புதன், 26 பிப்ரவரி, 2014

பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தில் பி.எஸ். தனுஷ்கோடி’

பி சீனிவாசராவ்நன்செயும் புன்செயும் கொழிக்கும் தஞ்சை என்று இலக்கிய வருணனையில் இறுமாந்து கிடக்கும் காவிரியின் கரைகளுக்கு வெளியேதான் பஞ்சைப் பராரிகளாகவும் பண்ணை அடிமைகளாகவும் ஆக்கப்பட்ட உழைக்கும் மக்களின் அவல வாழ்க்கை கேட்பாரற்றுக் கிடந்தது. அதைக் கேள்வி கேட்கத் துணிந்தவர்களின் அனுபவக் குரலை நாம் அறியச் செய்யும் ஒரு நூல் “பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தில் பி.எஸ். தனுஷ்கோடி”. கீழத்தஞ்சையில் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக போராடிய கம்யூனிச முன்னோடி பி சீனிவாசராவ்.
ஒரு பண்ணையடிமைக் குடும்பத்தில் பிறந்து அடிமை உழைப்பு, சாதிக் கொடுமை என்ற இரட்டை நுகத்தடியை வர்க்கப் போராட்டத்தினூடாக அறுத்தெறிந்த பி.எஸ் தனுஷ்கோடியின் வாழ்க்கைப் போராட்டத்தை விவரிக்கும் இந்நூல், படிக்கும் எவருக்கும் ஒரு நூலைப் படித்த ‘திருப்தியை’ அளிக்காமல் ‘மன அமைதியை’க் குலைத்துச் செயலுக்கிழுக்கும் இயக்கமாகவே எதிர்ப்படும்.
‘அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்ன செய்தார்கள் இந்த கம்யூனிஸ்டுகள்?’ என்பவர்களுக்கு முதலில் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது கீழத் தஞ்சை என்பதை அறிமுகப்படுத்துகிறது நூலின் முன் பகுதி.
அன்று கீழத்தஞ்சை ஒரு திறந்த வெளி சிறைச்சாலை. அங்கு நிலவிய கொடுமைகளிலிருந்து பண்ணை அடிமைகள், தம் விருப்பப்படி வெளியேறவும் முடியாது, “அயல் நாட்டுக்கு ஓடிவிடும் பண்ணையடிமை 10 வருடம் கழித்தோ, 15 வருடம் கழித்தோ, “தன் வீட்டிற்கு ஊருக்குத் திரும்பி வரலாமா?” என்று கேட்டு தந்தைக்கோ தமையனுக்கோ கடிதம் எழுதுவான். அந்தக் கடிதம் சம்பந்தப்பட்ட வீட்டிற்குப் போகாது. தபால்காரர் அதை நிலப்பிரபு வீட்டில் கொடுப்பார். அவர் உடனே சம்பந்தப்பட்ட நபரின் தந்தையை அழைத்து உடனே திரும்பி வரும்படி மகனுக்குக் கடிதம் எழுதும்படி கூறுவார். அயல் நாட்டிலுள்ள மகன் கடிதம் கிடைத்ததும் மகிழ்ச்சியுடன் ஊருக்கு கப்பலில் வருவார். ஆனால் கிராமத்திற்குள் அவர் நுழைந்தவுடன் நிலப்பிரபுவின் ஆட்கள் அவரை இழுத்துக் கொண்டு போய் பண்ணை வீட்டில் கட்டுவார்கள். வட்டியும் முதலுமாகச் சவுக்கடி கொடுக்கப்படும். மீண்டும் அந்த ஆள் பயணம் செய்ய முடியாத அளவுக்கு குற்றுயிராக ஆக்கப்பட்டு விடுவான்.’’ (நூல் பக்கம்34)
இப்படி ஊருக்குத் திரும்பி நிலப்பிரபுவின் காலில் விழுந்து ‘எசமான் சௌக்கியமா?’ என்று கேட்ட சிலம்பன் போன்றவர்களை வைக்கோல் பிரிசுற்றி, தீ வைத்து எரிப்பதே நிலப்பிரபுவின் முதல் விசாரணையாகவும் இருந்தது. பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என பண்ணையடிமைகள் பலவாறு சிந்திய இரத்தத் துளிகளால் நிரம்பியதுதான் அன்றைய ‘நெற்களஞ்சியம்’.
இத்தகைய கொடுமையான சூழலில் தான் திருத்துறைப் பூண்டி வட்டத்திலுள்ள விளத்தூர் எனும் சிறிய கிராமத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தார் தனிக்கொடி என்ற பி.எஸ். தனுஷ்கோடி.
உலகைப் புரிந்து கொள்ள அவரது அறிவுக் கண்ணைத் திறந்தது உமையாளின் ஞானப்பால் அல்ல. ஆண்டைகளின் சாணிப் பால். ஆம்! சாணிப்பாலும், சவுக்கடியுமாய் அவதிப்பட்டுக் கொண்டிருந்த கூலி விவசாயிகளின் குரலுக்கு எந்தச் சாமியும் இறங்கி வராதது கண்டு ‘கடவுளர்களை’ விடுத்து கட்சியைத் தேட ஆரம்பித்தார் தனுஷ்கோடி. அவருக்கு முதல் அனுபவமே மோசமாக முடிந்தது. கைங்கர்யம் காங்கிரசு கட்சி.
“மகாத்மா காந்திக்கு ஜே” என்று தனுஷ்கோடியும் உற்சாகம் பெருக ஊர்வலத்தில் சேர்ந்து, விளத்தூருக்குப் போய் அங்கிருந்த அக்கிரகாரத்துக்குள் நுழைந்தது ஊர்வலம். இதைக் கண்ட பிராமணர்கள் “தீண்டாப் பறையனுக வந்துட்டானுக” என்று அலறியபடியே ஓடி ஓளிந்தனர். தனுஷ்கோடியும் இதர சிறுவர்களும், பிராமணர்கள் வீட்டுத் திண்ணையில் உட்காருவது, கதவைத் தொட்டுப் பார்ப்பது, வீட்டிற்குள் நுழைந்து வெளியே ஓடி வருவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். விளைவு அய்யர் நிலப்பிரபுக்கள் கையில் புளியவிளாருடன் மாறி மாறி அடித்தனர். தனுஷ்கோடி கதறினார். இரத்தம் ஓட பொறுக்க முடியாத வேதனையுடன் தனுஷ்கோடி காங்கிரசு தலைவர் ராமு படையாச்சிடம் ஓடி வந்தார். தனது ரத்தக் காயங்களைக் காட்டினார். அந்த காங்கிரசு தலைவர் அளித்த பதில் தனுஷ்கோடியை இன்னும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. “நேத்து நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை நேத்தே குழிதோண்டி புதைச்சிருக்கணும். நீ செஞ்சது அக்ரமம்” என்றார்.” (நூல் பக்கம்: 50)
மூவர்ணக்கொடியின் நால் வர்ணவெறியை அனுபவமாகப் புரிந்து கொண்ட தனுஷ்கோடியின் எண்ணத்தை ஈர்த்தது சுயமரியாதை இயக்கம். ஆர்வத்தோடு பெரியார் பேச்சைக் கேட்க திருத்துறைப் பூண்டி போன அனுபவத்தை அவரே பின் வருமாறு விவரிக்கிறார், “அந்த ஊரில் சன்னாவூர் பக்கிரிசாமி பிள்ளை என்பவர் டீக்கடை வைத்திருந்தார். அவர் பெரியாரின் இயக்கத்தைச் சேர்ந்தவர். அவரது மனைவி, குழந்தைகள் அனைவருமே, கறுப்பு உடைதான் அணிவார்கள். நான் பெரியார், அம்பேத்கார் பேட்ஜை அணிந்து கொண்டு அவரது கடைக்குள் சென்று டீ குடிக்க அமர்ந்தேன். தோற்றத்தில் இருந்தே நான் ஒரு அரிஜன் என்பது அவருக்குத் தெரிந்து விட்டது அவ்வளவுதான் . அங்கேயே என்னை புரட்டி எடுத்து விட்டார். “நான் பெரியார் கட்சிக்காரன்” என்று கத்தினேன். என்னடா பெரியார் கட்சி என்று கேட்டு அடித்தார்.” (நூல் பக்கம் 51)
இப்படி ‘அடிமேல் அடிவைத்த’ இயக்கங்களால் அடிமைத்தனத்தில் இருப்புக் கொள்ள முடியாமல் தவித்த தனுஷ்கோடியின் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியது கம்யூனிஸ்டு கட்சி இயக்கம். அதன் ஊழியர் தோழர் சீனிவாசராவ் சந்திப்பும் தனுஷ்கோடியை செங்கொடி இயக்கத்தின் செயல்வீரராக மாற்றியதை நிரல்படத் தொகுத்துரைக்கிறது நூலின் பகுதி.
“சவுக்கடியை நிறுத்து; சாணிப்பாலை நிறுத்து, மொட்டை மரக்காலில் கூலியை அளக்காதே” என்ற கம்யூனிஸ்டு கட்சியின் முழக்கங்களைத் தனதாக்கிக் கொண்ட தனுஷ்கோடி மெல்ல, மெல்ல மக்கள் போராட்டங்களைக் கட்டி எழுப்பும் தலைவராகப் பரிணமிப்பதை விளக்குவதோடு, இதே காலகட்டத்தில் தீண்டாமையை ஒழிப்பதில் விவசாய சங்கத்தினர் முன்னின்று நடத்திய போராட்டக் களங்களோடு, பின்னிப் பிணைந்து செல்கிறது தனுஷ்கோடியின் வாழ்க்கை. ஒரு கம்யூனிஸ்டு தன்னளவிலும் சமரசமற்ற போராளி என்பதை தனது சொந்த வாழ்விலும் அமுல்படுத்திய தனுஷ்கோடியின் திருமணம், மற்றும் தொடர் இயக்கங்களை வர்க்கம், சாதி பற்றிய உள்ள உறவுகளை, சொல்லிச் செல்கிறது நூலின் பிற பகுதிகள். எப்போதும் மக்கள் போராட்டங்களுக்குத் துரோகமிழைக்கும் போலி கம்யூனிஸ்டுகள் ‘நூல் இழையில்’ மறைக்கும் பகுதிகளை நாம் சொல்லியாக வேண்டும்.
வீரஞ்செறிந்த கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கப் போராட்டத்தை, தலைமறைவு இயக்கத்தில் கம்யூனிச போராளிகள் செய்த தியாகம், அர்ப்பணிப்பை வர்க்க உணர்வு கொப்பளிக்க செறிவாக அளித்திருக்கலாம். விவசாயிகள் இயக்கத்தின் வரலாறை, அதன் வர்க்கப் போராட்ட வீச்சை இடது, வலது போலிகள் இன்னும் முழுமையாக, ஆழமாக மக்களிடம் துலக்கமாக எடுத்துக்காட்டாததன் மர்மம்தான் என்ன?
அப்படிப்பட்ட சமரசமற்ற களப்போராட்டத்தைக் காட்ட ஆரம்பத்தில் சீனிவாசராவ், களப்பால் குப்பு, கரம்பயம் சுப்பையா வரிசையில் நம்மால் சுர்ஜித்தையும், ஜோதிபாசுவையும், இந்திரஜித் குப்தாவையும் காணச் சகிக்க முடியாது. அசலை வெளிக் கொணர்ந்தால் நகல் நகைப்பிடமாகும்.
பி சீனிவாசராவ் நினைவு மண்டபம்
பி சீனிவாசராவ் நினைவு மண்டபம்
கீழத்தஞ்சையின் வர்க்கப் போராட்டத்தின் முழுப் பரிமாணத்தையும், வரலாற்றையும் மக்களிடம் கொண்டு சென்றால், பாராளுமன்றத்துக்கு உள்ளே பதவி நாற்காலியிலும், வெளியே கட்சி ஆபிசிலும் ரொக்கப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் குட்டு உடைந்து விடும். 48, 50-களில் போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றால்; தொழிலாளி வர்க்கத்தின் மீதான அடக்கு முறைக்கு எதிராக ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டிருக்கும் நீங்கள் யார் என்ற கேள்வி எழுந்துவிடும்.
ஆதிக்கச் சாதியினரின் அடக்கு முறைக்கு சாதி வெறிக்கு எதிராக அன்றைய கம்யூனிஸ்டு கட்சி டீக்கடையில் அமர்வோம், கோயிலில் நுழைவோம் என்று நுழைந்து காட்டியது. இன்றோ மேல் சாதியின் மனம் மாறாமல் மேற் கொண்டு எதுவும் செய்ய இயலாது என்கின்றனர் போலிக் கம்யூனிஸ்டுகள்.
டீக்கடை பெஞ்சில் உட்கார உரிமை கோரிப் போராடிய சீனிவாசராவ், தனுஷ்கோடி எங்கே? பிரதமர் நாற்காலியில் குந்த கட்சியிடம் உரிமை கோரி ‘போர்க் கொடி’ தூக்கும் ஜோதிபாசு எங்கே?
போலிக் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல திராவிட இயக்கங்கள், தாழ்த்தப் பட்டோர் இயக்கங்களும் கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்க வரலாற்றை இருட்டடிப்பு செய்வதில் ஒத்திசைந்து நிற்கிறார்கள். காலத்தின் போக்கை மாற்றிய அந்த வரலாற்றை ஓங்கி ஒலித்தால், காலந்தோறும் அதிலிருந்து ஒதுங்கி நின்ற அவர்களது வரலாறு அம்பலப்பட்டுப் போகும் என்பதுதானே இவர்களின் இருட்டடிப்புக்குக் காரணம்!
“சாதி ஒடுக்குமுறைக்கெதிராக என்ன செய்தார்கள் கம்யூனிஸ்டுகள்?” என்ற அவதூறுக்குத் தன் ரத்தத்தால் பதில் சொல்லியிருக்கிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம். பண்ணையடிமைத்தனத்திற்கெதிரான போராட்டத்தில் சீனிவாசராவையும், இரணியனையும் தனுஷ்கோடியையும் இன்னும் ஆயிரக்கணக்கானோரையும் செங்கொடி தந்தது. நீலக்கொடி தராதது ஏன்?
கண்ணெதிரே நடந்த பண்ணையடிமைத்தனத்திற்கெதிரான போராட்டத்தில் களத்திலிறங்காமல், அரசு சன்மானங்களைப் பெறவும், அதிகாரத்தைப் பங்கு போடவும் பக்கவாட்டில் ஒதுங்கிக் கொண்டவர்களின் அரசியல் பிழைப்புவாதத்தை அறிந்து கொள்ள அன்றைய சமகால வரலாற்றைப் புரட்டிப் பார்க்கக் கோருகிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம்.
இதை வலது, இடது கம்யூனிஸ்டுகள் இன்று கோர மாட்டார்கள்; கிளற மாட்டார்கள். அன்றைய விவசாயிகள் இயக்கம் அவர்களது தொண்டையில் முள்ளாய் சிக்கியிருக்கிறது. அந்த இறந்த காலத்தைத் தட்டியெழுப்பினால் அது இவர்களது நிகழ்காலத்தைக் கொன்று விடக்கூடிய ஆபத்து இருக்கிறது.
எனினும் வரலாற்றை மாற்றியமைத்ததற்காக, வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்பும் வாசகர்கள் இந்த ‘ஆபத்தை’ விலை கொடுத்து வாங்கலாம்.
- சுடர்விழி vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக