புதன், 1 ஜனவரி, 2014

நான் செய்த சாதனைகளை மறைத்து பொய் பிரசாரம்: மு.க.அழகிரி எம்.பி. குற்றச்சாட்டு

புத்தாண்டையொட்டி தி.மு.க. தென்மண்டல அமைப்புச்செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி எம்.பி.யை தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் சந்தித்து அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் மு.க.அழகிரி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
நான் மதுரையில் மக்களுக்காக பல சாதனைகளை செய்துள்ளேன். மக்களுக்கு தேவையான திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளேன். ஆனால் நான் செய்த சாதனைகளை அ.தி.மு.க. அரசு மறைத்து பொய் பிரசாரம் செய்து வருகிறது. குறிப்பாக எம்.ஜி.ஆர். காலத்திலேயே மாற்ற முடியாத சென்ட்ரல் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றினேன்.
மதுரை மக்களுக்கு பயன்படும் வகையில் 15 இடங்களில் நவீன இலவச கழிப்பறைகளை கொண்டு வந்தேன். இதை மக்கள் வரவேற்று பாராட்டினர். ஆனால் இப்போதுள்ள அ.தி.மு.க. அரசு அக்கழிப்பறைகளை கட்டண கழிப்பறைகளாக மாற்றி உள்ளது.
மேலூர் பகுதியில் கக்கன் காலத்தில் தொடங்கப்பட்ட பஞ்சாலை மூடப்பட்டு இருந்தது. அங்கு கிரானைட் பாலீஷ் போடும் தொழிற்சாலை கொண்டு வந்தேன். இதனால் பல தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். தூத்துக்குடியில் மூடிக்கிடந்த ஸ்பிக் தொழிற்சாலையை தீவிர நடவடிக்கை மூலம் மீண்டும் செயல்பட வைத்தேன்.
வாடிப்பட்டியில் ஜவுளி பூங்கா கொண்டுவரப்பட்டது. தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளை மதுரையில் அமைக்கப்பட்டது. ஆனால் இதை அ.தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது. மேலூர் பகுதியில் எனது முயற்சியால் பாலிடெக்னிக் கல்லூரி மூலம் பல மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். அனைத்து தர மக்களும் பயன்பெறும் வகையில் பல பகுதிகளில் சமுதாய கூடங்களும் கட்டப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுத்தேன். மதுரையில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக வைகை–காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தேன். இதை எல்லாம் அ.தி.மு.க. அரசு மறைத்து பொய் பிரசாரம் செய்து வருகிறது. எனது எம்.பி. தொகுதியின் மேம்பாட்டு நிதியை மாவட்ட நிர்வாகமோ, மதுரை மாநகராட்சியோ உரிய முறையில் பயன்படுத்தவில்லை என்றார்.
அப்போது நிருபர்கள், அ.தி.மு.க. அரசின் திட்டங்கள் எப்படி உள்ளது? என்று அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், திட்டங்களை செயல்படுத்தினால்தானே சொல்ல முடியும். என்னை பழி வாங்கும் செயலிலே அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கூரையில் நடக்கும் கல்லூரிகளுக்கு எல்லாம் அனுமதி கொடுக்கப்படுகிறது. ஆனால் என்னுடைய கல்லூரிக்கு அனுமதி மறுப்பது வேதனைக்குரியதாக உள்ளது. எனது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை–எளிய மக்களுக்கு கட்சியின் நிர்வாகிகள் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள் என்றார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக