செவ்வாய், 6 மே, 2014

BJP : ஆ.ராசா வாக்குமூலத்தின்படி மன்மோகன் சிங்கையும் விசாரிக்க வேண்டும்

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை தன்னுடைய அறிக்கையில் கூறியது. இவ்வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தொலை தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா நேற்று நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குமூலப்பதிவு மாலை 4 மணி வரை நீடித்தது.  வாக்குமூலம் பதிவுக்குப்பின், ‘‘ஊடகங்கள், அரசு ஊழியர்கள், நீதிமன்றம் ஆகிய அனைத்தும் தனக்கு எதிராக செயல்பட்டதாக ஆ.ராசா கூறினார். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த நீதிபதி, எந்த சூழ்நிலையிலும் நீதிமன்றத்தை ஒருவர் குறைகூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். பின்னர், ‘‘அரசுக்கு நான் எந்த விதமான இழப்பையும் ஏற்படுத்தவில்லை. மத்திய மந்திரிசபை குழு, பிரதமர் ஆகியோரின் ஒப்புதல்கள் பெற்றே 2ஜி உரிமங்கள் வழங்குவது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன’’ என்றும் ஆ.ராசா கூறினார்.
மத்திய மந்திரிசபை குழு, பிரதமர் ஆகியோரின் ஒப்புதல்கள் பெற்றே 2ஜி உரிமங்கள் வழங்குவது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன என்று ராஜா கூறியதை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் ’’கோர்ட்டில் விசாரணை நடந்து வரும் 2ஜி விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் விசாரணை நடத்தப்படவேண்டும். பிரதமரிடம் விசாரணை நடத்தப்படாமல் விசாரணை நிறைவு பெறாது. தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் ஊழலில் தொடர்பு உள்ளது தெளிவாகியுள்ளது.
முன்னாள் தொலை தொடர்பு மந்திரி ஆ.ராசா  சி.பி.ஐ. கோர்ட்டில் வெளியிட்ட வாக்குமூலம் மிகவும் முக்கியமானது.  ஆயிரக்கணக்கான கேள்விக்கு பதில் அளிக்கையில்  பிரதமர் ஆகியோரின் ஒப்புதல்கள் பெற்றே 2ஜி உரிமங்கள் வழங்குவது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன என்று திட்டவட்டமாக ஆ.ராசா தெளிவு படுத்தியுள்ளார். இவ்விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தனது பதிலை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார். nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக