செவ்வாய், 29 ஜூலை, 2014

24 ஆண்டுகளுக்கு பின்னர் லாலு, நிதிஷ் ஓரணியில் !

பீகாரில் நடைபெறவுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான  இடைத்தேர்தலில், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதிஷ்  குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்துள்ளதன் மூலம்  நிதிஷ் குமார், லாலு இடையேயான 24 ஆண்டுகால மோதல் போக்கு  முடிவுக்கு வந்துள்ளது. பீகார் இடைத்தேர்தல்: பீகாரில், சாப்ரா,  பாகல்பூர், ஹாஜிபூர், மொஹானியா, நர்கடியாகஞ்ச் ஆகிய 5  தொகுதிகளின் எம்எல்ஏக்கள், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்  போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
ராஜ்நகர், ஜாலே, மொகிதீன் நகர், பர்பட்டா, பங்கா ஆகிய மற்ற 5  தொகுதிகளின் எம்எல்ஏக்கள், அரசியல் காரணங்களுக்காக தங்களது  பதவியை ராஜினாமா செய்து விட்டனர். இதனால் காலியாக உள்ள 10  சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகஸ்ட் 21ம் தேதி  நடைபெறவுள்ளது. நிதிஷ், லாலு, காங்., கூட்டணி: இடைத்தேர்தலில்,  நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய  ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து  இந்த தேர்தலை சந்திக்க உள்ளன. ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய  ஜனதா தளம் ஆகியவை தலா 4 இடங்களிலும், காங்கிரஸ் 2  இடத்திலும் போட்டியிட உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு  நாளை வெளியாகும் எனத் தெரிகிறது. பாஜகாவால் விழைந்த ஒரே ஒரு நன்மை இதுதான் போலும்


நேற்று முன்தினம், சோனியா காந்தி அளித்த இப்தார் விருந்தில்,  லாலுவும், ஐக்கிய ஜனதா தளத்தின் சரத் யாதவும் கலந்து கொண்டனர்.  நடந்து முடிந்த உத்தரகண்ட் இடைத்தேர்தலில் 3 சட்டமன்ற  தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது. இதில் 2 பாஜக வசம்  இருந்தவை. தற்போது பீகாரில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி  அமைந்துள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் கூறி உள்ளது. மோதல் போக்கு  முடிந்தது: பீகாரின் முன்னாள் முதல்வர்களான லாலுவுக்கும், நிதிஷ்  குமாருக்கும் இடையே நிலவி வந்த 24 ஆண்டு கால மோதல் போக்கு  தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நிதிஷ் குமார் முதலமைச்சராக  இருந்தபோது லாலுவும், லாலு முதலமைச்சராக இருந்தபோது  நிதிஷ்குமாரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக குற்றம் சாட்டி வந்தனர்.  பீகார் அரசியலில் லாலுவும், நிதிஷும் பரம எதிரிகளாகவே பார்க்கப்பட்டு  வந்தனர். இந்நிலையில், பாஜகவை வீழ்த்த, ஐக்கிய ஜனதாதளம்,  ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி  அமைத்துள்ளன. இது குறித்து பீகார் ஐனதாதள தலைவர் நாராயண் சிங்  கூறுகையில், “ மதவாத சக்திகளை வீழ்த்துவது என்பது காலத்தின்  தேவை. அதற்காக இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

லாலுவுக்கும் நிதிஷுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள்  இருக்கின்றன. அதைவிட அவர்கள இருவருக்கும் இடையே ஒன்றுபட்ட  எண்ணங்களும் ஏராளம் உள்ளன. “ என்றார். பாஜக விமர்சனம்:  இதற்கிடையே லாலுவையும், நிதிஷையும் பாஜக கடுமையாக  விமர்சித்துள்ளது. இதுகுறித்து பீகார் மாநில பாஜக தலைவர் மங்கள்  பாண்டே கூறுகையில், “ அரசியலில் தோல்வியை சந்தித்துள்ள  லாலுவும், நிதிஷும் இப்போது இணைந்திருக்கிறார்கள். அவர்கள்  தங்களுடைய அரசியல் அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வதற்காக  கூட்டணி அமைத்துள்ளனர். இது மாயத்தோற்றத்தை மட்டுமே  ஏற்படுத்தும். “ என்றார் dinakaran,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக