புதன், 7 மே, 2014

ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் அனுமதி தேவையில்லை: சி.பி.ஐ.,க்கு ' பூஸ்ட் '

புதுடில்லி:'ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும், உயர் அதிகாரிகளை விசாரிக்க, மத்திய அரசிடம், சி.பி.ஐ., முன் அனுமதி பெற தேவையில்லை. ஊழல் செய்த அதிகாரிகளை விசாரிப்பதில், உயர் அதிகாரி, கீழ்நிலை அதிகாரி என, பாகுபாடு காட்ட வேண்டிய அவசியமில்லை' என்ற, முக்கியமான தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட், பிறப்பித்துள்ளது.
'ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் உயர் அதிகாரிகளை விசாரிப்பதற்கு, அரசின் அனுமதி தேவை என்ற நடைமுறை, வேடிக்கையாக உள்ளது. எனவே, இந்த நடைமுறையை ரத்த செய்ய வேண்டும்' எனக் கோரி, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி மற்றும் பொதுநல அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
ஐந்து நீதிபதிகள் இந்த மனுக்கள், தலைமை நீதிபதி லோடா, நீதிபதிகள் பட்நாயக், தீபக் மிஸ்ரா, முகோபாத்யாயா, கலிபுல்லா ஆகிய, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசமைப்பு 'பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:'ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும், இணைச் செயலர் அந்தஸ்திலான மூத்த அதிகாரிகளை விசாரிப்பதற்கு, மத்திய அரசிடம், முன் அனுமதி பெற வேண்டும்' என, டில்லி விசேஷ போலீஸ் சட்டத்தின் பிரிவு, '6ஏ' வில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டம், ஊழல் செய்யும் மூத்த அதிகாரிகளை விசாரணையில் இருந்து பாதுகாக்கும் கேடயமாக விளங்குகிறது.இது, சட்ட விரோதமானது. அரசமைப்பு சட்டத்தின், 14 வது பிரிவை மீறும் வகையில் உள்ளது. ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் அனைவரையும், ஊழல் செய்பவர்களாகவே கருத வேண்டும். இவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துவதில், உயர் அதிகாரி, கீழ்நிலையில் உள்ள அதிகாரி என, பிரித்து, பாரபட்சம் காட்டக்கூடாது. அனைத்து ஊழியர்களையும், சரிசமமாகவே கருத வேண்டும்.

ஊழல் அதிகாரிகள்
ஊழல், நம் நாட்டின் எதிரி. இதில், ஈடுபடும் அனைவரையும், எந்த பாரபட்சமும் காட்டாமல் தண்டிக்க வேண்டும்.ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக விசார ணை நடத்த, சி.பி.ஐ.,க்கு அனுமதி அளிக்கவில்லை என்றால், பின் எப்படி, அவர்கள் மீதான விசாரணையை தொடர முடியும்? எனவே, இணைச் செயலர் மற்றும் அதற்கு மேலான அந்தஸ்து உள்ள அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விஸ்வநாதன் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளை, விசாரணையில் இருந்து பாதுகாக்க வேண்டும் என, அரசு விரும்பவில்லை. மூத்த அதிகாரிகள், அரசின் கொள்கை முடிவை
உருவாக்குவதில் தொடர்புடையவர்கள். அவர்களுக்கு, உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான், அவர்கள் மீதான விசாரணைக்கு, அரசிடம் அனுமதி பெற வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'மிகப்பெரிய பொறுப்பு':
சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்கா கூறியதாவது:சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு, வரலாற்று சிறப்புமிக்கது; இதை வரவேற்கிறோம். அப்பாவி அதிகாரிகளை விசாரணை என்ற பெயரில், எந்தவிதமான துன்புறுத்தலுக்கும் ஆளாகாமல் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு, எங்களுக்கு வந்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், அதிகாரிகள் மீதான ஊழல் வழக்கு விசாரணைகள் விரைவாகவும், எளிதாகவும் நடப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக