வெள்ளி, 11 ஜூலை, 2014

டெல்லி இரவு கேளிக்கை விருந்துகளில் அரசியல்வாதிகள் காபறேடுக்கள் , பணம்பட்டுவாடா பெண் உபசாரினிகள் ? என்னாதான் நடக்கிறது ?

ஜெசிகா லால்தில்லியின் சீமைச்சாராய விருந்தொன்றில் ஜெசிகா லால் என்ற பறிமாறும் பணிப் பெண்ணை மனுசர்மா என்ற இளைஞன் போதை வெறியில் சுட்டுக் கொன்றான். கொலை நடந்தபோது மனு சர்மாவின் நண்பர்களான மூன்று மேட்டுக்குடி இளைஞர்கள் அவனுடன் இருந்தார்கள். இந்தக் கேளிக்கை விருந்தை ஏற்பாடு செய்த பீனா ரமணி என்ற நடுத்தர வயதுப் பெண்மணியும் அங்கேதான் இருந்தாள்.
ஜெசிகா லால்
கொலை நடந்த நகரம் தலைநகரம் திரவுபதியைத் தருமன் பணயப் பொருளாக வைத்துச் சதுரங்கம் ஆடிய காலத்தில் அதன் பெயர் இந்திரப் பிரஸ்தம். பின்னர் அதே சதுரங்கக் கட்டத்தில் காய்களுக்குப் பதிலாக அடிமைப் பெண்களை நகர்த்திய முகலாயர் காலத்தில் அந்நகரத்தின் பெயர் தில்லி. இன்று புதுதில்லி.
தனித்தனிக் கட்டிடங்களில், தனித்தனி அலுவலக வளாகங்களில் ஒன்றுக் கொன்று தொடர்பற்றவை போன்று நடித்து வந்த பகல்நேரத் தில்லி, இரவில் தான் நிர்வாண நிலை எய்துகிறது. வணிகம் – அரசியல் – இராணுவம் – நீதித்துறை – அயலுறவு – பத்திரிகை இன்னபிற துறைகளுக்கிடையிலான உறவுகளைப் பகல் நேரத்தில் புரிந்து கொள்ள முடியாத பாமரர்கள் ஒரேயொரு இரவுநேர விருந்தைக் கண்டால் போதும் – புரிந்து கொள்வார்கள்.
இந்திய மக்களின் தலைவிதியை நிர்ணயம் செய்கின்ற அத்தகையதொரு இரவு விருந்தில்தான் ஜெசிகாவின் தலைவிதியும் நிர்ணயம் செய்யப்பட்டது.
விருந்தளித்த பீனாரமணி, கலந்து கொண்ட மனுசர்மா, பணியாற்றிய ஜெசிகாலால் மூவரின் வாழ்க்கையைப் பரிசீலித்தாலே போதும் – நாம் அறிந்திராத அந்தத் ‘தில்லியை’ அறிந்து கொள்ள முடியும்.

ஜெசிகாலால் – சம்பவம் நடைபெற்ற அன்று வயிற்றுக்கு மேல் சுருட்டி விடப்பட்ட மேல் சட்டையுடனும், குட்டைக் கால் சட்டையுடனும் நள்ளிரவு வரை மது பரிமாறிக் கொண்டிருந்தார். இரவு 2 மணிக்கு இன்னொரு கோப்பை மது கேட்டான் மனுசர்மா. அவள் இல்லை என்றாள். “மது இல்லையென்றால் உன்னை அருந்தட்டுமா?” என்றான். கொஞ்சம் வாக்குவாதம். பிறகு துப்பாக்கி வெடித்தது.
அரைகுறை உடையோடு, சாராயக் கடை ஒன்றின் இரவு பரிசாரராக, அவள் பணியாற்ற வேண்டிய அவசியம் என்ன? ஜெசிகா ஒரு விளம்பர நடிகை. அதற்கும் மேல் சம்பாதிப்பதற்காக மது பரிமாறும் வேலையைப் பகுதி நேரமாக மேற்கொண்டார். விருந்திற்கு வரும் மேலிடத்து மனிதர்களுடன் அறிமுகம் கிடைப்பது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உதவும் என்பது அவளது கணக்கு.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஜெசிகா விளம்பர நடிகையானதும், தில்லி மேட்டுக்குடியின் நாகரீக ஆடம்பர வாழ்க்கையைத் தெரிந்து கொண்டார். பொய்யை மொய்யாக்கும் விளம்பரத் தொழிலின் நடிகை வசதியான மேட்டுக்குடி வாழ்க்கையால் கவரப்பட்டதில் முரணில்லை. அதனால்தான் பல கனவுகளில் திளைத்தவர், அற்ப ஆயுளில் போய்விட்டார் என்று வருத்தப்படுகிறது அத்தகைய கனவுகளையே விற்பனை செய்துவரும் பத்திரிகை இந்தியா டுடே.
ஆனால் ஜெசிகாவின் கனவுகளை ஒரு துப்பாக்கியால் குடித்த மனுசர்மாவின் நிலைமை வேறு. அந்தக் கனவுகளையெல்லாம் ஏற்கனவே நனவில் அனுபவித்து வந்தவன். என்ன, சற்று எல்லை மீறிப் போய்விட்டான் அவ்வளவுதான்!
மனு சர்மா
மனு சர்மா
அவன், முன்னாள் ஜனாதிபதி சர்மாவின் நெருங்கிய உறவினன், நரசிம்மராவ் ஆட்சியில் மந்திரியாக இருந்த வினோத் சர்மாவின் மகன், புகழ்பெற்றற வட இந்திய ஆங்கிலக் கான்வெண்டு – கல்லூரிகளில் படித்தவன், கல்லூரி நாட்களில் தினம் ஒரு பெண்ணுடன் பென்ஸ் காரில் சுற்றியவன், குருசேத்திரத்திற்கு அருகிலுள்ள குடும்ப சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர், வார விடுமுறைகளில் தில்லியின் கேளிக்கைத் தலங்களில் குடியும், கூத்துமாய்க் கழிப்பவன், எங்கு சென்றாலும் சுற்றிவரும் பாதுகாவலர்களுடனும், கைத்துப்பாக்கியுடனும் விஜயம் செய்பவன். இவையே மனுசர்மாவின் வாடிக்கையான முகங்கள்.
பணமும், அதிகாரமும் சரிவிகிதத்தில் கலந்து உருவான திமிரின் பௌதீகப் பொருளே மனுசர்மா. பொது இடங்களில் சிறு தடை வந்தாலே அவனது துப்பாக்கி வானைப் பார்த்து சீறும் – அப்போது ஒலிக்கும் அவனது புகழ்பெற்ற வாடிக்கையான முழக்கம் “நான் ஜனாதிபதியின் சொந்தக்காரன் தெரியுமா, தொலைத்து விடுவேன்!”
இன்னும் அவனைப் பற்றித் தெரிய வேண்டுமா? அவனது சர்க்கரை ஆலைக்குச் செல்லுங்கள். அவனால் பணம் கொடுக்காமல் பட்டை நாமம் போடப்பட்ட கரும்பு விவசாயிகளைக் கேளுங்கள். ‘ஐயா சாமி பணம் எப்பக் கிடைக்கும்’ என்று பணிவுடன் கேட்ட குற்றத்திற்காக சித்திரவதை செய்யப் பட்ட அனுபவத்தைக் கண்ணீர் மல்கக் கூறுவார்கள்.
இந்தக் கிரிமினல் பொறுக்கியின் குடி கூத்துக் களப்பணிகளுக்குத் தோள் கொடுத்த நண்பர்கள் மூவர். டோனி என்ற அம்ரீந்தர் சிங், கோகோ – கோலாவை பாட்டிலில் அடைக்கும் தில்லி தொழிற்சாலையின் பொது மேலாளர். அவனுடன் பணியாற்றுபவன் அலோக் கன்னா. கோலாவின் உலகக் கோப்பைக் கிரிக்கெட் விளம்பர வாசகம் ‘ரெஃப்ரஷ் ஹோ ஜா.’ அந்தக் குதூகலத்தை வாழ்க்கையில் கடைபிடித்த இருவரும், கோக்கின் பாட்டில் தயாரிப்பில் மட்டுமல்ல, பண்பாட்டுத் தயாரிப்பிலும் விசுவாசமாக நடந்து கொண்ட உண்மை ஊழியர்கள். இருவரும் எம்.பி.ஏ. (மேலாண்மை நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம்) படித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னே குப்பனும் சுப்பனுமா ‘கோக்கில்’ வேலை பார்க்க முடியும்! மூன்றாவது நட்புக் கோடியின் பெயர் விகாஸ் யாதவ். இவனது தந்தை ராஜ்யசபா உறுப்பினராகவும், ரவுடியாகவும் இருந்து பிரபலமானவர். தனயனது சிறப்புக்குத் தந்தையின் பட்டமே போதும்.
***
பீனா ரமணி, மேட்டுக்குடி விருந்துகளுக்கு ஒரு தேவதை. ஒரே நாளில் மூன்று விருந்துகளுக்குக் கூட அயராமல் செல்பவரென்று, நண்பர்கள் பாராட்டுகின்றனர். மட்டுமல்ல, விருந்துகளில் உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும், மலர்விப்பவரும் கூட. எனில் அவர் யார், தொழில் என்ன, விருந்துகளில் நோக்கம் என்ன?
பீனா ரமணி
பீனா ரமணி
அவர் ‘சோசியலைட்ஸ்’ என்றழைக்கப்படும் ஆடம்பர – நாகரீக – மேட்டுக்குடி சமூகத்தின் ஒரு பிரதிநிதி. அவரது தொழில், அரசியல், வியாபார, சினிமா, நிழல் உலக வேலைகளை முடித்துக் கொடுக்கும் ‘தரகர்’ வேலை. அதாவது ‘பொம்பளை மாமா’. விருந்துகள் அவரது தொழிலுக்காக உருவாக்கப்படும் பூலோக சொர்க்கங்கள். “புதுப்புது ஆட்களைச் சந்தித்து எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதில் அம்மா கவனமாக இருப்பார்” என்று ஒரு பத்திரிகையில் எழுதினாள் மகள் மாலினி. எல்லையை விரிவுபடுத்தும் ‘தொழிலில்’ தற்போது மகளும் தாயால் பயிற்றுவிக்கப்படுகிறாள்.
முன்பு தில்லி வாழ் மேட்டுக்குடியினருக்கு அழகான நடன விருந்து நிகழ்ச்சிகள் குறைவாக இருப்பதைக் கண்டு பீனா மிகவும் வருத்தப்பட்டார். அதன் பொருட்டு குதுப்மினாருக்கு அருகிலுள்ள தன் பண்ணை வீடான டாமரின்ட் கோர்ட்டிலேயே தனது புகழ் பெற்ற ‘வியாழக்கிழமை விருந்துக் – கேளிக்கை’யை ஆரம்பித்தார். உயர் வகை மதுக்களை கொள்முதல் செய்து, மது பரிமாற அழகிகளை ஏற்பாடு செய்து, ஒவ்வொரு விருந்தின் போதும் பிரபல நட்சத்திர விருந்தினர்களை வரவழைத்து – தூள் பறத்தினார்.
இவரது நட்சத்திர வாடிக்கையாளர்களின் பட்டியலே அவரது செல்வாக்கைப் பறைசாற்றும். சில ஆண்டுகளுக்கு முன் நடந்த இவரது இரண்டாவது திருமணத்தில் வந்தவர்களை வரவேற்ற ரொமேஷ் சர்மா, (தாவுத் இப்ராஹிமின் டெல்லித் தளபதி – தற்போது சிறையில்) ஆடை வடிவமைப்பாளர் ரோஹித்பால், கலைப்பொருள் விற்பனையாளர் ரிது வாலியா, இந்தியத் தொழிலதிபர்கள் கவுன்சிலின் தலைவர் ராஜேஷ் ஷா, எஸ்கார்ட்சின் நந்தா, அப்பல்லோ டயரின் நீரஜ் கன்வர், பாம்பே டையிங் ஜெய்வாடியா, பா.ஜ.க. வெளியுறவு அமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா, ஹாலிவுட் நடிகர் ஸ்டீவன் செகால், போலீஸ் கமிஷ்னர் தட்லால், சந்திரா சுவாமி என்று பட்டியல் நீளுகிறது.
***
ட்டுக் கட்சிகள், அதிகார வர்க்கம், தரகு முதலாளிகள் ஆகியோரின் குலக்கொழுந்துகள் தொடுத்திருக்கும் ஆளும் வர்க்கப் பயங்கரவாதம் இதுதான். அந்தப் பட்டியலின் சமீபகால சம்பவங்களைப் பாருங்கள்.
ஹரியானா உள்துறை மந்திரி மகன் மனோஜ் குமார், 98-இல் மன்ஜித் சிங் என்பவரைக் கொன்ற வழக்கு தற்போது நடந்து வருகிறது. பஞ்சாப் மந்திரி பகவான் தாஸ் மகன் கமல் தீப் அரோரா – ஒரு கடைக்காரரைக் கடத்தியிருக்கிறான். முன்னாள் முதல்வர் பீந்த் சிங்கின் பேரன் குருகிரத் சிங், பிரெஞ்சு சுற்றுலாப் பயணி காதியாலைக் கற்பழித்தான். காங்கிரசின் இளைஞர் தலைவன் சுசீல் சர்மா மனைவியைத் தந்தூரி அடுப்பில் வறுத்துக் கொன்றான். முதல்வர் பதவி துறந்து மாநகரப் பேருந்தில் சென்ற எளிமையான பா.ஜ.க. தலைவர் சாகிப் சிங்கின் பேரன்கள் ஒரு தில்லிக் கடைக்காரரைக் கொன்றனர். இன்னும் ஓம் பிரகாஷ் சௌதாலா, முலாயம் சிங் யாதவ், கல்ராஜ் மிஸ்ரா ஆகியோரின் வாரிசுகள் கற்பழித்த கணக்குகளும், புகார்களும் ஏராளம்.
வினோத் சர்மா
வினோத் சர்மா
அதிகாரத்தின் சிகரத்திலிருக்கும் அவர்களிடம் விரும்பிய ஒன்று கிடைக்காது என்பது அகராதியில் கிடையாது. மட்டுமல்ல, இவர்களின் ஒவ்வொரு குடும்பமும் பல தொழில் நடத்தும் கோடீசுவரக் குடும்பங்களாகும். உதாரணத்திற்கு மனுசர்மாவின் அப்பா வினோத் சர்மாவின் சொத்துக்களை எண்ணுங்கள். சண்டிகார் – மணாலி – ராய்ப்சால் நட்சத்திர விடுதிகள், ஒரு கட்டுமானக் கம்பெனி, ஆயுர்வேதக் கல்லூரி, 2 சர்க்கரை ஆலைகள் – அப்புறம் மந்திரி, ஜனாதிபதி வகையில் சேர்ந்தவை என்று கணக்குப் போட முடியாத அளவுக்கு கருப்புக் கணக்காக இருக்கிறது.
இந்தியாவின் ஏனைய பகுதிகளை விட, இந்தி பேசும் மாநிலங்களில் தான் உடன்கட்டை, குழந்தை மணம், வரதட்சணைக் கொலை, தாழ்த்தப்பட்டோர் படுகொலை உள்ளிட்ட நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மைகள் அதிகம். இப்பகுதிகளிலிருந்து உருவாகும் இச்சுரண்டல் கூட்டம், அரசியல் அதிகாரத்தைச் சுவைக்கும்போது கள் குடித்த குரங்காகிறது. நம்மூர் மு.க.அழகிரி, சுதாகரனின் ஆடுகளம் தமிழ்நாடு மட்டும்தான். இவர்களுக்கோ இந்தியா முழுவதும் சொந்தம். இந்தி மாநிலங்களின் அரசியல் அதிகாரத்திலிருந்து வரும் திமிரும், திமிராடும் இந்தியக் களமும் சுலபமாக சாத்தியமாகிறது.
மனு சர்மாவிடம் துப்பாக்கி இருப்பதும், கெட்ட சகவாசம் இருப்பதும் தெரியாதே என்று முதலையாய் அழுகிறார் வினோத் சர்மா. ஆனால் இந்த யோக்கியர் 2 லட்சம் மதிப்புள்ள ஸ்காட்டிஷ் கைத் துப்பாக்கியைச் சுங்கத்துறையிடமிருந்து ரூ 9 ஆயிரத்துக்கு அமுக்கினார். காரணம் மந்திரிப் பதவி என்றால் மனுசர்மா மட்டும் துப்பாக்கி வைத்திருப்பது தவறா? தில்லியில் மட்டும் 55,000 லைசன்ஸ் பெற்ற துப்பாக்கிகளும், 1 லட்சம் லைசன்ஸ் பெறாமலும் உள்ளனவாம். உழைக்கும் மக்கள் ஆயுதம் ஏந்தக் கூடாது என்பதற்கு ஆயிரத்தெட்டு கட்டுப்பாடு போட்டு லைசென்ஸ் முறையை வைத்திருக்கிறார்கள். இந்த விதிகள் பணக்காரக் கேடிகளுக்கு மட்டும் பொருந்துவதில்லை. மேலும் பலமுறை துப்பாக்கியைப் பிரயோகித்த மனுசர்மாவின் லைசன்ஸ் ரத்து செய்யப் படவில்லை. ஒரு கொலைக்குப் பிறகே ரத்து செய்யப்பட்டது. இனி ஆயுதத்தினால் வரும் சிக்கல்கள் வடகிழக்கிலோ, தண்டகாரண்யாவிலோ இருந்தல்ல, அவர்களின் பண்ணை வீடுகளிலிருந்தே சீறிப் பாயும்.
எப்படி, இவர்களது ஊழல் வழக்குகள் புனிதமான இந்திய அரசியல் சட்டத்தால் நமத்துப் போனதோ, கிரிமினல் வழக்குகளும் அப்படித்தான். எடுத்துக் காட்டாக, கொலை நடந்த நாளில் மனுசர்மாவுடன் கூத்தடித்த விகாஸ் யாதவை மட்டும் போலீஸ் கைது செய்ய முடியவில்லை. கடைசியில் தம்பி, மணிப்பூர் சென்று முன் பிணை வாங்கி வந்து, டெல்லியில் சரணடைந்து இப்போது காரில் சுற்றுகிறான். போலீஸ் வழக்கம் போல அசடு வழிகிறது. தில்லிக் குற்றவாளி ஒருவன் வடகிழக்கு மாநிலம் சென்று முன்பிணை வாங்குகிறான் என்றால், இவர்களது அதிகார பலம் – செல்வாக்கு வலைப்பின்னல் என்ன என்று யோசித்து தலை சுற்றுகிறது. மேலும் இதே கேடி தனது 14 வயதில் (19-ஆம் ஆண்டு) சக மாணவர்களைக் கொன்று, இதே மாதிரி ‘ஜாமின் டெக்னிக்கில்’ வெளிவந்தவனாம். வழக்கும் அம்பேல்.
இப்படி நிலப்பிரபுத்துவத்திமிர், தரகுமுதலாளிப் பணம், உலகமயமாக்கதின் நுகர்வு வெறி மூன்றும் இணைந்து ஆட்டம் போடும், அவர்களின் வாரிசுகள் ஒருபுறமிருக்கட்டும். இவர்களின் வன்முறையை விட இவர்களின் சமூக, அரசியல், வணிக நடவடிக்கைகளும், ஆடம்பர கேளிக்கை விருந்துகளும் சங்கமிக்கும் அன்றாட வாழ்க்கை எப்படி இயங்குகிறது என்பதே முக்கியமானது. நாம் புரிந்து கொள்ள வேண்டியது, அதைத்தான்.
அவர்களைப் பொறுத்தவரை விருந்துகள் என்பது ஒரு சமூக அங்கீகாரம். அது ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஒரு ரம்மியமான சூழ்நிலையில் சங்கமிக்க வைக்கிறது. அந்த ரம்மியத்தின் மதிப்பு பல லட்சங்கள். ஒவ்வொரு தடவையும் மத்திய காலபாரசீகம், மொகலாயர் காலம், விக்டோரியா பாணி, பாலிவுட் பாணி, அஜந்தா ஓவியப் பாணி என்ற விதவிதமான கருக்களுக்கேற்ப விருந்து சூழ்நிலை உருவாக்கப்படும். அலங்கரிக்கப்படும்.
அதற்கு 5 லட்சம், மதுவுக்கு 1 லட்சம், அழகுப் பொருட்கள், இடத்திற்கு 1 லட்சம், உணவுக்கு 1 லட்சம் என்று விருந்துகளின் தரத்திற்கேற்ப லட்சங்கள் அதிகரிக்கும். விருந்தினர்களும் விருந்து கோரும் தரத்துடன் வருவார்கள். லண்டன் ஷுக்கள், இத்தாலிய சட்டைகள், ஜெர்மானியப் பைகள், ஜெனிவா வாட்ச்கள், தென் ஆப்ரிக்க வைரங்கள் என்று அவர்களை அலங்கரிக்கும் பொருட்களெல்லாம் சாதாரணம். இன்னும் சிங்கப்பூரிலிருந்து இசைக் குழுவும், எகிப்திலிருந்து சமையல்காரர்களும் கூட சிறப்பு விருந்துக்கு வருவார்கள்.
அவர்களின் திருமணம், பிறந்த நாள், மணநாள், வெளிநாடு போனது – வந்தது, நிறுவனத் திறப்பு – மூடல், கருமாதி உட்பட ஏதாவது சாக்கிட்டு விருந்து நடக்கும். இரும்பு, சர்க்கரை, சாராயம், பத்திரிகை, மருந்து, சினிமா இன்னபிற தொழில்களின் சக்கரவர்த்திகள் வருவார்கள். விருந்துகளில் ஒவ்வொரு துறையினருக்கும் ஏராளமான தொடர்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் முடிவாகும். பல பிரச்சினைகளுக்கு வழிகிடைக்கும். அதனால்தான் விருந்துகளுக்கு அழைக்கப்படும் தகுதியைப் பெறுவது என்பது அவர்களைப் பொறுத்தவரை வாழ்வா, சாவா பிரச்சினை. டெல்லியில் பழச்சாறு விற்ற குல்ஷன் குமார் ஆடியோ உலகின் அதிபதியாக மாறியதும், குமாஸ்தாவான அம்பானி இந்தியாவின் முதல் செல்வந்தர் நிலை அடைந்ததும் – விருந்துகளின் மகிமைதான். அதாவது அவர்களின் குறுக்கு வழிக்கும், கருப்புப் பணத்திற்கும், அரசியல் வணிக தரகு வேலைக்கும் – விருந்தின் பயன்பாடு அவசியம்.
சந்திரசாமியின் அன்னியச் செலவாணி ஊழலுக்கு உடந்தையாக இருந்தது முதல், இந்தி நடிகை ரேகாவை டெல்லி தொழிலதிபருக்கு மணமுடித்துக் கொடுத்தது வரை பீனா ரமணியின் பணிகள் பல. இவரது விருந்துக்கு வந்தவர்கள்தான் அமெரிக்க ஹாலிவுட் நடிகர்கள் ரிச்சர்டு கேர், ஸ்டீவன் செகல் போன்றோர். இவர்கள் தான் திபெத்துக்கும், தலாய்லாமாவுக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்பவர்கள். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும் இதுதான். இவர்களுக்கும், பீனா ரமணிக்கும், என்ன உறவு?
இந்திய விருந்துகளின் தன்மையை விட உலக விருந்துகளின் வீரியம் அதிகம். இந்தியாவின் சீன விரோதப் போக்கு, தலாய்லாமா – திபெத்திய அகதிகளுக்கு செயல்படும் உதவி போன்றவற்றை வைத்து அத்தகைய அமெரிக்க விருந்தினர்கள் வருகிறார்கள். பயன்படுத்துகிறார்கள். பீனாவுக்கும் பயன்படுகிறார்கள். இந்தியா போஃபர்ஸ் பீரங்கியை வாங்க வேண்டுமா, ஜெர்மன் நீர்மூழ்கியை வாங்கவேண்டுமா என்பதெல்லாம் இங்கு தான் முடிவாகின்றன.
சந்திராசாமி, சுப்பிரமணிய சாமி
சந்திராசாமி, சுப்பிரமணிய சாமி
ஒவ்வொரு நாடும் உலக அளவில் தனக்குப் பிரச்சாரம் செய்ய இத்தகைய குடி – கூத்து வழிகளையே கையாளுகின்றன. ஐ.நா. சபையிலும், அமெரிக்க காங்கிரசிலும் தனக்கு நல்ல பெயர் பிரச்சாரம் செய்ய இந்திய அரசு சில அமெரிக்க தரகுக் கம்பெனிகளை பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி குடி – கூத்து செலவுகள் செய்தே அனைத்து நாடுகளும் தங்கள் அயல் உறவுகளைக் கையாளுகின்றன. குறிப்பாக வாஜ்பாயி 77-இல் வெளியுறவு அமைச்சராக இருக்கும்போது இவ்வேலை செய்வதில் புகழ்பெற்றார்.
தாவூத்தின் தில்லித் தளபதி ரொமேஷ் சர்மாவின் கட்டிடத்தில்தான் சேஷனது தேசபக்தி அலுவலகம் செயல்பட்டது. சேஷனது மனைவி ஜெயலலிதாவுக்காக வழக்காடியவர். சேஷன் சங்கர மடத்தின் முக்கிய விருந்தினர். சங்கர, சாய்பாபா மடங்களுக்கு வருமானவரிச் சோதனை, அந்நியச் செலவாணிக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. ஜெயாவுக்காக சுப்பிரமணிய சாமி நடத்திய ‘சோனியா தேநீர் விருந்து’ சமீபத்திய பிரபலம். வளைகுடா ஆயுதத் தரகன் கசோகி, சந்திராசாமி, சுப்பிரமணிய சாமி, சந்திரசேகர் அனைவரும் நெருங்கிய நண்பர்கள். சாமி, சேகரைத் தமிழகத்தில் தூக்கிப் பிடிப்பவர் துக்ளக் சோ. ஆம். அவர்களது சமூக இயக்கம் இப்படித்தான். அதில் அரசியல் தொடங்கி நிழல் உலகம் வரை அவர்களுக்கு விருந்துகள் ஒரு சூப்பர் மார்க்கெட்.
இப்படி அவர்கள் தங்கள் பணத்தை, நட்பை, உறவை, தகவலை, சிக்கலை, வழியை, ஆடம்பரத்தை, திமிரை, எப்போதாவது தோட்டாக்களையும் பரிமாறிக் கொள்கிறார்கள். தொழிலில் தோற்பவர்கள் அங்கே மதிக்கப்படுவதில்லை. அவர்களுக்குக் கருணையும் இல்லை. வென்றவர்களுக்குத் தான் கிராக்கி அதிகம். ஜெசிகா லால், பீனா ரமணி, மனுசர்மா மூவரும் இவ்வுலகைச் சேர்ந்தவர்கள். ஜெசிகா கொல்லப்பட்டார். பீனா தொழிலைத் தொடர்கிறார். மனு, தான் ஒரு அப்பாவி என்கிறான். விரைவில் வெளியே வருவான்.
- வேல்ராசன் vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக