புதன், 1 ஜனவரி, 2014

பாஜக கூட்டணியில் விஜயகாந்த், வைகோ, ராமதாஸ், ரங்கசாமி, ஈஸ்வரன், பச்சமுத்து!!

சென்னை: இதோ அதோ என்று மெதுமெதுவாக பாரதிய ஜனதாவின் மெகா கூட்டணி உதயமாகிக் கொண்டிருக்கிறது. இதன் முதல் போணியாக வைகோ, பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா, அகாலி தளம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் விரைவில் இந்த கூட்டணியில் இணைய இருக்கிறார். இந்த நிலையில் மறுமலர்ச்சி திமுகவும் பாரதிய ஜனதா தலைமையிலான அணியில் இணைவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருக்கிறது
அத்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸும் பாஜக தலைவர் ராஜ்நாத்தை டெல்லியில் அண்மையில் சந்தித்து பேசினார். இதனையடுத்து பாமகவும் பாஜக அணியில் இணைவது உறுதியாகி இருக்கிறது. நாளை நடைபெறும் பாமக பொதுக் குழுவில் அனேகமாக இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே பாரதிய ஜனதா அணியில் இணைந்துவிட்டதாக இந்திய ஜனநாயகக் கட்சியின் பச்சமுத்து அறிவித்திருக்கிறார். இந்த பட்டியலில் ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் இணைய இருக்கிறது.
இதேபோல் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸும் பாஜக அணியில் இணையக் கூடும் என்று தெரிகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாஜக ஆதரவில் நடைபெற்ற வல்லபாய் படேலின் பிறந்த நாள் விழாவில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்ட போதே இது உறுதியாக தெரிய வந்தது.
இந்த பட்டியலில் விஜயகாந்தின் தேமுதிகவை சேர்க்கும் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான முழு முயற்சிகளிலும் பாஜக இறங்கியுள்ளது. தேமுதிக தரப்பும் கூட திமுகவுடன் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டே பாஜக அணியில் தொகுதி பங்கீடு வரை சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் தேமுதிகவும் இணைய 'மெகா கூட்டணி"யாக பாஜக லோக்சபா தேர்தலை சந்திக்க இருக்கிறது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக