திங்கள், 24 பிப்ரவரி, 2014

பாதுகாப்பு இல்லாத நிறுவனங்கள்: பரிதவிக்கும் ஊழியர்கள்

சென்னையில் ஐ.டி. (மென்பொருள்) நிறுவனங்களில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதால், அதில் பணிபுரியும் ஊழியர்கள் பரிதவிப்பிலும், பயத்திலும் சிக்கியுள்ளனர்.
நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், கிண்டி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், தரமணி, அம்பத்தூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 120 தனியார் ஐ.டி. நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் சுமார் 2 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
ஆனால் பல ஐ.டி. நிறுவனங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால் அங்கு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், சென்னை அருகே சிறுசேரி சிப்காட் வளாகத்தில் பிரபலமான தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த சாப்ட்வேர் என்ஜினீயர் உமா மகேஸ்வரி (23) அந்த சிப்காட் வளாகத்திலேயே கொலை செய்யப்பட்டது சாப்ட்வேர் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புறநகர் பகுதியில் ஆபத்து அதிகம்:
சென்னை நகருக்குள் போலீஸாரின் கண்காணிப்பும், ரோந்தும் தீவிரமாக இருக்கும் நிலையில் புறநகர் பகுதிகளில் செயல்படும் ஐ.டி. நிறுவனங்களில் பாதுகாப்பு போதிய அளவில் இல்லாமலேயே இருப்பதாக புகார் கூறப்படுகிறது. குறிப்பாக சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகவே உள்ளது.
ஐ.டி. நிறுவனங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என காவல்துறை சார்பில் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் ஐ.டி. நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ஆனால் இக் கூட்டத்தில் காவல்துறையினர் வழங்கும் பெரும்பாலான அறிவுரைகளை, இந்த நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை என ஐ.டி. ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐ.டி. நிறுவனங்களின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும், பாதுகாப்புக்கு நியமிக்கப்படும் பாதுகாவலர்கள் காவல்துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், இரவு நேரத்தில் பெண் ஊழியர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களில் கட்டாயம் பாதுகாவலர்கள் செல்ல வேண்டும் என காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்த அறிவுரைகளை இன்னும் பெரும்பாலான நிறுவனங்கள் பின்பற்றாமலேயே இருக்கின்றன என்று தெரியவந்துள்ளது.
மேலும் சில ஐ.டி. நிறுவனங்கள் தங்களது வளாகத்துக்குள் பாதுகாப்பை பலமாக வைத்திருந்தாலும், நிறுவனத்தின் வாயில் பகுதி, ஊழியர்கள் பஸ் ஏறுமிடம், வளாகத்தின் வெளிப் பகுதி ஆகியவை எவ்வித பாதுகாப்பும், கண்காணிப்பும் இல்லாமலேயே உள்ளது. உமா மகேஸ்வரி விஷயத்திலும், இந்தப் பாதுகாப்பு குறைபாடே கொலைக்கான காரணங்களில் ஒன்றாக காவல்துறை தரப்பில் கருதப்படுகிறது.
அதேநேரத்தில் ஐ.டி. ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, காவல்துறை சார்பில் ஐ.டி. நிறுவன வளாகங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புகார் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. மேலும் 2 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் புகார் செய்ய தனியாக இ-மெயில் முகவரியும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது இவை இரண்டுமே செயல்பாட்டில் இல்லை என சாப்ட்வேர் துறை ஊழியர்கள் கூறுகின்றனர். இப்போது ஐ.டி. ஊழியர் கொலை நடந்த சிறுசேரி சிப்காட் பகுதி சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குள் இல்லையென்றாலும், அங்குள்ள ஐ.டி. நிறுவனங்களின் பாதுகாப்பு இதைவிட மோசமாகவே உள்ளதாக ஐ.டி. ஊழியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இனிமேலாவது தங்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அந்த நிறுவனங்களும்,காவல்துறையும் போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதே ஐ.டி. ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக