சனி, 26 ஏப்ரல், 2014

வீதியில் வைத்து டாக்-ஷோ ! பாகிஸ்தானின் டி.வி. சேனலை பாக். ராணுவம் முடக்க நினைப்பதன் பின்னணி!

பாகிஸ்தானின் பிரபல டி.வி. சேனலை, பாக். ராணுவம் முடக்க
நினைப்பதன் பின்னணி! " பாகிஸ்தானின் பிரபல டி.வி. சேனலை தடை செய்து, லைசென்சை பறித்து, இழுத்து மூடும்படி கோரிக்கை விடுத்துள்ளது, பாகிஸ்தான் ராணுவம். ஒரு நாட்டின் ராணுவம், அந்த நாட்டின் தனியார் டி.வி. சேனலை தடைசெய்யுமாறு அதிகாரபூர்வமாக கேட்டிருப்பது, உலக அளவில் மிக ஆச்சரியமான ஒரு விஷயம்.
பாகிஸ்தான் டி.வி. சேனல்களில் மிகப் பிரபலமாகவுள்ள ‘ஜியோ நியூஸ்’ செய்தியாளர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்ட பின்னணியில், பாகிஸ்தானின் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. உள்ளது என, அந்த சேனல் தொடர்ந்து கூறிவரும் நிலையிலேயே, அந்த டி.வி. சேனலையே தடை செய்ய கோருகிறது, பாகிஸ்தான் ராணுவம்.
பாகிஸ்தானில் தகவல் தொடர்பு அமைச்சகத்தில், டி.வி. ஒளிபரப்பை கட்டுப்படுத்தும் ரெகுலேட்டரி பிரிவிடம், தமது கோரிக்கையை எழுத்து மூலமாக கொடுத்துள்ளது ராணுவ தலைமை.
ரகசிய விவகாரங்களை கவனிக்கும் அமைப்பான உளவுத்துறை இந்த விஷயத்தில் வெளிப்படையான கோரிக்கை வைக்க முடியாது என்பதால், ராணுவத்தின் மூலம், டி.வி. சேனலை தடை செய்யும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் மிகப் பலமான அமைப்பான ராணுவமும், மிகப் பிரபல மீடியா ஜியோ நியூஸூம் மோதிக்கொள்ளும் இந்த விவகாரம், கடந்த சனிக்கிழமை நடந்த ஒரு சம்பவத்துடன் தொடங்கியது.
‘ஜியோ நியூஸ்’ சேனலின் ஸ்டார் செய்தியாளர் ஹமீட் மிர், கராச்சியின் சந்தடி மிக்க வீதி ஒன்றில் தமது வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, துப்பாக்கியேந்திய மர்ம நபரால் சராமாரியாக சுடப்பட்டார்.
உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவருக்கு அவசரகால சிகிச்சைப் பிரிவில் சர்ஜரி நடந்து கொண்டிருந்தபோதே, ‘ஜியோ நியூஸ்’ சேனலில் இந்த தாக்குதல் தொடர்பான செய்திகளை இடைவிடாது ஒளிபரப்ப தொடங்கினர்.
அப்போதே, இந்த தாக்குதலின் பின்னணியில், பாகிஸ்தானின் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. உள்ளது என வெளிப்படையாகவே அந்த ஒளிபரப்பில் கூறப்பட்டது.
சுடப்பட்ட ஹமீட் மிர், பாகிஸ்தானில் அரசியல், மற்றும் ராணுவ விவகாரங்களை கவர் செய்யும் மிகப் பிரபல செய்தியாளர். நாம் குறிப்பிட்ட டி.வி. சேனல் ஜியோ நியூஸில், Capital Talk என்ற பெயரில் பிரபல அரசியல் டாக்-ஷோவை நடத்தி வருகிறார்.
இந்த செய்தியாளருக்கு சுவாரசியமான பின்னணி உண்டு.
கடந்த ஜூலை 2006-ம் ஆண்டு இவர், லெபனானின் பெய்ரூட் நகரில் வைத்து ஹிஸ்பொல்லா இயக்கத்தால் கடத்தப்பட்டார். அதன்பின் இவர் இஸ்ரேலிய உளவாளி அல்ல என தெரிந்துகொண்ட ஹிஸ்பொல்லா, இவரை விடுவித்தது.
தீவிரவாதம் தொடர்பான சர்வதேச கருத்தரங்குகளில் அடிக்கடி கலந்துகொள்ளும் இவரது பாதுகாப்புத்துறை புலனாய்வுகள் பி.பி.சி., சி.என்.என். உட்பட பல சர்வதேச மீடியாக்களில் இடம்பெறுவதுண்டு. ஒசாமா பின்லேடனை நேரில் பேட்டி கண்ட மிகச்சில செய்தியாளர்களில், இவரும் ஒருவர் (மேலே போட்டோ பார்க்கவும்)
இவரது கூற்றுகள் பல, சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களும் உண்டு.
உதாரணமாக, “அல்-காய்தாவினர் ரஷ்யாவிடம் இருந்து சிறிய ரக அணு ஆயுதங்களை பெற்று, அவற்றை ஐரோப்பாவுக்குள் வெற்றிகரமாக கடத்திச் சென்றுள்ளனர்” என இவர் கூறியது, பலத்த பரபரப்பை ஏற்படுத்தியதுடன், ரஷ்யா அதை கடுமையாக மறுத்திருந்தது.
2006-ம் ஆண்டு, தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பாஜோர் பகுதியில், உளவு விமான ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது, அங்கு உயிரை பணயம் வைத்து சென்ற இவர், அங்கு உளவு விமான தாக்குதல்களி கொல்லப்பட்டவர்கள் பலர் தீவிரவாதிகள் அல்ல, பெண்களும் குழந்தைகளுமே என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தினார்.
2007-ம் ஆண்டு, பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரஃப், “செய்தியாளர் ஹமீட் மிர் தலிபான் அனுதாபி” என குற்றம்சாட்டி, ஜியோ டி.வி. சேனலில் நடந்த இவரது டாக்-ஷோவை தடை செய்தார்.
உடனே வீதிக்கு வந்த ஹமீட் மிர், வீதியில் வைத்து டாக்-ஷோ நடத்த தொடங்கினார். அதைப் பார்க்க ஏராளமான கூட்டம் கூடியது. இந்த வீதி டாக்-ஷோ மிகப் பிரபலமாக தொடங்கவே, நான்கே நான்கு மாதத்தில், ஜியோ டி.வி. சேனலில் இவரது டாக்-ஷோவுக்கான தடையை நீக்கினார், ஜனாதிபதி முஷாரஃப்.
இந்தப் பின்னணியுள்ள செய்தியாளர் ஹமீட் மிர்தான் தற்போது சுடப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இவரது டாக்-ஷோவை நடத்தும் ஜியோ டி.வி. சேனலையே தடை செய்ய வேண்டும் என கோருகிறது பாகிஸ்தான் ராணுவம்!
/viruvirupu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக