செவ்வாய், 29 ஜூலை, 2014

இந்தியாவில் 7 சதவீதம் பேருக்கு ஹெபடைடிஸ் பி வைரஸ் பாதிப்பு

இந்தியாவில் ஏழு சதவீதம் பேர் ஹெபடைடிஸ் பி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரி கல்லீரல் மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் கே. நாராயணசாமி தெரிவித்தார்.
உலக ஹெபடைடிஸ் தினத்தை முன்னிட்டு சென்னை மருத்துவக் கல்லூரி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சார்பில் திங்கள்கிழமை பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் டாக்டர் கே.நாராயணசாமி கூறியது: எய்ட்ஸ் நோயைக் காட்டிலும் ஹெபடைடிஸ் பி வைரஸ் 100 சதவீதம் தொற்று நோயாகும். கல்லீரல் புற்றுநோயாளிகளில் 80 சதவீதம் பேர் ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.  இந்தியாவில் ஏழு சதவீதம் பேர் ஹெபடைடிஸ் பி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் கல்லீரல் சிகிச்சைத் துறை 2008-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறையில் நாளொன்றுக்கு 160 வெளிநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.  ஆண்டுக்கு சுமார் 11 ஆயிரம் நோயாளிகள் இந்தத் துறையின் கீழ் சிகிச்சை பெறுகின்றனர் என்றார் அவர்.
சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.விமலா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் பாதிப்பு: சென்னை ராணி மேரி மகளிர் கல்லூரியில் திங்கள்கிழமை நடந்த ஹெபடைடிஸ் பி வைரஸ் நோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் இரைப்பை - குடல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஏ.ஆர். வெங்கடேஸ்வரன் பங்கேற்று பேசியது:
உலகில் 12 பேரில் ஒருவர் ஹெபடைடிஸ் (கல்லீரல் அழற்சி) நோயினால் பாதிக்கப்படுகிறார். உலகில் ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இது, எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். இந்த நோய் உலகத்தில் 8-ஆவது பெரிய உயிர்க்கொல்லி நோயாகும்.
நாட்டில் ஆண்டுக்கு சுமார் 4.75 கோடி பேரும், தமிழகத்தில் 30 லட்சம் பேரும், சென்னையில் 2.75 லட்சம் பேரும் கல்லீரல் அழற்சி நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நோய் தீவிரமடைந்தால் கல்லீரல் மாற்று சிகிச்சையே தீர்வாக அமையும். கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு அதிக செலவு ஆகும். எனவே இந்நோய் வராமல் முன்கூட்டி தடுப்பதே சிறந்தது. இதனைத் தடுக்க அனைவரும் 3 தவணைகளாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார் அவர். ராணி மேரி மகளிர் கல்லூரியின் முதல்வர் அக்தர் பேகம், பேராசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக