ஞாயிறு, 5 ஜனவரி, 2014

மாற்று எரிபொருளாக எத்தனால் வருமா? கமிஷன் பெற்றுக்கொண்டு இந்தியாவில் முட்டுக்கட்டைபோடுகிறதா நிறுவனங்கள் ?

ஆண்டுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்வையே அதிர்ச்சியோடு பார்த்தவர்களுக்கு இப்போது வழக்கமாகி விட்டது. குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு ஊடகங்களில் பிரதான செய்தியாக இடம் பிடிக்கிறது. அன்றாடம் வேலைக்கு செல்ல இரு சக்கர வாகனம் அல்லது கார் பயன்படுத்துபவர்களாக இருந்தால் எரிபொருளுக்கென தனியாக பட்ஜெட் போட்டு முன் கூட்டியே சேமிக்க பழகி விட்டனர். மற்ற பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும் அடிப்படை காரணமாக டீசல் விலை உயர்வு அமைந்து விடுகிறது.
கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.47.93க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.74.74க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப உள்நாட்டில் விலையை உயர்த்திக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதை சாதகமாக பயன்படுத்தி ஒரு ஆண்டுக்குள் 9 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. ஒருபுறம் எதிர்க்கட்சிகள், பல மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை கடமையாக கொண்டுள்ளனர்.
>ஆனால் இதற்கான மாற்று திட்டங்களில் பலர் கவனம் செலுத்துவதில்லை என்பது தான் உண்மை. மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை நீக்கினால் ஓரளவு குறைந்த விலைக்கு பெட்ரோல் வாங்க முடியும். ஆனால் வரியை குறைப்பதோ அல்லது நீக்குவதோ சாத்தியமில்லாதது. கோவாவில் மட்டும் விற்பனை வரி குறைக்கப்பட்டது. இனி வரும் ஆண்டுகளிலும் பெட்ரோல், டீசல் விலையேற்றம் தவிர்க்கமுடியாதது. இதற்கு மாற்று தீர்வு எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பது மட்டும் தான். இந்தாண்டின் துவக்கத்தில் சர்க்கரை ஆலைகளில் 5 சதவீதம் மட்டும் எத்தனால் எரிபொருள் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதியளித்தது.

இதை மேலும் ஊக்குவிக்கவேண்டும். எத்தனாலை தவிர வேறு எதுவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டம் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்காது. எத்தனால் தயாராவது எப்படி: கரும்பு சாறுடன் சாக்ரோமைசிஸ் செர்வேசியே என்ற ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது. இந்த நுண்ணுயிரி தான் எத்தனால் தயாரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. மொலாசஸிஸ் இருந்து 97 சதவீதம் தூய எத்தனால் தயாரிக்கப்படுகிறது. எத்தனால் பயன்பாடு மூலம் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு 25 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை எத்தனாலை கலந்து பயன்படுத்தலாம். அதிகபட்சம் ரூ.30க்கு ஒரு லிட்டர் எத்தனாலை வாங்க முடியும். இந்தியாவில் தற்போது தயாரிக்கப்படும் கார் இஞ்சின்களில் 25 சதவீதம் எத்தனாலை பயன்படுத்தும் வகையிலே வடிவமைக்கப்படுகிறது. இந்தியாவில் சாத்தியமா?: இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் விருதகிரி கூறியதாவது: இந்தியாவில் கரும்பு உற்பத்தி அதிகம். தமிழகத்தில் 2.5 லட்சம் ஏக்கரில் கரும்பு சாகுபடி நடக்கிறது.

சர்க்கரை ஆலைகளில் 20 ஆயிரம்  விவசாயிகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். தமிழக அரசு மொத்தம் 9 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு எத்தனால் தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அங்கு தயாரிக்கப்படும் எத்தனாலை தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு தேவையான எரிசாராயமாக தயாரித்து தரக் கூறி ஆலைகளை அரசு நிர்பந்திக்கிறது. மாற்று எரிபொருளாக எத்தனாலை பயன்படுத்த அரசுக்கு விருப்பம் இல்லை. 313 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. சர்க்கரைக்கு பதிலாக எத்தனால் தயாரிக்கலாம்.

ஒரு கிலோ சர்க்கரைக்கு பதிலாக 11 லிட்டர் எத்தனால் தயாரிக்கலாம். தற்போது 5 சதவீத எத்தனாலுக்கு மத்திய அரசு அனுமதி அளிப்பதாக கூறி உள்ளது. அனுமதி கொடுப்பதன் மூலம் எத்தனாலில் எந்த தீங்கான விஷயங்களும் இல்லை என்பது புலனாகிறது. லட்சக்கணக்கான கரும்பு விவசாயிகளின் நிலையை உணர்ந்து பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக முழுவதுமாக எத்தனாலை மாற்று எரிபொருளாக அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆண்டுக்கு ஒருமுறை கரும்புக்கு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்வதில் மத்திய மாநில அரசுகளிடையே வேறுபாடு உள்ளது. சில மாநிலங்களில் அரசு நடத்தி வரும் சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைக்கவும், சர்க்கரை ஆலைகள் தொய்வின்றி இயங்குவதற்கும் எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிப்பது சாதகமாக அமையும்.

அமெரிக்கா, பிரேசில் முன்னிலை

அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள், சுற்றுசூழலையும், உயர்ந்து வரும் பெட்ரோல் விலையையும் கருத்தில் கொண்டு அதிக அளவில் எத்தனாலை மாற்று எரிபொருளாக பயன்படுத்தி வருகின்றன. ஐரோப்பிய நாடுகளும் எத்தனால் பயன்பாட்டிற்கு மாறி வருகின்றன. அமெரிக்காவில் சோளம் அதிகமாக விளைவதால் சோளத்தில் இருந்தும், பிரேசிலில் கரும்பில் இருந்தும் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. பிரேசிலில் 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எத்தனால் உபயோகத்தில் உள்ளது. தற்போது பிரேசிலில் 85 சதவீதம் எத்தனால் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் கனடா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தி வருகின்றன.

முட்டுக்கட்டை போடுவது யார்?


எத்தனாலை மாற்று எரிபொருளாக அனுமதிக்ககோரி தொடர்ந்து போராடி வரும் தமிழ்நாடு கள் இயக்க தலைவருமான நல்லசாமி கூறியதாவது: பெட்ரோல், டீசலைப்போல் எத்தனாலுக்கு அழிவு இல்லை. பெட்ரோல், டீசல் இறக்குமதியின் மூலம் மட்டும் ஸி8 லட்சம் கோடி மத்திய அரசுக்கு அந்நிய செலாவணி இழப்பு ஏற்படுகிறது.  ராணுவத்திற்கு கூட ஸி2 லட்சம் கோடிதான் செலவழிக்கிறோம். டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் நிலையாக இல்லை. இந்தியாவின் மொத்த பெட்ரோல் தேவையில் 20 சதவீதம் மட்டும் அசாம், மும்பை உள்ளிட்ட இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதி 80 சதவீத பெட்ரோலுக்கு பிற நாடுகளை சார்ந்தே உள்ளோம்.

தமிழகத்தில் 46 சர்க்கரை ஆலைகளும், இந்தியா முழுவதும் 562 ஆலைகளும் உள்ளன. இந்த ஆலைகளின் மூலமாகவோ அல்லது தனியாக ஆலைகளை அமைத்தோ எத்தனால் தயாரிக்கலாம். இதன்மூலம் ஏராளமான விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்து, கிராமப் பொருளாதாரம் மேம்படும். நமது நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டு வளத்தை பயன்படுத்த தயாராக இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் பேரரசுகள் போல் சர்வாதிகாரம் செய்து கொண்டிருக்கின்றன. பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளிடம் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் கமிஷன் அடிப்படையில் பணம் பெற்றுக்கொண்டு எத்தனால் உபயோகத்தை இந்தியாவில் கொண்டு வருவதற்கு முட்டுக்கட்டை போடுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.dinakaran.com   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக