திங்கள், 24 பிப்ரவரி, 2014

Ram Vilas Paswan லோக் ஜனசக்தி பா.ஜ.க. கூட்டணி உறுதி !

மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதை அடுத்து மக்களவைக்குத் தேர்தல் நடத்துவது குறித்த ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதனையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் தேர்தல் கூட்டணி வியூகம் அமைப்பது குறித்து பிற அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றன.
இந்நிலையில் தேசிய அரசியலில் திடீர் திருப்பமாக மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிகள் இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது.

இத்தகவலை லோக் ஜன சக்தி கட்சியின் மூத்த தலைவர் சூரஜ்பான், பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எனினும் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய ராம்விலாஸ் பாஸ்வான், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து பிகாரில் மக்களவைத் தேர்தலில் லோக் ஜன சக்தி கட்சி போட்டியிடும் என்று அறிவித்திருந்தார்.
ஆனால் இதற்கு நேர்மாறாக பாஜகவுடன் லோக்ஜன சக்தி கூட்டணி அமைக்க முடிவு செய்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மக்களவைத் தேர்தலில் பிகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 10 தொகுதிகளை லோக் ஜன சக்தி கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று ராம்விலாஸ் பாஸ்வான் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 5 தொகுதிக்கு மேல் ஒரு தொகுதியைக் கூட தர முடியாது என ராம்விலாஸ் பாஸ்வானிடம் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் மக்களவைத் தேர்தலில் தனது மகன் சிராக் போட்டியிடுவதற்கு வசதியாக ஜமுய் தொகுதியையும், இளைய சகோதரர் ராமசந்திர பாஸ்வான் போட்டியிடுவதற்கு வசதியாக சமஸ்திபூர் தொகுதியையும் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார். ஆனால், அந்த 2 தொகுதிகளையும் விட்டுத்தர காங்கிரஸ் கட்சி மறுத்து விட்டதாகத் தெரிகிறது. அந்த 2 தொகுதிகளிலும் பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சௌத்ரியும், பிகார் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அசோக் ராம் ஆகியோர் போட்டியிட விரும்புவதாகவும் கூறியுள்ளது.
இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினாலேயே பாஜகவுடன் லோக்ஜன சக்தி கூட்டணியை உறுதி செய்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிகாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜன சக்தி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 29 தொகுதிகளில் அந்தக் கட்சிகள் வெற்றிப் பெற்றன. அதன்பிறகு 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனியாகவும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. இதில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றிப் பெற்றன. லோக் ஜன சக்தி ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறவில்லை.
இதனையடுத்து விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், லோக் ஜன சக்தி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான நடவடிக்கையில் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி உறுதியாகி விட்டதாக லோக் ஜன சக்தி அறிவித்திருப்பது லாலு பிரசாத் யாதவின் முயற்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

பாஜக கருத்து

பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அந்த மாநில பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி, மக்களவைத் தேர்தலில் பாஜக, லோக் ஜன சக்தி இடையே கூட்டணி ஏற்பட இருப்பதை சூசகமாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "காங்கிரஸூடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக பாஸ்வானுக்கு எதிராக சி.பி.ஐ. அமைப்பை அந்தக் கட்சி தவறாக பயன்படுத்துகிறது. மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இந்த நடவடிக்கையை பாஜக கடுமையாக கண்டிக்கிறது.
பாஜக - லோக் ஜன சக்தி கட்சிகள் இடையே கூட்டணி ஏற்படுமா என்று கேட்கிறீர்கள். தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் லோக் ஜன சக்தி இல்லை. ஆனால் அரசியலில் எதுவும் நடைபெறலாம் என்பதை மறுப்பதற்கில்லை' என்று சுஷில்குமார் மோடி கூறியிருந்தார். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக