ஞாயிறு, 13 ஜூலை, 2014

புதுவை கவர்னர் கட்டாரியா பதவி நீக்கம் ! காஞ்சி சங்கராச்சாரியாரின் சங்கரராமன் கொலைவழக்கு மீளாய்வு காரணம் ?


சென்னை, ஜூலை 13 - மத்தியில் பாரதீய ஜனதா அரசு பதவியேற்றதும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட கவர்னர்களை மாற்ற முடிவு செய்தது. இதற்காக பல கவர்னர்களுக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சில கவர்னர்கள் பதவியில் இருந்து விலகினார்கள்.
ஆனால் புதுவை கவர்னருக்கு மத்திய அரசு எந்த நிர்பந்தமும் கொடுக்கவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து கவர்னராக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. புதுவை கவர்னரை மாற்றும்படி முதல்வர் ரங்கசாமி மத்திய அரசை வலியுறுத்தி வந்தார். இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் முதல்வர் ரங்கசாமி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்தித்து கவர்னரை மாற்றும்படி வற்புறுத்தினார். உடனே கவர்னர் வீரேந்திர கட்டாரியாவும் டெல்லி சென்று பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்து பேசினார். அப்போது தன்னை மாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதனால் கவர்னரை மாற்றாமல் மத்திய அரசு மவுனம் சாதித்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவர் நீக்கப்பட்டுள்ளார். அவர் மாநில அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்காமல் செயல்பட்டதால் தான் மாற்றப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். காஞ்சிபுரம் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அப்பீல் செய்யும்படி சமீபத்தில் கவர்னர் கட்டாரியா உத்தரவு தெரிவித்தார்.
இது சம்பந்தமாக மாநில அரசுடன் எந்த ஆலோசனையும் பெறாமலேயே கவர்னர் தன்னிச்சையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. புதுவை மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் மாநில கவர்னருக்கு கூடுதல் அதிகாரங்கள் உள்ளன. இதன்படி சில விஷயங்களில் கவர்னர் தன்னிச்சையாக முடிவெடுத்து கொள்ளலாம். இதை பயன்படுத்தி தான் கவர்னர் அப்பீல் முடிவை எடுத்ததாக தெரிகிறது.
ஆனால் சங்கராச்சாரியார் வழக்கு மிக முக்கியமான ஒன்றாகும். இதில் கூட அவர் அரசை கலந்தாலோசிக்காமல் முடிவெடுத்து விமர்சனத்துக்கு உள்ளானது. இதன் காரணமாக கவர்னர் மாற்றப்பட்டிருக்கலாம் என புதுவை அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. ஆனால் இது தான் உண்மையான காரணமா? என்று தெரியவில்லை. இது சம்பந்தமாக கவர்னர் வாய் திறந்தால்தான் உண்மையான காரணங்கள் தெரியவரும் thinaboomi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக