப்படுகிறது ! காவிப்பயங்கரவாதிகள் இனி காந்தியவாதிகள் போன்று காட்சி அளிப்பார்கள் ?

“என்னது, காந்தி செத்துட்டாரா” – இன்னும் கொஞ்ச நாளில் இந்த கலாய்த்தல் எடுபடாமல் போய் விடும். அதாவது காந்தியை கோட்சே கொன்றது மட்டும் வரலாற்றில் இருக்கும். கோட்சேவின் இந்துத்துவ தொடர்பு, சங்க பரிவார தொடர்பு – சிந்தனை அனைத்தும் அதிகாரப் பூர்வ ஆவணங்களில் இல்லாமல் போகலாம்.
வாஜ்பாயி தலைமையில் அமைந்த முந்தைய பா.ஜ.க கூட்டணி அரசு வரலாற்று பாடப் புத்தகங்களை திருத்தி புகழ் பெற்றது. இப்போது பா.ஜ.க.வின் தனிப்பெரும்பான்மை அரசு புத்தகங்களை மட்டுமின்றி அரசு ஆவணங்களையும், தரவுகளையும் அழிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.
மோடி பதவி ஏற்ற பிறகு மத்திய உள்துறை அமைச்சகம் மகாத்மா காந்தி கொலை வழக்கு தொடர்பான கோப்புகள் உட்பட 1.5 லட்சம் முக்கிய கோப்புகளை அவசர அவசரமாக அழித்திருக்கிறது. காந்தி கொலை வழக்கில் இந்துத்துவ அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தும் கோப்புகளை அழித்து விடுமாறு மோடி கூறியதன்படி இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்று  சி.பி.எம் உறுப்பினர் ராஜீவி மாநிலங்களவையில் குற்றம் சாட்டியிருக்கிறார்.

சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் “கோப்புகளை அழிக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார் என்பதை நான் உறுதியாக மறுக்கிறேன்” என்று அரசின் சார்பில் பதில் சொல்லியிருக்கிறார். அதாவது, கோப்புகள் அழிக்கப்பட்டதை அரசு மறுக்கவில்லை, மோடி அறிவுறுத்தலின் பேரில் அது நடக்கவில்லை என்பது மட்டும்தான் அவர்களது பதில்.
காந்தி கொல்லப்பட்ட செய்தியை வெளியிடுவதற்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தின் பதிவுகள் அடங்கிய கோப்புகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் என்னென்ன கோப்புகள் அழிக்கப்பட்டன என்பது மோடிக்கும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும்தான் வெளிச்சம்.
இன்னும் கொஞ்ச நாளில் காந்தி சாகவேயில்லை, காந்தியை கோட்சே கொல்லவேயில்லை, காந்தியை சுட்ட கோட்சேவுக்கு ஆர்.எஸ்.எஸ்சுடன் தொடர்பே இல்லை, ஆர்.எஸ்.எஸ் இந்து பாசிச பயங்கரவாத அமைப்பு இல்லை என்று அடுத்தடுத்து வரிசையாக வரலாற்றை திருத்துவதற்கு ஏற்ப பதிவுகள் அழிக்கப்படும், அல்லது மாற்றப்படும்.
இதைத் தொடர்ந்து அரவிந்தன் நீலகண்டன் போன்ற ‘ஆய்வாளர்கள்’ காந்தி கொல்லப்படவே இல்லை என்று ஆதாரங்களுடன் ஆய்வு நூல் வெளியிடுவார்கள். கோட்சே காந்தியை கொன்றதற்கும், இந்து-முஸ்லீம் பிளவை ஆர்.எஸ்.எஸ் ஊக்குவித்ததற்கும் ஆதாரமே இல்லை என்று வாதிடுவார்கள்.
குஜராத் படுகொலை வழக்குகளில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் மோடியை பிரதமராகவும், கிரிமினல் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் அமித் ஷாவை கட்சித் தலைவராகவும் அமர்த்தியுள்ள கிரிமினல் கும்பலின் நிர்வாகத்திடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
ஆனால், மோடி அரசு கொண்டு வரும் அன்னிய அடிமைத்தனம் வழங்கும் பலன்களை எதிர்பார்த்து சப்புக் கொட்டிக் கொண்டிருக்கும் நடுத்தரவர்க்க அறிவுஜீவிகள், இந்து உணர்வு கொண்ட கரையான்கள் கோப்புகளை தின்று விட்டன என்றோ, அக்கினி பகவான் அருளால்  கோப்புகள் தானாக எரிந்து விட்டன என்று சொன்னாலும் அதற்கும் சப்பைக் கட்ட தயாராகத்தான் இருக்கின்றனர்.
உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் (வழக்கம் போல பெயர் சொல்ல விரும்பாதவர்), “தற்போதைய அரசின் கீழ் ஏதாவது முக்கியமான கோப்புகள் அழிக்கப்பட்டனவா என்ற கேள்விக்கு அமைச்சரவையின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் இல்லை என்ற பதில் கிடைத்திருக்கிறது. அமைச்சகம் இதை நாடாளுமன்ற பதிவுகளில் கொண்டு வரப் போகிறது” என்று கூறியிருக்கிறார். காந்தி கொலை தொடர்பான கோப்புகள் அழிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை கண்டறிய துறை முழுவதும் அதிகாரிகளிடம் கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஆதாரம் இருக்கா இல்லையா என்பதை ஒரு கமிட்டி போட்டு நேரில் பார்த்தால் தெரிந்து விடப்போகிறது? இதற்கு ஏன் கருத்துக் கணிப்பு?
இப்பேர்ப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிகாரிகள் அனைவரும் எந்த முக்கியமான கோப்பும் அழிக்கப்படவில்லை என்று கருத்து சொல்லியிருப்பதால், அதை நாடாளுமன்றமும், நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தமது நம்பிக்கையின்படி அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதையே நீதிமன்றம் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என உத்திரவு போட்ட பா.ஜ.கவினருக்கு இது எல்லாம் புதிதில்லை.
மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் கூறிய பதிலை அடுத்து இந்த விஷயத்தை மேலும் விவாதிக்க முடியாது என்று இழுத்து மூடியிருக்கிறார் மாநிலங்களவை துணைத்தலைவர் காங்கிரசைச் சேர்ந்த சூரியநெல்லி புகழ் பி.ஜே.குரியன். இவர் தலைமையில் இயங்கும் மாநிலங்கள் அவை இனி மோடி அரசின் கிரிமினல் தனங்களை மறைக்கும் அறிகுறி இப்போதே தெரிகிறது.
கோப்புகளை அழித்தாலும் வரலாற்றை மாற்றி விட முடியாது என்று கூறியிருக்கும் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் சென்ற ஆண்டு வரை பா.ஜ.கவுடன் கூடிக் குலாவி மத்தியிலும், பீகார் மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தவர்தான். இந்த வரலாற்றிலிருந்து பார்த்தால் சரத் யாதவின் கூற்றுக்கு என்ன வரலாற்று முக்கியத்துவம் இருக்க முடியும்?
பாசிஸ்டுகளின் ஆட்சியில் உண்மையும், ஜனநாயகமும் எப்படி படிப்படியாக அரிக்கப்படும்; அதற்கு ‘ஜனநாயக’ அமைப்புகளும், நடுத்தர வர்க்கமும் எப்படி மௌன சாட்சியங்களாக இருப்பார்கள் என்பதற்கும் இந்த கோப்புகள் அழிப்பு ஒரு சான்று. 2-ம் உலகப்போரில் உலகைக் காப்பாற்றிய சோவியத் யூனியன் பங்கை அழிப்பதற்கு அமெரிக்கா எடுத்த வரலாற்று முயற்சி போல அமெரிக்காவின் அடிமையாக இருக்கும்  மோடி அரசு தனது கொடுமைகளை அழிக்க முயற்சி செய்கிறது.
ஆனால் ஆவணங்களில் மட்டும் வரலாறு இல்லை. வர்க்கப் போராட்டத்தால் உருவாகும் வரலாற்றை உழைக்கும் மக்கள் மீட்டு வருவார்கள். vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக