திங்கள், 20 ஜனவரி, 2014

முன்பே மலேசியா சென்ற மதுரை தி.மு.க.வினர்! அழகிரியும் மலேசியா புறப்படுவார் ?


திமுக தலைவர் கருணாநிதியை தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சந்தித்துப் பேசினார். இருவரும் சுமார் 50 நிமிடம் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்கு வந்த அழகிரி, கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
சுமார் 50 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சந்திப்பின்போது அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். அப்போது மதுரை கட்சி நிலவரம் பற்றி இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.
மலேசியாவில் நடக்கவுள்ள ஒரு நிகழ்ச்சிக்கு நண்பர்களுடன் அழகிரி செல்லவிருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. அதுபற்றியும் கருணாநிதியுடன் அழகிரி பேசியதாக தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அல்லது அதற்கு பிறகு அவர் மலேசியா புறப்படுவார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

தேமுதிக தலைவர் விஜயகாந்தும் சில நாட்களுக்கு முன்பு மலேசியா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா சென்ற மதுரை தி.மு.க.வினர்:
திமுக தென்மண்டல அமைப்புச் செயலர் மு.க.அழகிரியின் ஆதரவாளர் களுக்கான அறிவிக்கப்படாத மாவட்ட செயலராகத் திகழும் பி.எம்.மன்னன் கடந்த 17-ம் தேதி மலேசியா சென்றார். அவருடன் மாநகர் மாவட்ட துணைச் செயலராக இருந்த உதயகுமார், பகுதி செயலர்களாக இருந்த முபாரக் மந்திரி, வி.என்.முருகன், உதயகுமாரின் தம்பி பாலாஜி உள்ளிட்டோரும் மலேசியா சென்றனர்.
இந்நிலையில் மு.க.அழகிரியும் மலேசியா புறப்பட இருப்பதாக சென்னையில் இருந்து தகவல் கிளம்பியுள்ளது. மலேசியாவில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து கூட்டணி குறித்து பேசச் சென்றுள்ளார் என்றும், தன் ஆதரவாளர்களுடன் ரகசியக்கூட்டம் நடத்தச் சென்றுள்ளார் என்றும் வெவ்வேறான தகவல்கள் கூறுகின்றன.
அறந்தாங்கியைச் சேர்ந்த முஸ்லிம் பிரமுகரின் இல்லத் திருமண விழா மலேசியாவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அழகிரியின் ஆதரவாளர்கள் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
கருணாநிதியுடனான திடீர் சந்திப்பு பற்றி கேட்டபோது, “மதுரையில் அழகிரியின் வீடு அருகே அவருக்கே தெரியாமல் ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொடியேற்று விழா என்று கூறி சிலர் பிரச்சினை செய்தனர். இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதுபற்றி பேசுவதற்குத்தான் அழகிரி, கருணாநிதியைச் சந்தித்திருப்பதாகத் தெரிகிறது” என்றனர்.
மலேசியாவில் விஜயகாந்திடம் மமக பேச்சு:
மலேசியா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தை, மனித நேய மக்கள் கட்சியினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
திமுக கூட்டணியில் உள்ள மமக கட்சியின் பொதுச் செயலாளர் தமீம் அன்சாரி, இணை பொதுச் செயலாளர் ஹாரூண் ரஷீத் ஆகியோர் மலேசியாவில் விஜயகாந்தை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, பாஜக கூட்டணிக்கு தேமுதிக போகக் கூடாது என்றும், திமுக கூட்டணிக்கு வரவேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இதைப் பற்றி பரிசீலிப்பதாக அவர்களிடம் விஜயகாந்த் கூறியுள்ளதாகவும் தெரிகிறது.  tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக