திங்கள், 13 ஜனவரி, 2014

ஏற்காடு இடைத்தேர்தலில் ஆணையர் பிரவீன் குமாரும் ஜெயா கும்பலின் அராஜக ஆட்டங்களுக்குப் பக்கமேளம் !

டந்த டிசம்பர் 4-ஆம் தேதியன்று நடந்த ஏற்காடு தொகுதிக்கான இடைத்தேர்தலில் எதிர்பார்த்தபடியே ஆளும் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. பணத்தால் அடிப்பது, எதையும் விலை பேசுவது, எதிரியின் நிழலுக்கும் எலும்புத் துண்டை வீசுவது என்று தேர்தல் ஆணையக அதிகாரிகள் முன்னிலையிலேயே பாசிச ஜெயா பகிரங்கமாக ஏலத்தில் எடுத்து இந்த வெற்றியைச் சாதித்துள்ளார்.
ஏற்காடு தேர்தல்
பாசிச ஜெயா கும்பலின் பணநாயகத்துக்குப் பக்கமேளம்: அ.தி.மு.க.வினர் ஏற்காடு தொகுதியின் கிராமங்களில் பணத்தை வாரியிறைத்து வாக்காளர்களை விலைபேணிக் கொண்டிருந்த போது, தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனை என்ற பெயரில் பொதுமக்களிடம் பணத்தைப் பறிமுதல் செய்து சூரத்தனம் காட்டும் தேர்தல் ஆணையம்.
வாக்கு வித்தியாசத்தை முன்னைக்காட்டிலும் அதிகப்படுத்தி தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்வது, இதை முன்னுதாரணமாகக் காட்டி 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவது என்பதே அவரது நோக்கமாக இருந்தது.
இதற்காகவே, இதுவரை கண்டிராத வகையில் தனது அமைச்சரவையிலுள்ள 31 அமைச்சர்கள் உள்ளிட்டு மொத்தம் 61 பேரை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமித்தார். முன்னாள் – இந்நாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், செயலாளர்கள், தொண்டர்கள் என ஒரு பெரும்படையைக் கொண்டு தொகுதியை முகாமிட்டு, கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து வாக்காளர்களை விலை பேசி இந்த வெற்றியைச் சாதித்துள்ளது ஜெயா கும்பல். ஆபாசக் குத்தாட்டங்கள், பணம், சாராயத்துடன் பிரியாணி – ஜெயா கும்பல் உச்சத்துக்குக் கொண்டு சென்றதால், எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத வகையில் ஏற்காடு தொகுதியில் இம்முறை 89.23 சதவீத வாக்குகள் பதிவாகின.
போதாக்குறைக்கு தேர்தல் ஆணையமும், ஆணையர் பிரவீன் குமாரும் ஜெயா கும்பலின் அராஜக ஆட்டங்களுக்குப் பக்கமேளம் வாசித்தனர். ஏற்காடு தொகுதியின் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை என்ற பெயரில் பொதுமக்களின் பணத்தைப் பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள், அமைச்சர்கள் செல்லும் கிராமச் சாலைகளில் சோதனை போடவில்லை. ஒவ்வொரு வாக்காளருக்கும் ஆளும் கட்சியினர் தலா ரூ. 2,000 வழங்கியதை தொலைக்காட்சிகள் அம்பலப்படுத்தியபோதிலும், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அக்டோபர் 5-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும், ஏற்காடு தொகுதிக்குட்பட்ட பல கிராமங்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் போன்றவை வழங்கப்பட்டு, அ.தி.மு.க. அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் திடீரென நடத்தப்பட்டன.
அதிகாரத்திலுள்ள முதல்வர் வாக்குறுதிகளை வழங்கக்கூடாது என்று தேர்தல் நடத்தை விதிகள் இருந்த போதிலும் ஏராளமான பல்வேறு சிறப்புத் திட்டங்களுக்கான வாக்குறுதிகளை ஜெயலலிதா அள்ளி வீசினார். இதுபற்றி தி.மு.க.வினர் புகார் கொடுத்ததும், இப்புகாருக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவிடம் கோரியது. ஆனால் அவரோ, தான் எந்த விதிமுறையையும் மீறவில்லை என்று திமிராகப் பதிலளித்தார். இந்த விளக்கத்தை ஏற்க மறுப்பதாகக் கூறிய தேர்தல் ஆணையம், பிரச்சாரத்தின்போது வாக்காளர்களிடம் புதிய திட்டங்கள் பற்றி பேசக்கூடாது, எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என்று அறிவுரைதான் வழங்கியதே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விலைவாசி உயர்வு, மின்வெட்டு என மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், பணத்தையும் பரிசுப் பொருட்களையும் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவதை உச்சத்துக்குக் கொண்டு சென்று இந்தத் தேர்தல் வெற்றியைச் சாதித்துள்ள ஜெயலலிதா, இதனை அ.தி.மு.க. அரசின் நலத்திட்ட பணிகளை மக்கள் அங்கீகரித்துள்ளதற்குக் கிடைத்த வெற்றி என்று திமிராகப் பறைசாற்றிக் கொள்கிறார். ஜனநாயகம் என்றால் அது ஓட்டுப்போடுவதற்கானது என்பதாகப் பயிற்றுவிக்கப்பட்டு, அரசியலற்ற பிழைப்புவாதத்திலும் ஊழலுக்கு உடந்தையாகவும் உழைக்கும் மக்கள் மிகக் கேவலமான முறையில் சீரழிக்கப்பட்டிருப்பதுதான் ஜெயலலிதாவின் ‘ஏற்காடு புரட்சி’!
- தனபால் vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக