செவ்வாய், 6 மே, 2014

கலைஞரை யார் திட்டினாலும் ஊடகங்களின் சலுகை உடனடியாகக் கிடைக்கும்.

தி.மு.க. உடைய வேண்டும், அழிய வேண்டும் என்று ஏன் இத்தனை
பேர் ஆசைப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. தி.மு.க.விற்கு எப்போதெல்லாம் பிரச்சினை வருகிறதோ அப்போதெல்லாம் அந்தக் கட்சி இத்தோடு அழிந்துவிடும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுப்பார்கள். தி.மு.க. எப்போதெல்லாம் பிரச்சினைகளைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் அதை அழிப்பதற்கான சக்திகளை ஒருங்கிணைப்பார்கள்.பிரச்சினைகளே இல்லாதபோது, கலைஞருக்கு வயதாகி விட்டது, அவர் பொறுப்புகளை உதறிவிட்டு ஓய்வெடுக்கலாமே? என்று அக்கறையைப் பொழிவார்கள். “வயோதிகத்தின் காரணமாக கலைஞரின் எந்த அரசியல் செயல்பாடு தடைபட்டது?” என்று கேட்டால் அவர்களிடம் பதில் இருக்காது. அதே நேரம் ஜெயலலிதா ஆண்டின் பெரும்பகுதி கொடநாட்டில் ஓய்வெடுத்தால்கூட ‘ஏன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நிம்மதியாக ஓய்வெடுக்கலாமே’ என்று நமது மதிப்பிற்குரிய விமர்சகர்கள் யாரும் இதுவரை எழுதியதாக சரித்திரம் இல்லை. கலைஞர் ஓய்வெடுக்க வேண்டும் என்பதன் அர்த்தம்; அவர் அரசியலில் இருந்து இல்லாமல் போனால் தி.மு.க. இல்லாமல் போய்விடும் என்கிற அற்பக் கனவைத் தவிர அந்தக் கோரிக்கையில் எந்த நியாயமும் இருந்ததில்லை. மாடுகள் முட்டி கோபுரங்கள் சாய்வதில்லை !
< கடந்த இரண்டு வாரங்களாக தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்கள்தான் எல்லா ஊடகங்களிலும் தலைப்புச் செய்தி. தமிழக அரசியல் என்பது எப்போதும் தி.மு.க.வையும் கலைஞரையும் சுற்றித்தான் நடக்கவேண்டும் என்பது நீண்டகாலமாக எழுதப்படாத விதி. அந்த விதியை முறியடிக்கும் சக்தி எதுவும் இன்னும் பிறந்து வரவில்லை. கலைஞரை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்ற இரண்டு நிலைகளுக்கு அப்பால் இதுவரை தமிழகக் கட்சிகளுக்கு மூன்றாவது அரசியல் என்ற ஒன்று இருந்ததுமில்லை.

சிறிது காலத்திற்கு முன்பு பரிதி இளம்வழுதி தி.மு.க.வை விட்டு விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்து கலைஞரைப் பற்றியும் தி.மு.க.வைப் பற்றியும் ஆபாசப் பேச்சுகளை வரன்முறை யின்றி பேசினார். அவரை சில நாட்களுக்கு தமிழகத்தின் பல பத்திரிகைகள் உற்சாகத் துடன் எப்படி ஆதரித்தன என்பதைக் கண்டோம். கலைஞரை இப்படி யார் திட்டினாலும் அவர்களுக்கு ஊடகங்களின் சலுகை உடனடியாகக் கிடைக்கும். அது சீமானாக இருக்கலாம், வைகோவாக இருக் கலாம், ராமதாசாக இருக்கலாம், இவ்வளவு ஏன், நேற்று முளைத்த தமிழருவி மணியனாகக் கூட இருக்கலாம். தி.மு.க.வை அழிக்கும் வேலைகளை யார் செய்தாலும் ஊடகங்கள் நிழலை உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம். கலைஞரை வசைபாடி பத்தி எழுதத் தயாராக இருந்தால் தமிழகத்தின் எந்த முன்னணிப் பத்திரிகையிலும் எந்த அரசியல் விமர்சகருக் கும் உடனே இடம்கிடைக்கும். கலைஞர் மீது வன்மத்துடன் தாக்குதலில் ஈடுபடும் பத்திரிகை ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு,பஞ்சப்படி உயர்வு எல்லாம் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.
சும்மா இருக்கும்போதே வாயை மெல்லும் ஊடகங்கள், ஒரு பிரியாணி பொட்டலம் கிடைத்தால் சும்மா விடுவார்களா? ஸ்டாலின்அழகிரி விவகாரத்தில் அழகிரியைத் தூண்டிவிடும் வேலையை ஊடகங்கள் படுஉற்சாகமாகச் செய்து வருகின்றன. அவர் அமைச்சராக இருந்தபோது அவருக்குத் தரப்படாத முக்கியத்துவம் இப்போது எல்லா ஊடகங்களிலும் தரப்படுகிறது.
ஸ்டாலினுக்கு எதிரான அவரது பேட்டிகள், கலைஞரின் நடவடிக்கைக்கு எதிராக அவரது உணர்ச்சிக்குமுறல்கள் உடனுக்குடன் விரி வாகப் பதிவு செய்யப்படுகின்றன. முன்னெப் போதும் இருந்திராத வகையில் அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உள்ளூர் ஊடகங்களால் மட்டுமல்ல, தேசிய ஊடகங்களாலும் கவனப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதற் கெல்லாம் பின்னே இருப்பது ஒன்றே ஒன்றுதான். அழகிரியாவது தி.மு.க.விற்கு கொஞ்சம் சேதாரத்தை உண்டு பண்ணமாட்டாரா என்ற நப்பாசைதான் அது. எந்த அளவிற்கு நமது ஊடகங்கள் வெறுப்பைக் கக்குகின்றன என்றால், இத்தோடு தி.மு.க. அஸ்தமித்துவிடும் என்கிற அளவிற்கு அவை எழுதுகின்றன.
உள்கட்சிப் பிரச்சினை ஒன்றால் ஒரு அரசியல் கட்சி அழிந்துபோக வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்சிகள் அழிந்து போயிருக்க வேண்டும்.
இந்திரா காந்தியின் மரணத்தின்போது காங்கிரஸ் அழிந்து போய்விடும் என்றார்கள். அப்போது காங்கிரசில் இந்திராகாந்தியைத் தவிர்த்து மக்கள் செல் வாக்குள்ள தலைவர்கள் யாரும் இல்லை. ஆனால் இன்றளவும் காங்கிரஸ் அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர். இறந்தபோது எம்.ஜி.ஆரைத் தவிர அந்தக் கட்சியில் ஆளுமை என்று யாரும் இல்லை. ஜானகியும் ஜெயலலிதாவும் அதி காரத்திற்காக நேரடியாக மோதிக் கொண்டார்கள். அ.தி.மு.க. என்ற கட்சியே இரண்டாகப் பிளந்தது. ஆனால் அந்தக் கட்சியின் அடித்தளம் வலுவாக இருந்தது. மேல் மட்டத்தில் நடந்த சண்டைகள் எதுவும் அந்தக் கட்சியின் அடித்தளத்தைப் பாதிக்கவில்லை. அது மீண்டும் வந்து மிருக பலத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
அ.தி.மு.க.வோடு ஒப்பிட்டால் தி.மு.க. வலுவான உள்கட்சி அமைப்பைக் கொண்ட இயக்கம். உட்கட்சித் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டு பல்வேறு நிலைகளில் கட்சிப் பொறுப்புகளுக்கு தலைமைகள் தேர்ந்தெடுக்கப் பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய ஒரு நடைமுறை எத்தனை பிரதானக் கட்சிகளிடம் இருக்கிறது? அடுத்தக்கட்டத் தலைவர்கள் என்று பலரையும் கொண்ட கட்சி தி.மு.க.தான். இன்றைக்கு தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சியின் தலைவருக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவர்கள் யார் என்று இருக் கிறார்கள்? கட்சியின் அதிகாரபூர்வ நடைமுறைகளைத் தாண்டி ஸ்டாலின்கூட உயர் பொறுப்புகள் எதற்கும் நீண்ட காலம் வர முடியவில்லை என்பதுதான் உண்மை.
தி.மு.க. மிகக் கடுமையான சோதனைக் காலங்களை கடந்து வந்திருக்கிறது. கலைஞர் முதலமைச்சராக இருந்த பிறகு 13 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். தி.மு.க. ஒரேயொரு சட்டமன்ற உறுப்பினருடன் 5 ஆண்டுகள் சட்டசபையில் போராடிய காலம் இருந்திருக்கிறது.
எமெர்ஜென்சியை எதிர்த்ததற்காக ஆட்சி கலைக்கப்பட்டு கொடுங்கோன்மைகளை அந்த இயக்கம் சந்தித்திருக்கிறது. விடுதலைப்புலி களைக் காரணம் காட்டி எந்த நியாயமும் இல்லாத வகையில் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனநாயகம் படுகொலைக்கு ஆளான இயக்கமும் தி.மு.க.தான். அப்போதெல்லாம் தி.மு.க. அழியவும் இல்லை. நொறுங்கவும் இல்லை. அதற்குக் காரணம், கலைஞர் என்ற தனிநபர் மட்டுமல்ல, அவரால் படிப்படியாக உருவாக்கப்பட்ட உருக்குப் போன்ற கட்சி அமைப்புதான் முக்கியக் காரணம். இன்று அழகிரி சச்சரவிடுவதால் தி.மு.க. அஸ்தமித்துவிடும் என்று நம்புகிறவர்கள், இந்த வரலாறு எதுவும் தெரியாதவர்கள் அல்லது ஒரு கட்சி என்பது அதன் ஒற்றைத் தலைவரின் பலத்தினால் மட்டுமே நின்று கொண்டிருக்கிறது என்று நம்புகிறவர்கள்.
தே.மு.தி.க.வினால் இரண்டாண்டுகள்கூட எதிர்க்கட்சி என்ற நிலையை முழுமையாகக் காப்பாற்ற முடியவில்லை. கட்சி எம்.எல்.ஏ.க்களில் நான்கில் ஒருபகுதியினர் ஜெயலலிதா ஆதரவாளர்களாக மாறி துரோகம் செய்தபோது தே.மு.தி.க. இத்தோடு அழிந்துவிடும் என்று யாரும் எழுதவில்லை. வாரிசு அரசியல் பற்றியும், 2ஜி பற்றியும் கலைஞரிடம் முகத்திற்கு நேராகக் கேள்வி கேட்கும் நமது மானமிகு பத்திரிகை யாளர்கள், ஜெயலலிதாவை ஒரே ஒருமுறை சந்தித்து, சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிப் பது பற்றியும், சசிகலா என்ன காரணத்திற்காக நீக்கப்பட்டு, பிறகு சேர்க்கப்பட்டார் என்பது பற்றியும், சுதாகரனுக்கு பல கோடி செலவில் திருமணம் செய்து வைத்துவிட்டு, பிறகு போதைப் பொருள் வைத்திருந்ததாக ஏன் சிறைக்கு அனுப்பப்பட்டார் என்பது பற்றியும், அமைச்சர்கள் மாதத் திற்கு ஒருமுறை மாற்றப் படுவதன் காரணம் குறித்தும், அவர்களில் சிலர் மறுபடி சேர்க்கப்படுவதன் மர்மம் குறித்தும், சசிகலாவின் கணவர் நடராஜன் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டதன் ரகசியம் குறித்தும் கேள்விகள் எழுப்பலாமே?
தி.மு.க.வின் உட்கட்சி ஜனநாயகம் பற்றி இவ்வளவு கவலைப்படுகிறவர்கள்; அமைச்சர் களோ, அரசு அதிகாரிகளோ சுயமாக முடிவெடுக்க அஞ்சி ஒட்டுமொத்த நிர்வாகமும் ஒரு தனிநபரின் காலடியில் வைக்கப்பட்டு அரசு எந்திரத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டிருக்கின்றனவே, இதைப்பற்றி ஏன் வாயைத் திறக்க மறுக்கிறீர்கள்? காரணம், பயம். கலைஞரிடம் அவருக்கு எதிரான எதையும் பேசிவிட்டு பயம் இன்றி இருக்கலாம். ஜெயலலிதாவிடம் அப்படி நடக்குமா?
இலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலை யையே கலைஞர்தான் நடத்தியதுபோல அவதூறு செய்தார்கள். அந்த அவதூறின் வெற்றிக் கனியை ஜெயலலிதாவின் காலடியில் சமர்ப் பித்தார்கள்.
இவ்வளவு பெரிய இயக்கத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, தமிழக அளவில் பெரிய போராட்டங்களை நடத்தி மத்திய அரசுக்கு அப்போது நெருக்கடி கொடுத்து இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தியிருக் கலாமே என ஏன் யாரும் கேட்கவில்லை? அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகப்போகிற இந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிடிந அகதிகளின் உரிமையைக்கூட பாதுகாக்க ஏன் முன்வர வில்லை?” என ஏன் யாரும் கேட்கவில்லை?
முள்ளிவாய்க்கால் முற்றச் சுவரை இடித்துத் தள்ளியது கலைஞராக இருந்திருந்தால் இந்நேரம் என்ன நடந்திருக்கும்? வைகோவிற்கும், நெடுமாறனுக்கும், சீமானுக்கும் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக கலைஞர் மீதான விஷ அம்புகளுக்கு கூர் தீட்டுவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது. ஜெயலலிதா ஆட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நடந்த கண்டனத்திற்குரிய எண்ணற்ற செயல்கள் குறித்து இவர்கள் பெரும்பாலும் மவுனமாக இருந்தார்கள் அல்லது பூனையைப் போல யாருக்கும் கேட்காத வண்ணம் ஓசை எழுப்பினார்கள்.
ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரும் போராட்டம், எவ்வாறு தி.மு.க.வை மத்தியில் ஆட்சியிலிருந்து விலகச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது என்பதைக் கண்டோம். காமன்வெல்த் மாநாடு குறித்த பிரச்சினை வந்தபோது எந்தப் பெரிய அழுத்தமும் தமிழகத்திலிருந்து ஏன் உருவாகவில்லை? இந்தியா அந்த மாநாட்டில் பங்கேற்றது.
தேசிய அளவிலும் தி.மு.க.விற்கு எதிரான சக்திகள் தீவிரமாக வேலை செய்தன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அடுக்காக ஊழல்கள் வெடித்தபோதும் 2 ஜி அளவுக்கு எதுவும் கடுமையாக அணுகப்படவில்லை. நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமர் மீதே நேரடியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அது எல்லாமே பிசுபிசுத்துப் போகச் செய்யப்பட்டன. ஆனால் ஆ.ராசாவும், கனிமொழியும் விசாரணை அளவிலேயே சிறைக்கு அனுப்பப் பட்டனர். தி.மு.க. மத்தியில் ஆட்சியிலிருந்தும் பெரிதும் அவமானப்படுத் தப்பட்டது.
2 ஜி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு தன்னை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்ற ஆ.ராசாவின் கோரிக்கை ஏன் ஏற்கப்படவில்லை? இந்த வழக்கிற்குப் பின்னே இருக்கும் சதி அம்பலமாகிவிடும் என்பதால்தான். காங்கிரஸ் மட்டுமல்ல, வேறு எந்த வடமாநில தேசியக் கட்சிகளாலும், தி.மு.க. தொடர்ந்து மத்தியில் அதிகாரத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பொறுப்பு வகிப்பதைச் சகிக்க முடிவதில்லை. இதில் தென்னகத்தின் மீதான – குறிப்பாக தமிழகத்தின் மீதான வெறுப்பு அரசியல் ஒளிந்திருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை உயர்சாதி அரசியல் சக்திகளுக்கு, பிற்படுத்தப்பட்டோர் நலன்களை முன்னிறுத்தும் தி.மு.க.வின் மீதான வெறுப்பு ஆழமாக உறைந்து போயிருக்கிறது. அது பெரியாரின் மீதான வெறுப்பு. பகுத்தறிவுக் கொள்கைகள் மீதான வெறுப்பு. சமூகநீதிக் கருத்துகள் மீதான வெறுப்பு. எனவே, அவை தி.மு.க.வின் அழிவை எப்போதும் விரும்பி வந்திருக்கின்றன. திராவிட இயக்கக் கருத்தியல்கள் இன்னும் ஏதோ ஒரு வடிவில் மிஞ்சியிருக்கும் இயக்கமாக தி.மு.க. இருப்பதால் அது அவர்களின் கண்களை உறுத்துகிறது. ஒருபுறம் உயர்சாதி அரசியல் கொண்ட ஊடகங்கள், அறிவுஜீவிகள். இன்னொரு புறம் திராவிட இயக்க அரசியலை அழிப்பதற்காக தமிடிந தேசிய அரசியலை முன்னெடுக்கும் சக்திகள். இவர்களின் கூட்டுச் செயல்பாடுதான் தி.மு.க.விற்கு எதிரான இந்தத் தொடர் தாக்குதல்கள்.
இன்னொரு முக்கியமான காரணம்; தி.மு.க. இருக்கும்வரை தங்களால் தலையெடுக்க முடியாது என்று தமிழகத்தில் புதிதாக முளைத்த, முளைக்க விரும்புகிற அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. தி.மு.க.வின் அழிவில் கிடைக்கும் வெற்றிடத்தை தாங்கள் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று அவை கருதுகின்றன.
தி.மு.க. ஒவ்வொரு நெருக்கடியிலும் தன்னை வலிமையுடன் புதுப்பித்துக் கொண்டு எழுந்து வந்திருக்கிறது. ஆனால் இப்போது ஏற்பட்டிருப்பது நெருக்கடிகூட அல்ல. ஒரு சின்னக் குழப்பம். அதை அது எளிதில் கடந்து வந்துவிடும். அதுவரை தி.மு.க.வின் அழிவு குறித்த வெற்றுப் பிலாக்கணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கட்டும்.

மனுஷ்ய புத்திரன்
- நன்றி : ‘நக்கீரன்’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக