ஞாயிறு, 4 மே, 2014

மர்ம நபரின் உருவம் பெங்களூர் சி.சி.டி.வி.யிலும் பதிவு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாத நிலையில், குண்டு வைத்த தீவிரவாதிகளுக்கு எதிரான ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகிறார்கள். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் அதில் பதிவான காட்சிகளை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தனர். ரயில் நிலையத்தின் 9–ம் நம்பர் நடைமேடையில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்ற போது, குண்டுகள் வெடித்த ‘எஸ்-4 மற்றும் எஸ்-5’ பெட்டிகளுக்கு அடுத்த பெட்டியான ‘எஸ்-3’ம் எண் கொண்ட பெட்டியில் இருந்து இறங்கிய உயரமான ஒரு நபர் அவசரம் அவசரமாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் காட்சி பதிவாகி இருந்தது. கைக்குட்டையை கட்டி முகத்தை மறைத்தபடி பதற்றத்துடன் அவர் வேக வேகமாக ஓடும் காட்சியும் பதிவாகி இருந்தது.

இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் சந்தேகப்பார்வை அவர் மீது விழுந்தது. கேமராவில் சிக்கிய வாலிபரின் தலை வழுக்கையாக இருந்தது. அவரை கண்டுபிடித்து விசாரணை நடத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். ஒருவேளை, வழுக்கை தலை ஆசாமி குண்டு வைத்தவராக இருந்திருந்தால், பெங்களூரில் இருந்தே அவர் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து வந்திருக்கலாம் என்று தமிழக போலீசார் கருதினர்.
காலை 7.15 மணி அளவில் வெடிக்கும் வகையில் குண்டை தயார் செய்து வைத்து விட்டு சென்ட்ரலில் இறங்கிச் செல்ல அவர் திட்டமிட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால், அவர் எதிர்பார்த்தபடி நடக்காமல், காலை 6.20 மணிக்கு சென்னைக்கு வர வேண்டிய ரெயில், தாமதமாக 7.05–க்கு வந்ததால், குண்டு வெடிக்கப்போவதை அறிந்து கொண்டு சரியாக 7.08–க்கு (குண்டு வெடிப்பதற்கு 7 நிமிடத்துக்கு முன்பு) அவர் தப்பித்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.
இதற்கிடையே, சென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 2 பேர் பெங்களூரில் சிக்கியுள்ளனர். மத்திய உளவு பிரிவினர் மேற்கொண்ட ரகசிய விசாரணையில் இவர்கள் இருவரும் பிடிபட்டுள்ளனர். இந்த 2 பேரும் குண்டு வெடிப்பு சதிகாரர்களுக்கு உதவிகள் செய்தார்களா? அல்லது குண்டு வெடிப்பு நாசவேலையில் நேரடியாக ஈடுபட்டார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. கரன்சின்கா பெங்களூருக்கு விரைந்து, சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுடன் சேர்ந்து அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கு முன்னதாகவே, போலீஸ் சூப்பிரண்டு அன்பு தலைமையிலான இன்னொரு தனிப்படை போலீசார் பெங்களூர் புறப்பட்டு சென்று பெங்களூர் ரெயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டிருந்த நடைமேடையில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர்.
சென்னை சென்ட்ரலில் குண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவசரமாக வெளியே ஓடிய அதே வழுக்கை தலை மர்ம நபர், பெங்களூர் ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளிலும் காணப்படுகிறான். தமிழக போலீசாரின் சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் கிடைத்துள்ள இந்த ஆதாரம், சென்னை செண்ட்ரல் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் புதிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக