புதன், 9 ஏப்ரல், 2014

Spain இங்கிலாந்து தமிழ் பெண் டாக்டர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலி;


லண்டன்,
ஸ்பெயினில் விடுமுறையை கழிக்க சென்றபோது இங்கிலாந்து வாழ் தமிழ் பெண் டாக்டர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழ் பெண் டாக்டர்கள்
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் பெண் டாக்டர்கள் உமா ராமலிங்கம் (வயது 42), டாக்டர் பாரதி ரவிகுமார் (வயது 39). இங்கிலாந்து நாட்டில் தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். உமா ராமலிங்கம் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர். பாரதி ரவிகுமார் பொது மருத்துவ நிபுணர். இருவரும் உறவினர்கள்.
உமா ராமலிங்கம், மான்செஸ்டர் பகுதியில் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்தார். பாரதி ரவிகுமார், லிங்கன் நகரில் உள்ள பிரேஸ்பிரிட்ஜ் மருத்துவமனையில் பங்குதாரர்.
3 பேரை அலை வாரிச்சென்றது
இவர்கள் விடுமுறையை உல்லாசமாக கழிப்பதற்காக தங்கள் குடும்பத்தினருடன், ஒரு சுற்றுலா குழுவினருடன் இணைந்து ஸ்பெயின் நாட்டுக்கு சென்றார்கள்.
அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, அங்கு கேனரி தீவில் உள்ள டெனரிப் கடற்கரைக்கு சென்றனர்.
கடலில் இந்த குழுவினர் இறங்கி உற்சாக ஆட்டம் போட்டனர். அப்போது எழுந்த பேரலைகள் உமா ராமலிங்கத்தின் 10 வயது மகன் ஹரி உள்ளிட்ட 2 சிறுவர்களையும், 38 வயதான ஒரு இளம்பெண்ணையும் இழுத்து சென்றது.
2 பேர் பரிதாப சாவு

அவர்களை காப்பாற்றும் முயற்சியில் மற்றவர்களுடன் உமா ராமலிங்கமும், பாரதி ரவிகுமாரும் ஈடுபட்டனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அவர்கள் கடலின் ஆழமான பகுதியில் சிக்கி பரிதாபமாக மூழ்கி உயிரிழந்தனர்.
ஆனால் பேரலைகள் வாரிச்சென்ற ஹரி உள்ளிட்ட 2 சிறுவர்களும், இளம் பெண்ணும் ஹரியின் சித்தப்பா பழனிச்சாமி சந்திரத்தால் காப்பாற்றப்பட்டு, காயங்களுடன் மீட்கப்பட்டனர். மீட்கச்சென்ற 2 பெண் டாக்டர்கள் பரிதாபமாக பலியானது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உருக்கமான தகவல்கள்
கடலில் மூழ்கி உயிரிழந்த உமா ராமலிங்கத்தின் கணவர் டாக்டர் கண்ணன் பழனிச்சாமி 2007–ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் பலியாகி விட்டார். இந்தத் தம்பதியருக்கு 14 வயதில் ஹரி என்ற மகன் உள்ளார். உமா ராமலிங்கம், பழனிச்சாமி சந்திரம் என்பவரை மறுமணம் செய்திருந்தார். விபத்தில் தந்தையை இழந்த சிறுவன் ஹரி, இப்போது தாயையும் இழந்து விட்டான்.
டாக்டர் பாரதி ரவிகுமாரின் கணவர் டாக்டர் சின்னசாமி, லிங்கன் கவுண்டி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தக் குழந்தைகள் இப்போது தங்கள் தாயை இழந்து தவிக்கின்றனர். salasalappu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக