ஞாயிறு, 2 மார்ச், 2014

கருத்து கணிப்பு ஊழலில் அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில் சில பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும்

புதுடில்லி: கருத்து கணிப்பு என்ற பெயரில், போலி கணக்கெடுப்பு நடத்தப் படுவதாக எழுந்த புகாரை அடுத்து, இது தொடர்பாக கடுமை யான நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு, தேர்தல் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
 இன்னும் சில வாரங்களில், லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. பல்வேறு நிறுவனங் களும், 'தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது, எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும், யாருக்கு, பிரதமராக வாய்ப்பு உள்ளது' என்பது போன்ற கருத்து கணிப்புகளை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.


இந்த கருத்து கணிப்பு முடிவுகள் அனைத்தும், காங்கிரஸ் கட்சிக்கு, பாதகமாகவே உள்ளன. இந்நிலையில், காங்., கட்சி சார்பில், தேர்தல் கமிஷனில், சமீபத்தில், இது தொடர்பாக, ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில், 'சில அமைப்புகளும், நிறுவனங்களும், பணம் பெற்று, குறிப்பிட்ட கட்சிகளுக்கு சாதகமான முடிவுகளை, கருத்து கணிப்பு என்ற பெயரில் வெளியிடுகின்றன. 'சமீபத்தில் நடந்த, 'ஸ்டிங் ஆபரேஷன்' மூலம், இந்த விஷயம், அம்பலத்துக்கு வந்துள்ளது. எனவே, இந்த விஷயத்தில், தேர்தல் கமிஷன் தலையிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற பொய் பிரசாரங்களை கட்டுப்படுத்தவும் வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 'தேர்தல் கமிஷன், தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடப்பதை உறுதி செய்யும் விதமாக, தேர்தல் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்' என்றும், காங்கிரஸ் சார்பில், வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த விஷயத்தில், தேர்தல் கமிஷன், அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தலைமை தேர்தல் கமிஷனின் முதன்மை செயலர் அஜய குமார், மத்திய கம்பெனிகள் விவகாரம் மற்றும் தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சகங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சில அமைப்புகள், பணம் பெற்று, கருத்து கணிப்பு என்ற பெயரில், தவறான தகவல்களை வெளியிடுவதாகவும், அவற்றை மக்கள் மத்தியில் வெளியிட்டு, பொய் பிரசாரம் செய்வதாகவும், காங்., தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக, இந்த விஷயத்தில், கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து, கவனமாக  பரிசீலித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை, அரசியல் கட்சிகளிடமும், கருத்து கணிப்புகளை வெளியிடும் நிறுவனங்களிடமும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக