வியாழன், 17 ஜூலை, 2014

Chennai mobile Toilets"நம்ம டாய்லெட்', "நடமாடும் கழிப்பறைகள்'

சென்னையில், அண்ணா மேம்பாலத்துக்கு கீழே ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன கழிப்பறை. சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ள "நம்ம டாய்லெட்', "நடமாடும் கழிப்பறைகள்' (மொபைல் யூரினல்) மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள இந்தக் கழிப்பறைகள் நகரம் முழுவதும் அதிக எண்ணிகையில் பரவலாக அமைக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் சுமார் 850-க்கும் மேற்பட்ட பொதுக் கழிப்பிடங்கள், முக்கிய சாலைகள், பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை, உள்ளூர் ரெüடிகள் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் இருந்தாலும் சென்னைவாசிகளுக்கு மட்டுமின்றி வெளியூர்வாசிகளுக்கும் இவை மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகின்றன.
ஆனால், நகரின் முக்கிய இடங்களில் பொதுக் கழிப்பிடங்கள் அமைக்க முடியாத நிலை இருப்பதால், அந்தப் பகுதிகளில் "நம்ம டாய்லெட்', நடமாடும் கழிப்பிட (மொபைல் யூரினல்) கூடாரங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நகரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்த நடமாடும் நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கழிப்பறைகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால், இந்தத் திட்டங்கள் முழு வீச்சில் செயல்படுத்தப்படாத நிலையில் உள்ளன.
இப்போது சில இடங்களில் மட்டுமே நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை போதாது, சென்னையில் அதிக இடங்களில் நடமாடும் கழிப்பறைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் திட்டமிடப்பட்டு தொடங்கப்படாமல் உள்ள "நம்ம டாய்லெட்' திட்டத்தையும் விரைவில் தொடங்கவேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொதுக் கழிப்பிடங்கள் இல்லாத இடங்களில் அமைக்கப்படும் நடமாடும் கழிப்பறைகள் முதியோர் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. ஆனால் இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு முழுப் பலனும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது ஒரு சில இடங்களில் நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருந்தாலும், அதிக இடங்களில் இவற்றை அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் ரூ. 35 கோடியில் 348 "நம்ம டாய்லெட்டுகள்' அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அந்தந்த மண்டலங்களில் டெண்டர் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெண்டர்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடிய விரைவில் டெண்டர் வெளியிடப்பட்டு, "நம்ம டாய்லெட்டுகள்' ஆங்காங்கே அமைக்கப்படும்.
அதேபோல, நடமாடும் கழிப்பறைகளை தேவையான இடங்களில் கூடுதலாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நம்ம டாய்லெட், நடமாடும் கழிப்பறைகள், பாலி எத்திலீன் இழைகளால் தயாரிக்கப்பட்ட கழிப்பறைகளும் அமைக்கப்படும். இந்த பாலி எத்திலீன் கழிப்பறைகள் சோதனை முயற்சியாக ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் வரும் நாள்களில் விரைவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக