சனி, 26 ஏப்ரல், 2014

8 தொகுதிகளில் தே.மு.தி.க.,வினர் அதீத நம்பிக்கை ! விஜயகாந்த் போட்ட கணக்கு தப்பாது ?

தே.மு.தி.க., போட்டியிட்ட சில தொகுதிகளில், ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளதால், விஜயகாந்தின் வெற்றிக்கணக்கு தப்பாது' என, அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இடம்பெற்ற, தே.மு.தி.க., 14 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், ஐந்து தொகுதிகளில், தே.மு.தி.க., வெற்றி பெறும் என, அக்கட்சி தலைமை கணித்தது. ஆனால், தொகுதிகளில் இருந்து வந்த தகவல்களும், ஊடகங்களில் வெளியான செய்திகளும், தே.மு.தி.க.,வுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தன. இந்நிலையில், தே.மு.தி.க., போட்டியிட்ட சில தொகுதிகளில், அதிக அளவில் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. மோடி அலையே இதற்கு காரணம் என்றும், புதிய வாக்காளர்கள், பா.ஜ., கூட்டணிக்கு, அதிக அளவில் ஓட்டளித்ததே காரணம் என, கூறப்படுகிறது. 10 தொகுதிக்கு டெபாசிட்டே கிடைக்காது...






மக்கள் கோபம்
: அதே நேரத்தில், புதிய வாக்காளர்களாகிய கல்லூரி மாணவர்களில், பெரும்பாலானவர்கள், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாகவே ஓட்டளித்துள்ளதாக, ஆளுங்கட்சி தரப்பில் தகவல் பரப்பப்படுகிறது. அரசு வழங்கிய இலவச சைக்கிள், 'லேப் - -டாப்,' இலவச பஸ் பாஸ் பெற்ற மாணவர்கள், அ.தி.மு.க.,விற்கு தான் ஓட்டளித்து இருக்க வேண்டும் என்றும், அதற்கு காரணம் கூறப்படுகிறது. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, குடிநீர் பஞ்சம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் ஏற்பட்ட கோபத்தில், ஆளுங்கட்சிக்கு எதிராக ஓட்டளிக்கும் மன நிலையில் மக்கள் இருந்தனர். அப்படி அவர்கள் ஓட்டளித்திருக்கும் பட்சத்தில், அந்த ஓட்டுகள் அனைத்தும் எங்களுக்கே வந்திருக்கும் என சொல்லி தி.மு.க., தரப்பும் சந்தோஷமாக இருக்கிறது. இப்படி, ஓட்டுப்பதிவு அதிகரிப்புக்கு, பல்வேறு தரப்பிலும் பல காரணங்கள் கூறப்பட்டாலும், தே.மு.தி.க., வட்டாரம் மகிழ்ச்சியாகவே உள்ளது. விஜயகாந்த் போட்ட வெற்றிக் கணக்கு தப்பாது என்றும், அவர்கள் அதீத நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.






இடம் கொடுக்கவில்லை:
இதுதொடர்பாக, தே.மு.தி.க., நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த, 2005ல் துவங்கப்பட்ட, தே.மு.தி.க., 2006ல், சட்டசபை தேர்தலை எதிர்க்கொண்டது. அப்போதே, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., முயற்சி செய்தது. ஆனால், கட்சியின் ஓட்டு சதவீதத்தை அறியவே, தே.மு.தி.க., தனித்துப் போட்டியிடும் முடிவை, கட்சித் தலைவர், விஜயகாந்த் எடுத்தார். அதன்பின், 2009 லோக்சபா தேர்தலின் போதும், தே.மு.தி.க., உடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., மீண்டும் முயற்சித்தது. அதற்கும், விஜயகாந்த் இடம்கொடுக்கவில்லை. மூன்று ஆண்டுகளில், கட்சியின் வளர்ச்சி மற்றும் ஓட்டு சதவீதத்தை அறிய, மீண்டும் தனித்து களமிறங்கியது.






ஒரு இடம் கூட கிடைக்காது:
இதன்பின், 2011 சட்டசபை தேர்தலில், முதல் முறையாக, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, சட்டசபை தேர்தலை தே.மு.தி.க., சந்தித்தது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தெரிவித்த கருத்தால், கூட்டணிக்கு விஜயகாந்த், ஒப்புதல் வழங்கினார். சட்டசபை தேர்தலில், 41 இடங்களில், தே.மு.தி.க., போட்டியிட்டது. தேர்தல் முடிந்ததும், தே.மு.தி.க.,வுக்கு, 15 தொகுதிகள் முதல் 20 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என, தெரிவிக்கப்பட்டது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும், இதை நம்பினர். ஆனால், 25 முதல் 30 தொகுதிகள், தே.மு.தி.க.,வுக்கு கிடைக்கும் என, விஜயகாந்த் ஆணித்தரமாக கூறினார். அவர் கூறியது போலவே, 29 தொகுதிகளில், தே.மு.தி.க., வெற்றி பெற்றது. தற்போதைய லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - -தி.மு.க., - -காங்., கட்சிகளுக்கு மாற்றாக, பா.ஜ., கூட்டணியில், 14 தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிட்டது. இதில், ஒரு இடம் கூட, தே.மு.தி.க.,வுக்கு கிடைக்காது என, எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால், ஐந்து தொகுதிகளுக்கு அதிகமாக, தே.மு.தி.க., வெற்றி பெறும் என, விஜயகாந்த் எதிர்பார்க்கிறார். தன்னை சந்திக்கும் கட்சி நிர்வாகிகளிடமும், இதையே அவர் கூறி வருகிறார். முதலில் அவரது பட்டியலில், திருப்பூர், சேலம், திருவள்ளூர் (தனி), விழுப்புரம் (தனி), கடலூர் என, ஐந்து தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. தற்போது, கரூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல் தொகுதிகளும் கூடுதலாக சேர்ந்துள்ளன. எனவே, எட்டு தொகுதிகளில், தே.மு.தி.க., வெற்றி பெறும் என, விஜயகாந்த் கணக்கு போடுகிறார். 2006 சட்டசபை தேர்தல் முதல், 2011 சட்டசபை தேர்தல் வரை, அவர் போட்ட கணக்கு தப்பவில்லை. அதேபோல, இந்த தேர்தலிலும் விஜயகாந்த் போட்ட கணக்கு தப்பாது என, நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக