ஞாயிறு, 29 ஜூன், 2014

72 பேர் கட்டடத்தில் இருந்துள்ளனர் ! கொண்டோ வாசிகள் பீதி ! இவற்றின் உறுதி ? சரியான கலைவை இல்லை ?

சென்னை முகலிவாக்கத்தில் கட்டடம் இடிந்த போது, 72 பேர் அந்த கட்டடத்தில் இருந்ததாகவும், அவர்களில் 31 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்
சீட்டுக்கட்டுகள் போல் சரிந்த 11 மாடிகள்... சிக்கிக் கொண்டு பரிதவிக்கும் உயிர்கள்... எத்தனை பேர் உயிருடன் மீட்கப்படுவார்கள்? எத்தனை பேர் மாண்டார்களோ...? மீட்பு பணியில் போராடி கொண்டிருக்கிறார்கள் மீட்பு குழுவினர்!
திடீரென்று பேய் மழையில் கொட்டி தீர்த்த மழை தண்ணீரோடு பிழைப்பு தேடி வந்த தொழிலாளர்களின் கண்ணீரும், செந்நீரும் கலந்தன.
குலுங்கி சரிந்த கட்டிடம் ஒட்டு மொத்த மக்களையும் உலுக்கி விட்டது!
சிங்கார சென்னையில் திரும்பும் திசையெல்லாம் வானளாவ உயர்ந்து நிற்கும் பல மாடி குடியிருப்புகள். கண்ணை பறிக்கும் உள் அலங்ககார வேலைப்பாடுகள்...
எப்படியாவது சென்னையில் ஒரு வீடு வாங்க வேண்டும். இதுவே பலரது லட்சியக் கனவாக இருக்கிறது.
‘காணி நிலம் வாங்கி அதில் ஒரு கனவு இல்லம் கட்டி சுற்றிலும் பூஞ்செடிகள், மரங்கள் வைத்து குதூகலமாய் வாழ ஆசை. ஆனால் கை நிறைய சம்பாதித்தாலும் சென்னையில் இடம் வாங்கி வீடு கட்டுவது என்பது முட வன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதைதான்.

பிளாட்டிலாவது ஒரு வீடு வாங்கி விடுவோம் என்று ஆசை, ஆசையாய் வீடு வாங்குகிறார்கள்.
வாடிக்கையாளர்களின் ஆசையை புரிந்து கொண்டு பில்டர்கள் அடுக்கு மாடி வீடுகளை வடிவமைக்கிறார்கள். வெளியே பார்ப்பதற்கு பளபளக்கும் பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகள் 15 முதல் 20 வருடங்களிலேயே கீறல் விழுந்து சிரிக்கிறது.
நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் பாலங்கள், கட்டிடங்களை குண்டு வைத்து தகர்த்தாலும் கீறல் தான் விழுகிறது. சிதறி விழுவதில்லை.
எந்த நவீன கண்டு பிடிப்பும் வராத அந்த காலத்தில் முட்டை, பதனீர், கடுக்காய் கலந்து மணல், சுண்ணாம்பை அரைத்து கட்டிய அந்த கட்டிடங்கள் காலங்களை வென்று கம்பீரமாக காட்சி அளிக்கின்றன.
மாடி கட்டிடங்களையே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்தி செல்லும் அளவுக்கு இன்று விஞ்ஞானம் வளர்ந்து விட்டது.
கட்டுமானத்தில் எவ்வளவோ புதுமைகள் வந்து விட்டன. எதையும் தாங்கும் உறுதியுடன் கட்டிடங்களை கட்டும் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன.
இடி தாக்கியதால்தான் 11 மாடியும் சரிந்து விட்டன என்று கட்டிட உரிமையாளர் கூறியிருக்கும் வாதம் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளை அதிர வைத்துள்ளது.
இவ்வளவுதான் இந்த கட்டிடங்களின் தாங்கும் திறனா?
முறைப்படி கட்டினால் தலைமுறைகளையும் தாண்டி அசையாமல் நிற்கும் என்கிறார்கள் கட்டிட நிபுணர்களும், பொதுப்பணித்துறை பொறியாளர்களும்!
உறுதியாக கட்டிடங்களை கட்ட பல வரைமுறைகள் உள்ளன. அதை எல்லோரும் கடை பிடிக்கிறார்களா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி!
எந்த இடத்தில் கட்டுமானம் செய்ய போகிறோமோ அந்த இடத்தின் மண் தன்மையை பரிசோதிக்க வேண்டும். களிமண், செம்மண், சவுடு மண் என்று மண்ணின் தன்மைக்கு ஏற்ப அஸ்திவாரம் அமைக்க வேண்டும். எனவே நிபுணத்துவம் பெற்ற பொறியாளரிடம் வடிவமைப்பு செய்ய வேண்டும்.
மண்ணின் தன்மைக்கு ஏற்ப அஸ்திவாரத்தின் ஆழம், அகலத்தை அதிகரிக்க வேண்டும். பாறை தன்மை இருக்கும் ஆழம் வரை ஆழ்துளை அஸ்திவாரம் தோண்ட வேண்டும்.
கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் தண்ணீர் உப்பு தண்ணீராக இருக்க கூடாது. எண்சாண் உடம்புக்கு சிரசே பிதானம் என்பது போல் எவ்வளவு உயர்ந்த கட்டிடத்துக்கும் அதை தாங்கி நிற்கும் தூண்களே முக்கியமானது... முது கெலும்பு போன்றது.
3 மாடிகள் வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு தூண்கள் 9 இஞ்ச், 18 இஞ்ச் என்ற அளவிலும், 3 மாடிகளுக்கு மேல் இருந்தால் 12க்கு 18 இஞ்ச் என்ற அளவை விட குறைய கூடாது. கம்பியை பொறுத்தவரை 3 மாடி வரை உள்ள கட்டிடங்களுக்கு 16 எம்.எம். கம்பியில் 8 கம்பிகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும். 3 மாடிகளுக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு 25 முதல் 32 எம். எம். கம்பிகளில் 8 முதல் 12 கம்பிகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
கடற்கரையில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்துக்குள் கட்டப்படும் கட்டிடங்களுக்கு 3 தளம் வரை கட்டினால் கான்கிரீட் கலவை 1 பங்கு சிமெண்டுக்கு ஒன்றரை பங்கு மணல் 3 பங்கு ஜல்லி என்ற விகிதாசாரத்தில் கலக்க வேண்டும்.
கடற்கரையில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் கட்டப்படும் கட்டிடங்களுக்கு கான்கிரீட் கலவை 1 பங்கு சிமெண்டுக்கு 2 பங்கு மணல் 4 பங்கு ஜல்லி என்ற விகிதாசாரத்தில் இருக்க வேண்டும்.
3 மாடிகளுக்கு மேல் பல அடுக்கு மாடி கட்டிடங்களை கட்டிடங்களை கட்டும் போது ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை எம்.30 அல்லது எம்.35 ஆக இருக்க வேண்டும் (தோராயமாக 1 பங்கு சிமெண்டு, 1 பங்கு மணல் 2 பங்கு ஜல்லி) இந்த கலவையை ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதற்காக பிரத்யேகமான இரும்பு பெட்டி உள்ளது. அதற்குள் கான்கிரீட் கலவையை வைத்து ஒரு வாரம் பரிசோதனை செய்யப்பட்டு தர சான்றிதழ் வழங்கப்படும். அவ்வாறு சான்றிதழ் பெற்ற தரமான கலவையையே பயன்படுத்த வேண்டும்.
கட்டிடங்கள் உயரத்தை பொறுத்து அந்த பகுதியில் வீசும் காற்றின் அளவும் கணக்கிடப்பட்டு கட்டிடம் வடிவமைக்கப்பட வேண்டும்.
இவற்றை முறையாக கடை பிடித்தால் இந்த கட்டிடங்கள் 100 ஆண்டில்தான் முதுமை பருவத்தை எட்டும். அதன் பிறகும் சீரமைத்தால் மீண்டும் சில ஆண்டுகள் கம்பீரமாக நிற்கும் என்கிறார்கள்.
லாப நோக்கில் அவசர கோலத்தில் கட்டி முடிக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் நிச்சமயாக மேற்கூறிய வழிமுறைகள் எதுவும் நிச்சயமாக பின்பற்றப் போவதில்லை என்பதை உணர முடிகிறது.
சென்னையில் 14, 15 மாடிகள் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. ஆனால் இதுவரை இவ்வளவு உயரமான கட்டிடங்கள் இப்படி அலங்கோலமாக சாய்ந்ததில்லை.
கட்டி முடிக்கப்படாத நிலையில் இருந்ததால் சாவு எண்ணிக்கை இரட்டை இலக்கத்தோடு நின்று விடும் என்று யூகிக்கப்படுகிறது. இந்த கட்டிடத்தில் அனைத்து வீடுகளிலும் மக்கள் குடியேறிய பிறகு இப்படி விபத்து நேரிட்டு இருந்தால்... நினைத்தாலே... இதயம் பதறுகிறதே...!!
மனித உயிர்களை விட பணம்தான் பிரதானமா...?
கட்டிடங்களை கட்டுபவர்களும்... அதை ஆய்வு செய்பவர்களும் வாழையடி வாழையாய் இந்த கட்டிடத்தில் பல உயிர்கள் வாழ்வதும், வீழ்வதும் நம் கையில் இருக்கிறது என்ற உணர்வோடு தங்கள் கடமையை செய்தால் போதும்! செய்வார்களா....? மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக