செவ்வாய், 29 ஜூலை, 2014

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் மரணம் ! நீதிகிடைக்காத விரக்தி !

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண் தீக்குளித்தார். உடல் முழுவதும் தீயில் கருகியதால் அவர் மாலையில் இறந்தார்.
வேலூர் விருதம்பட்டு, காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி மல்லிகா (50). இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த இருவர் வீட்டைக் காலி செய்ய மறுத்ததுடன், சீட்டுப் பணமாக ரூ.1.50 லட்சம் வாங்கிக் கொண்டு அதையும் தர மறுத்தார்களாம். இதை தட்டிக் கேட்ட மல்லிகாவை தாக்கினராம். ஊழல் மலிந்த ஆட்சியர் ஊழல் மலிந்த நிர்வாகம்  பணத்துக்கு விலைபோன அதிகாரிகள்

இதுகுறித்த புகாரை வேலூர் விருதம்பட்டு காவல் நிலையத்தில் கொடுத்தபோது அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் பாதிக்கப்பட்ட மல்லிகா கோரிக்கை மனு, 5 லிட்டர் கேன் ஒன்றில் பெட்ரோலுடன் வேலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தார்.
குறைதீர் கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில், அவர் ஆட்சியர் அலுவலகப் பூங்கா பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை அருகே தீக்குளித்தார். தீ உடல் முழுவதும் பற்றி எரிந்ததால், அவர் அங்கும் இங்கும் ஓடினார். இதைக் கண்ட பொது மக்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் கீழே விழுந்து துடித்தார்.
மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால், கோட்டாட்சியர் பட்டாபிராமன் ஆகியோர் அப்பெண்ணைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 25 நிமிடம் கழித்து 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்தடைந்தன. அவற்றில் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்ட மல்லிகா, அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
90 சதவீதம் அளவுக்கு தீக்காயமடைந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி மாலையில் மல்லிகா இறந்தார்.
பாதுகாப்பில் அலட்சியம்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடக்கத் தொடங்கியுள்ளன. ஏற்கெனவே பல சம்பவங்களில் தீக்குளிக்கும் முன்பே சுற்றியுள்ள பொது மக்களும், போலீஸாரும் சிலரைக் காப்பாற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த ஆற்காடு, குப்பிடிசாத்தம் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி தீக்குளித்து இறந்தார். இதையடுத்து ஓரிரு மாதங்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், மீண்டும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது மக்கள் வந்து செல்லும் முக்கிய நிகழ்வுகளில் கூட பெயரளவில் மட்டுமே போலீஸார் நிறுத்தப்படுகின்றனர்.
இத்தகைய சம்பவங்களைத் தடுக்க இனியாவது மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதன் மூலம் உயிரிழப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக