வியாழன், 23 ஜனவரி, 2014

ஆம் ஆத்மியின் சட்ட அமைச்சர் ஆபிரிக்க பெண்ணை வீடு புகுந்து தாக்கினார் ! ஆம் ஆத்மி அரசுக்கு நெருக்கடி:

தில்லி மாநில சட்டத்துறை அமைச்சர் சோம்நாத் பாரதியை பதவிநீக்கம் செய்யுமாறு எதிர்க்கட்சிகளும், மகளிர் அமைப்புகளும் வலியுறுத்துவதால் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நள்ளிரவில் தங்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலுக்கு தலைமை தாங்கி நடத்தியவர் சோம்நாத் பாரதிதான் என்று ஆப்பிரிக்கப் பெண் ஒருவர் அடையாளம் காட்டியதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு என்ற பெயரில் தலைநகரில் 2 நாள் தர்னாவை நடத்திய கேஜரிவால், பெண்கள் மீது தாக்குதல் நடத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் இரட்டை வேடம் போடுகிறார் என்று மகளிர் அமைப்புளும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன.

சர்ச்சையே உன் பெயர் சோம்நாத் பாரதியோ? என்று கேட்கும் அளவுக்கு அவர் சமீப காலமாகச் செயல்பட்டு வருவதால் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தில்லி நீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்துக்கு அவர் சமீபத்தில் அழைப்பு விடுத்ததும் பெரும் விவகாரமானது. எனவே, வெளிப்படையாக எந்த அறிவிப்பையும் வெளியிடும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு சோம்நாத்தை ஆம் ஆத்மி கட்சி அறிவுறுத்தியுள்ளது.
உகாண்டா பெண் சாட்சியம்: தில்லியில் சோம்நாத் பார்தி தலைமையிலான குழுவினர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் உகாண்டா பெண்மணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அப்பெண்மணி தெற்கு தில்லி சாகேத் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சாட்சியம் அளித்தார். இது குறித்து அப் பெண்மணி செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
தெற்கு தில்லி, கிர்க்கி கிராமத்தில் நாங்கள் வசிக்கும் பகுதியில் ஜனவரி 15ஆம் தேதி இரவு சிலர் கும்பலாக வந்தனர். வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, "கருப்பர்கள்' என்றும் "நாட்டை விட்டு வெளியேற வேண்டும்' என்றும் சிலர் கோஷமிட்டனர். பெண்களிடம் சிலர் ஒழுங்கீனமாகவும் நடந்து கொண்டனர்.
பெரிய தடிகளுடன் வந்திருந்த அவர்கள் எங்களைத் தாக்கினர். நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றால் அடித்துக் கொன்றுவிடுவோம் என மிரட்டினர். நாங்கள் கருப்பர்களாக இருப்பது குற்றமா? சோதனைக்குத் தலைமையேற்றவர் மஃப்ளர் அணிந்திருந்தார். சோதனை தொடர்பாக டிவிக்கு பேட்டி அளித்தபோதும் அவர் அதே மஃப்ளரைத்தான் அணிந்திருந்தார். எங்கள் வீடுகளுக்கு வந்த கும்பலுக்கு தலைமை தாங்கியவர் அவர்தான் (சோம்நாத் பார்தி) என்பதை என்னால் அடையாளம் காட்ட முடியும் என்று உகாண்டா பெண் தெரிவித்தார்.
முன்னதாக, சாகேத் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை உறுதிப்படுத்தும் வகையில் உகாண்டா பெண் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். அதில், சோம்நாத் பார்தியின் பெயரையோ, அரசியல் கட்சியின் பெயரையோ அவர் குறிப்பிடவில்லை.
"ஒருவர் தலைமையிலான கும்பல் எங்கள் வீடுகளில் தாக்குதல் நடத்தியது. ஆனால், தலைமையேற்று வந்தவரை இப்போது என்னால் அடையாளம் காட்ட முடியும்' என்று மட்டும் பிரமாணப் பத்திரத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மகளிர் காங்கிரஸ் கண்டனம்: இந் நிலையில், மகளிர் காங்கிரஸ் தலைவர் ஷோபா ஓஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், "நள்ளிரவில் தனது ஆதரவாளர்களுடன் சென்று உகாண்டா பெண் வசித்த வீட்டில் சட்ட அமைச்சர் சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது. தில்லி அமைச்சர் மீது விசாரணை நடத்த வேண்டும். அவர் தண்டிக்கப்பட வேண்டும்' என்றார்.
இதற்கிடையே, இந்திய தேசிய மாதர் சம்மேளன பொதுச் செயலர் ஆனி ராஜா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறுகையில், "சோம்நாத் பாரதி இன்னமும் அமைச்சராக நீடிக்கத் தகுதியில்லை.
அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் பகுதியில் நள்ளிரவில் சோதனை நடத்தியது மனித உரிமை மீறல். இது கண்டனத்துக்குரியது' என்றார்.
ஆதரவு பற்றி பொது வாக்கெடுப்பு: காங்கிரஸ் திட்டம்
"ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான தில்லி அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் தொடர்வதா? வேண்டாமா? என்பது குறித்து பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவோம்' என்று தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், எம்எல்ஏவுமான முகேஷ் சர்மா தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறுகையில், ""தில்லி அரசின் செயல்பாடு நாளுக்கு நாள் பலதரப்பினரும் விமர்சிக்கும் வகையில் உள்ளது. நள்ளிரவில் சட்டவிரோத சோதனை மேற்கொண்ட தில்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதியின் செயல் கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். மேலும், ஆம் ஆத்மி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவது குறித்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவோம். ஆதரவைத் திரும்பப் பெறுமாறு மக்கள் பணித்தால் அப்படியே நாங்கள் செய்வோம்' என்றார்.
ஏற்கெனவே இது குறித்து தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங்கும் சூசகமாகத் தெரிவித்திருந்தார். "மக்கள் பிரச்னைக்காக கேஜரிவால் தர்னாவில் ஈடுபடவில்லை. தங்களது நடவடிக்கைகளால் சட்ட ரீதியிலான பிரச்னைகளை எதிர்கொள்ளும் நிலைக்கு வந்துள்ள கட்சியின் அமைச்சர்களைக் காப்பாற்றுவதற்காகவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தனது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்காகவும் அவர் தர்னாவில் இறங்கியுள்ளார். கேஜரிவாலுக்காக காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை. தில்லி மக்களுக்காகவும், மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றுவதற்காகவும்தான் ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அவருக்கு அளித்து வரும் ஆதரவு குறித்து கட்சி மறு சிந்தனை செய்ய வேண்டியது வரும்' என்று அர்விந்தர் சிங் குறிப்பிட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக