புதன், 9 ஏப்ரல், 2014

அதிமுகவினர் பயங்கர கோஷ்டி மோதல் : நிர்வாகிகள் மண்டை உடைப்பு !

சங்கரன்கோவில்: தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்று காலை பிரசாரம் செய்த போது கட்சியின் இரு கோஷ்டிகளிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கம்புகளாலும், கற்களாலும் தாக்கிக் கொண்டனர். கார்கள் உடைக்கப்பட்டன. இதனால், வேட்பாளரின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. தென்காசி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வசந்தி முருகேசன் இன்று சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் பிரசாரம் துவங்குவதாக இருந்தது. தேவர்குளம் பகுதியில் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் பால்ராஜ், கிளைச் செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் எம்எல்ஏ முத்துச்செல்வி, ஒன்றிய பேரவை செயலாளர் செல்வராஜ், மாயாம்பாறை கந்தசாமி, ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் மதுரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தேவர்குளம் காவல்நிலையம் அருகே பேண்டு வாத்தியம் முழங்க வேட்பாளரை வரவேற்க காத்திருந்தனர்.
அப்போது, பிரசார ஜீப் நிறுத்தப்பட்ட இடத்தில் யூனியன் சேர்மன் முருகையா, முன்னாள் எம்எல்ஏ சண்முகையா பாண்டியன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தர்மராஜ் உள்ளிட்டோர் திரண்டிருந்தனர். வேட்பாளர் வந்ததும் வரவேற்பளித்து பால்ராஜ் தலைமையிலான அதிமுகவினர் ஊர்வலமாக அழைத்து வந்தனர். பிரசார ஜீப் அருகே சென்ற போது பால்ராஜ் கோஷ்டியினரை ஜீப்பில் ஏற விடாமல், முருகையா தரப்பினர் தடுத்து நிறுத்தினர். இரு கோஷ்டிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னாள் எம்எல்ஏ சண்முகையா பாண்டியன் கீழே தள்ளப்பட்டார். இதைப் பார்த்ததும் இரு தரப்பினரும் கம்புகளால் தாக்கியும், கற்களை வீசியும் பயங்கர மோதலில் ஈடுபட்டனர்.

அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த மோதலில் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் மீதும் கற்கள் வீசப்பட்டன. அவர்கள் அலறியடித்து ஓடினர். தாக்குதலில் பால்ராஜின் மண்டை உடைந்தது. மேலும் செல்லத்துரை, சண்முகையா பாண்டியன் உள்பட பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். யூனியன் சேர்மன் முருகையாவின் காரும் அடித்து நொறுக்கப்பட்டது. பிரசாரம் செய்ய வந்த வேட்பாளர் வசந்தி முருகேசன், கலவரத்தை பார்த்து பயந்து போய் தனது காரில் ஏறி நெல்லைக்கு பறந்தார்.

அவருடன் பிரசார வேன் மற்றும் அதிமுக நிர்வாகிகளின் கார்களும் மாயமாய் மறைந்து விட்டன. இது தொடர்பாக தேவர்குளம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இரு தரப்பு மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தால் வசந்திமுருகேசனின் பிரசாரம் இன்று மாலை வரை ரத்து செய்யப்பட்டது. dinakaran,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக